சுட்டுணர்வும் அனுமானங்களும்

திபெத் வஜ்ராயன ஐதீகத்தில் திக்நாகரின் திருவுருவம்

திபெத் வஜ்ராயன ஐதீகத்தில் திக்நாகரின் திருவுருவம்

திக்நாகர்

யோகாசார பௌத்தத்தை முன்மொழிந்த பௌத்த ஆசான்களுள் முக்கியமானவர் திக்நாகர். கி.பி 480இலிருந்து 540 வரை வாழ்ந்ததாக கூறப்படும் திக்நாகரைப் பற்றி நமக்கு கிடைக்கும் வரலாற்றுக் குறிப்புகள் மிகக் சிலவே. பௌத்த தர்க்கத்தை  வடிவமைத்த முன்னோடி என்று அறியப்படும் திக்நாகர் காஞ்சி நகருக்கருகிலிருந்த சிம்ஹவாக்தம் எனும் கிராமத்தில் பிறந்தார் என்று சொல்லப்படுகிறது. அவர் வடமொழியில் இயற்றிய முக்கியமான நூலான  – ‘பிரமாண சமுச்சய’வில்  – திக்நாகர் சுட்டுணர்வு, மொழி மற்றும்  கருத்தளவை  போன்றவைகளை ஆய்கிறார். சுட்டுணர்வெனப்படுவது கருத்துருவாக்கத்திற்கு முன்னதான, விஷயங்களைப் பற்றிய அப்பட்டமான அறிதல் என்றும், எனவே சுட்டுணர்வு கருத்துருவாக்கச் செயலற்றது என்றும் திக்நாகர் குறிப்பிடுகிறார். மாறாக, மொழியானது  கருத்துகளுடன் தொடர்புள்ளது ; ஆனால்  கருத்துகளெல்லாம் ‘அபோஹ’ அல்லது ‘விலக்கல்’ (Exclusion) எனும் செயல்முறை வாயிலாக உருவாக்கப்பட்ட புனைவுகளே. வேறு விதமாக சொன்னால், நீலம்  என்னும் கருத்து எல்லா நீல நிற வஸ்துக்களும் விஷயங்களும் பகிர்ந்து கொள்ளும் ஒரே தன்மையை (நீலத்தன்மை) ஒத்ததாக தோன்றுகிறது.  உண்மையில், ஒவ்வாத எல்லாவற்றையும்  விலக்கி விடுவதன் வாயிலாக எழுப்பப்படும் கற்பிதமே இந்த ஒரே தன்மை. இந்த நிலைப்பாடு கருத்தாக்கங்களின்  (ஆன்மா முதலான! ) இவ்வுலகின் உண்மைப் பொருட்களுடனான  நேரடித் தொடர்பை மறுக்க திக்நாகரை அனுமதித்தது.

மொழி, சுட்டுணர்வு  ஆகியவற்றின் மீதான திக்நாகரின் பார்வைகள்  பின்னால் வந்த பௌத்தர்களினுள்  உயரிய செல்வாக்கை பெற்றன ; ஆயினும் ஆகப்பெரிய தாக்கத்தை அவரின் கருத்தளவை பற்றிய பகுப்பாய்வு ஏற்படுத்தியது.  அவருக்கு முந்தைய இந்திய சிந்தனையாளர்கள் போலல்லாமல் விவாதங்களில்  பயன் படுத்தப்படும் தர்க்கங்களையும், அனுமானங்களின் உள்ளீடான அறிவார்ந்த அமைப்பையும் முனைப்புடன் திக்நாகர் வேறுபடுத்திக் காட்டினார். அனுமானச் சான்றின் (உதாரணத்திற்கு ‘புகை’) மேலும் அது எதை நிருபிப்பதற்காக இருக்கிறதோ (‘நெருப்பு’) அதன் மேலும் கூர்மையாக  கவனம் செலுத்தி, எங்கெல்லாம் இவ்வுறவு பொருந்துகிறது அல்லது தோல்வியுறுகிறது என்பதை ஆராய்ந்து முறையாக வகைப்பாடுகளை வரிசைப்படுத்தினார். இந்த பகுப்பாய்வு அவரது புகழ்பெற்ற உருவாக்கமான ஏற்கத்தக்க சான்றுகளின் மூன்று கூறுகளுக்கும் (trairūpya) ஆதாரமாக அமைகிறது.

பௌத்த தத்துவ வரலாற்றின் முக்கியமான சிந்தனையாளராக திக்நாகர் கருதப்பட்டாலும், அவரின் வழிவந்த தர்மகீர்த்தி (கி.பி 600 – 670) வழங்கிய  பௌத்த தர்க்க சிந்தனையே பின்னாளைய இந்திய, திபெத்திய பௌத்தர்களால் பயிற்சிக்கென ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பௌத்த தர்க்கம்     

பல்வேறு மரபுகளைச் சேர்ந்த இந்திய சிந்தனையாளர்கள் – பௌத்தத்தையும் சேர்த்து – நம்பகமான அறிவு ஆன்ம (இவ்வுரிச்சொல்லை பௌத்தம் ஏற்காது வேறு விஷயம்) விடுதலைக்கு இன்றியமையாதது என்று எண்ணினார்கள். நான்காம் நூற்றாண்டில் இத்தகைய பல சிந்தனையாளர்கள் இவ்வாறான உரையாடல்களில்  இரண்டு கேள்விகளுக்கு விடைகள் தேடும் முகமாக அடிக்கடி சிந்தித்தார்கள் ; அவைகள், (1)  நம்பகமான அறிவு என்பது எதை குறிக்கிறது? (2) நம்பகமான அறிவின் வகைப்பாடுகள் யாவை? இவ்விரண்டு கேள்விகட்கான விடை தேடும் முயற்சிகள் சுட்டுணர்வு, மொழி மற்றும் காரணங்களின் இயல்புகள் பற்றிய நுணுக்கமான உரையாடல்களுக்கு வழி வகுத்தன. பௌத்தர்கள் இவ்வுரையாடல்களில் முக்கியமான பங்களிப்பைக் செய்தார்கள் ; எனினும் அவர்களின் பங்களிப்புகள் ஒரு தனி சிந்தனைப் பிரிவு  என்ற தகுதியைப் பெறவில்லை. அதற்கு பதிலாக, ஒரு தனிப் பாணி பௌத்த தத்துவம் என்று காலப்போக்கில் இந்திய பௌத்த சிந்தனையாளர்களிடையே பலத்த பிராபல்யத்தை எய்தியது. திபெத்திய மரபுகள் இன்றளவும் இதை பௌத்த சாதனாவிற்கு உகந்ததாக பயன் படுத்தி வருகின்றன. இந்த தத்துவ பாணிக்கு பூர்விகமாக இடப்பட்ட பெயரேதும் இல்லாததால், திக்நாகரால் முதலில் அறிமுகம் செய்யப்பட்டு, பின்னர் தர்மகீர்த்தியால் செம்மைப்படுத்தப்பட்ட உருவாக்கங்களை மேற்கத்திய கல்விமான்கள் “பௌத்த தர்க்கம்” என்றழைக்கலாயினர்.

பௌத்த தர்க்கம் பற்றிய முறையான முதல் விளக்கத்தை திக்நாகர் அளித்தார். ஆனால் தர்மகீர்த்தியும் அவரின் சீடர்களும் இந்தியாவெங்கும் பரவி பிரபலமடையும்படியான வடிவத்தை அதற்களித்தனர். நம்பகமான அறிவின் வகைகளை இரண்டு என்று பௌத்த தர்க்கம் வரிசைப் படுத்துகிறது – (1) சுட்டுணர்வு (Perception) – விஷயங்களின் தனித்துவத்தை கண்டுணர்தல் (Particulars)  (2) அனுமானம் (Inference) – பொதுமையை (Universals) அறிதல். தனித்துவம் என்பது முழுக்கவும் விந்தையான, கணநேரத்துக்கு மட்டுமே நீடிக்கக்கூடிய, காரணகாரியங்களுக்குட்பட்டு பயனளிக்கும் உட்பொருள் ; தனித்துவம் உண்மையானதென்று நாம் அறிவோம் ஏனெனில் அவை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ காரணகாரியங்களுக்குட்பட்டவை.   அனுமானத்துக்குள்ளாகும் பொருட்களின் பொதுமை எனப்படுவது பல தனித்துவங்களின் மேல் பொருந்தக் கூடிய கருத்துகள் மட்டுமே.  காரணகாரிய இயைபை பொறுத்தவரை செயல்திறனற்றவை. ஆகையால், பொதுமைகளை நாம் உண்மையெனக் கொண்டாலும் அறிவுணர்ச்சியின் காரணங்களாக அவை என்றும் இருக்கப்போவதில்லை. இதனால், பௌத்த தர்க்கவியலார் தனித்துவங்கள் மட்டுமே உண்மையானவை என்று சொல்கின்றனர் ; பொதுமைகள் உண்மையானவைகளாகத்  தோன்றலாம் ; ஆனால்  கையில் இருக்கும் தறுவாய்க்குப் பொருத்தமற்றவைகளை விலக்குவதன் வாயிலாக நாம் உருவாக்கிய மனப்புனைவுகளே அவை.

தனித்துவங்களுக்கும் பொதுமைகளுக்கும் இடையிலான வேறுபாட்டை புரிந்து கொள்வதற்கு, இந்தப் புள்ளியை • தனித்துவப் புள்ளியென வைத்துக் கொள்வோம். இப்புள்ளி அதைப் போல தோற்றமளிக்கும் இந்த புள்ளியை • போன்று இருக்கிறது மாதிரி தெரியலாம். இந்த ஒரே தன்மை இரண்டு வெவ்வேறு புலன் அனுபவங்களை புள்ளி என்னும் ஒற்றைப் பொதுமையோடு தொடர்பு படுத்துவதாலேயே எழுகிறது. ஒவ்வொரு குறிப்பிட்ட உதாரணமும் காலப்போக்கில் நிலைப்பது மாதிரி தோன்றலாம், ஆனால் தனித்துவங்களின் காலங்கடந்த, வெளிப்படையான ஸ்திரத்தன்மை கூட ஒற்றைப் பொதுமையுடன் தொடர்புபடுத்துவதனால் எழும் பிரமையே. பக்கத்தின் மேலிருக்கும் உணமையான புள்ளியே • சுட்டுணர்வை தோற்றுவிக்கும். புள்ளிகளின் பொதுமை அதை தோற்றுவிக்காது (ஏனெனில் நாம் இதை • புலன்களால் காண முடியும். அது பற்றிய நம் கருத்தை நாம் புலன்களால் காண முடியாது)

பௌத்த தர்க்கவியலார் நம்பகமான அறிவு  பயனுள்ள அறிவுணர்ச்சியாகவும் இருக்க வேண்டுமென்று வாதிடுகின்றனர். பயனுள்ளதென்றால் ஏதாவதோர் இலக்கை அடையத்தக்க வகையில் இருக்க வேண்டும். கண்டிப்பாக சொல்லப்போனால், நம்பகமான அறிவு ஓரளவு குறைபாடுள்ளதாக இருக்க முடியும். உதாரணமாக, அறிவுணர்ச்சி ஒன்று ஒரு விஷயத்தின் மேல் சில குணங்களை தவறாக கற்பிக்கக்  கூடுமென்றாலும் திறம்பட்ட ஒன்றாக இருக்க முடியும். பற்றி எரியும் ஒன்றை தீ என்று சரிவர புலன்களால் அறிந்தாலும், அந்தத் தீ மற்றெல்லா  இடங்களிலும் எரியும் தீ வகையை சார்ந்ததான தீ என்ற தவறான முடிவுக்கு வரலாம்.  இருப்பினும், இவ்வறிவுணர்ச்சி பயனுள்ள இலக்கை அடைவதற்கு இடையூறாக இருப்பதில்லை. கரங்களை கதகதப்பாக்கிக் கொள்வதற்கு நம் முன்னால் எரியும் தீயானது மற்றெல்லா தீயைப் போன்றதே என்று  தவறாக நம்புதல் ஒரு விஷயமே இல்லை.

பௌத்த தர்க்கவியலார் நம்பகமான அறிவு பகுதிக் குறைபாடுள்ளதாக இருக்ககூடுமென்பதை அனுமதித்தாக வேண்டும். ஏனென்றால் பொதுமைகளுக்கு உட்கிடையான சில பண்புகளை ஏற்றுக்கொள்ளாமல் அவர்கள் மொழியைப் பயன்படுத்த வேண்டும். புள்ளி எனும் கருத்து நம்மை எல்லா புள்ளிகளும் ஒரே மாதிரியானவை என்று நம்மை தவறாக நம்ப வைக்கலாம். இருப்பினும் நாம் இந்த கருத்தை இப்பக்கத்தில் உள்ள எல்லா புள்ளிகளைப் (உண்மையில் அவைகள் எல்லாம் தனித்தன்மை வாய்ந்த புள்ளிகளாக இருந்தாலும்) பற்றிப் பேசப் பயன் படுத்திக்கொள்ளலாம். இதேபோல், ‘நபர்’ என்னும் கருத்து ‘குழந்தை’யாக இருந்த என்னை ஒத்திருப்பவனைப் போன்று என்னை  தவறாக நம்ப வைக்கிறது. இருப்பினும், துக்கத்திலாழ்ந்து மோட்சத்தை விழைபவனைப் பற்றிப பேசுவதற்கு “நபரை’ நாம் பயன் படுத்திக் கொள்ளலாம்.

தர்க்கக் கோட்பாடுகளை விவரிக்கும் போது பொதுமைகளைப் பற்றிய விமர்சன அணுகுமுறை பௌத்த தர்க்கவியலாருக்கு பிரச்சினையை உண்டாக்குகிறது. தர்க்கக் கோட்பாடுகள் எனப்படுபவை அனுமானங்கள் பற்றிய விவரமான கோட்பாடுகளே. இங்கு, S என்பதை பொருளாகவும், Pயை பயனிலையாகவும், E என்பதை ஆதாரமாகவும் கொண்டால், “S என்பது P ஏனென்றால் E” என்பது அனுமானத்தின் வடிவமாகும். உதாரணமாக. “ராமு அழியக்கூடியவன் ஏனென்றால் அவன் மானிடன்”.  நன்கு வடிவமைக்கப்பட்ட அனுமானம்   மூன்று உறவுகளைக் கைக்கொண்டிருக்கும். (1) ஆதாரம் பயனிலைக்கு இன்றியமையாததாகும்  (மானிடன் அழியக்கூடியவனாக இருக்க வேண்டும்) (2) ஆதாரத்தின் மறுப்பு பயனிலையின் மறுப்புக்கு வழி வகுக்கும்  (அழிவில்லாதவன் மானிடனல்லாதவனாக இருக்க வேண்டும்) (3) ஆதாரம் பொருளின் தன்மையதாய் இருக்கும்  (ராமு மானிடனே). இந்த அனுமான கோட்பாட்டை கைக்கொள்ளும் பௌத்தர்கள்  இரண்டு குறிப்பிடத்தக்க பிரசினைகளை எதிர்கொள்கிறார்கள். (1) அனுமானத்தின் நிபந்தனைகள் பொதுமைகளாக இருக்க வேண்டும் ; பொதுமைகள்  உண்மையற்றதாகக் கருதப்படுகையில், பொதுமைகளுக்கிடையிலான உறவுமுறையை  எப்படி கணக்கிலெடுத்துக் கொள்வது? (2) “சுத்தமான கற்பனா வஸ்துவொன்று வாஸ்தவத்தில் இல்லை” என்பதை நிருபிக்க அனுமான விதிகளை பயன் படுத்துகையில், சுத்தமான கற்பனா வஸ்து எப்படி அனுமானத்தின் பொருளாக இருக்க முடியும்? “முழுமையான சுயம் என்றெதுவுமில்லை” என்று ஒருவன் நிரூபிக்க விரும்பினால், சுத்தமான கற்பனா விஷயமாகிய ‘முழுமையான சுயம்’ எப்படி பயனிலையை சுமக்க முடியும்? குறிப்பாக, பௌத்த தர்க்கவியலாளர்களின் அனுமான விதிகளை உபயோகிக்கும் மத்யாமக பௌத்தர்களுக்கு இரண்டாவது வினா கடும் பிரச்சினையை ஏற்படுத்துகிறது.

இந்த இடுகையை John Dunne -இன் “திக்நாகர்” மற்றும் “பௌத்த தர்க்கம்” என்ற கருப்பொருள்கட்கான Encyclopedia of Buddhism பதிவுகளின் மொழிபெயர்ப்பென்றெ சொல்லி விடலாம். Thanks Prof. John Dunne.  

Advertisements

3 thoughts on “சுட்டுணர்வும் அனுமானங்களும்

  1. Pingback: ஒரு தாமத பகிர்வு | புத்தம் புதிய காப்பி

  2. Pingback: பவத்திறமறுத்தல் – 1 | இலைகள், மலர்கள், மரங்கள்

  3. Theetharappan

    எனக்கு தெளிவாக புரியவில்லை விரிவாக சொல்லவும்.

    Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s