மணிமேகலா தெய்வமும் ஏதுநிகழ்ச்சியும்

Manimekalai

மணிமேகலையை முதலில் பதிப்பித்த தமிழ் தாத்தா உ வே சா மணிமேகலை நூலைப் படித்த அனுபவத்தை தன்  சுயசரிதை நூல் ‘என் சரித்திரத்தில்’ இவ்வாறு குறிப்பிடுவார் –

“அடுத்தடுத்து மணிமேகலையை படித்து வந்தேன். புலப்படாமல் மயக்கத்தை உண்டாக்கிய பல விஷயங்கள் சிறிது சிறிதாக தெரியலாயின. இனிய எளிய வார்த்தைகளில் பௌத்த சமயக் கருத்துகள் அதில் காணப்பட்டன. அவற்றை படித்து நான் இன்புற்றேன். ரங்காச்சாரியார் கேட்டுக் கேட்டுப் பூரித்துப்போவார். “ஆ! ஆ! என்ன அழகாயிருக்கிறது! மொழிபெயர்ப்பு வார்த்தைகள் எவ்வளவு பொருத்தமாக அமைந்திருக்கின்றன.” என்று சொல்லிச் சொல்லிப் பாராட்டுவார். புத்தரைப் புகழும் இடங்களைப் பல முறை படித்துக் காட்டச் சொல்லி மகிழ்ச்சியடைவார்”

மணிமேகலை ஆராய்ச்சியை தொடங்குவதற்கு முன் பௌத்தம் பற்றி ஒன்றும் அறிந்ததில்லை என்று தமிழ் தாத்தா ‘என் சரித்திரம்’ நூலில் சொல்கிறார் ; பௌத்தத்தை பற்றி மேலும் படித்தறியும் ஆவலை என்னுள் தூண்டிய காரணிகளுள் முக்கியமானது மணிமேகலை காப்பியம். புத்தரைப் போற்றும் வரிகளும் ஆழமான பௌத்த சிந்தனைகளை அழகு தமிழில் விளங்கவைக்கும் இடங்களும், படிமங்களும், சார்புடைத் தோற்றம் போன்ற பௌத்த தத்துவங்களை தெள்ளத் தெளிவாய் விளக்கும் பகுதிகளும் என பௌத்தம் பற்றிய வாசிப்புக்கு மணிமேகலை ஓர் இன்றியமையா நூலாகும்.

+++++

வரலாற்று புத்தர் போதித்ததும் தேரவாத பௌத்தக்கருத்துகளும் நேரடியாக கடவுளர்களின் இருத்தலை மறுக்கவில்லை என்றாலும், அவைகள் நாத்திகத் தன்மை கொண்டவைகளாகவே இருந்தன. மகாயான பௌத்தத்திலோ இப்பிரபஞ்சமெங்கும் வான் புத்தர்களும், ஆண் கடவுளாகவும் பெண் கடவுளாகவும் துதிக்கப்பட்ட போதிசத்வர்களும் நிறைந்திருந்தனர். வரலாற்று புத்தரை கொண்டாடும் வழிமுறையாகவே வான் புத்தர் மற்றும் போதிசத்வர்களின் வழிபாடு கருதப்பட்டது. ஆனால் மற்ற பிற பௌத்த தெய்வங்கள் பௌத்த சமயம் எதிர்கொண்ட கலாசாரங்களிலிருந்து பெறப்பட்டவை – இந்து சமய தெய்வக்கூட்டங்களிலிருந்தும், திபெத், சீனா, தாய்லாந்து போன்ற நாடுகளில் ஏற்கனவே வழங்கி வந்த சமயங்களிலிருந்தும். மற்ற சமயங்களைப் போலன்றி பௌத்தத்தில் கடவுளர்கள் மனிதர்களைப் போல் நிலையற்ற தன்மை கொண்டவர்களே ; மேற்கத்திய பண்பாட்டில் குறிக்கப்படுவது போல் சர்வ சக்தி கொண்ட, படைப்பாற்றல் வாய்ந்த கடவுளர்களாக பௌத்தத்தில் கருதப்படுவதில்லை.

தமிழின் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான – மணிமேகலை காப்பியத்தில் பௌத்த தெய்வங்களும் பூதங்களும் வித்யாதரர்களும் பாத்திரங்களாய் சித்தரிக்கப்படுகின்றனர்.  மணிமேகலா, சம்பாபதி, தீவதிலகை, சிந்தா தேவி, கந்திற்பாவை ஆகிய பெண் தெய்வங்கள் காப்பியம் முழுதும் வந்து போகின்றனர்.

மணிமேகலா தெய்வம் காப்பியத்தில் முக்கியமான கட்டங்களில் தோன்றி கதையை முன்னகர்த்துகிறது. ‘ஏது நிகழ்ச்சி எதிர்ந்துள்ள’ மணிமேகலையின் வாழ்வில் அவள் சம்சார வழியில் புகத்தக்க சம்பவங்கள் நடக்கும் கட்டங்களிலெல்லாம் மணிமேகலா தெய்வம் அவள் முன் தோன்றி துரவுப்பாதையிலேயே அவள் தன பயணத்தை தொடரும் வண்ணம் ஆவன செய்து விடுகிறது  .

காவியத்தின் தொடக்கத்தில் உவவனத்திற்கு மணிமேகலை வந்திருக்கிறாள் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு அவளைச் சந்திக்கத் தேரேறி வருகிறான் உதயகுமாரன். அவன் தேரொலி கேட்டு வருவது உதயகுமாரனே என்றும் அவன் தன்மேல் காதல் உடையவன் என்றும்  மணிமேகலை சுதமதியிடம் கூறுகிறாள். உதயகுமாரனிடமிருந்து தப்பிக்க உவவனத்துப் பளிங்கறையில் புகுந்துகொள்கிறாள் மணிமேகலை. தேடிவந்த மணிமேகலையைக் காணாமல் உவவனத்தில் இருந்த சுதமதியிடம் பேச்சு கொடுக்கிறான் ; மணிமேகலை எத்திறத்தாள்? என்று வினவுகிறான்.

எத்திறத் தாள்நின் இளங்கொடி? உரைஎன
குருகுபெயர்க் குன்றம் கொன்றோன் அன்னநின்
முருகச் செவ்வி முகந்துதன் கண்ணால்
பருகாள் ஆயின்இப் பைந்தொடி நங்கை
ஊழ்தரு தவத்தள் சாப சரத்தி
காமற் கடந்த வாய்மையள் என்றே
தூமலர்க் கூந்தல் சுதமதி உரைப்ப                    (5:12-18)

‘கிரவுஞ்ச மலையை எறிந்த முருகவேளை ஒத்த உன் இளமை அழகினை அவள் தன் கண்ணாலும் பார்க்கமாட்டாள். முன்வினைப் பயனால் தவநெறி புகுந்தவள். தீயோரைச் சுடுகின்ற சாபமாகிய அம்பினை உடையவள். காமனை வென்ற மெய்ம்மையுடையவள்’ என்றெல்லாம் சுதமதி மணிமேகலை குறித்து உதயகுமாரனுக்கு உரைக்கிறாள்.

“மணிமேகலையின் பாட்டி சித்திராபதியின் உதவியால் மணிமேகலையை அடைவேன்’ என்று சொல்லி உதயகுமாரன் அங்கிருந்து அகன்றதும் பளிங்கறையைவிட்டு வெளியே வரும் மணிமேகலை தன் எண்ணவோட்டத்தை வெளிப்படையாகச் சொல்லுகிறாள்.

கற்புத் தான்இலள் நல்தவ உணர்வுஇலள்
வருணக் காப்புஇலள் பொருள்விலை யாட்டிஎன்று
இகழ்ந்தனன் ஆகி நயந்தோன் என்னாது
புதுவோன் பின்றைப் போனதுஎன் நெஞ்சம்
இதுவோ அன்னாய்! காமத்து இயற்கை
இதுவே ஆயின் கெடுகதன் திறம்!என                (5:86-90)

“கற்பில்லாதவள், நல்ல தவவுணர்ச்சி இல்லாதவள், மரபிற்கேற்ற காவலற்றவள், பொருள் கொடுப்பார்க்கு தன்னை விற்கும் விலைமகள் என்றிவ்வாறாக பழித்துரைத்தவனாய் விரும்பினான் என நினைக்காமல் ஏதிலான் பின்னே என்னுடைய உள்ளம் சென்றது. இங்ஙனமுள்ளதோ காமத்தின் இயல்பு! இவ்வாறாயின் இதன் வலி கெடுவதாகுக”  அக்கணம் அங்கே அவள் முன் மணிமேகலா தெய்வம் பிரசன்னமாகிறது.

கடலில் கப்பல் யாத்திரை செய்யும் நல்லோருக்கு இடுக்கண் நேரிடுமாயின், துயர்தீர்த்து உதவிசெய்யும் தெய்வமாக மணிமேகலைத் தெய்வம் வணங்கப்பட்டது. மணிமேகலா தெய்வம்  தனது கடமையைச் செய்துவருவதாகப் பௌத்தர்கள் கருதினார்கள். நடுக்கடலில் கப்பல் உடைந்து நீரில் மூழ்கி இறக்குந் தறுவாயிலிருந்த நல்லோரை இந்தத் தெய்வம் காப்பாற்றிய செய்திகள் பௌத்த நூல்களில் கூறப்பட்டுள்ளன. ‘சங்க ஜாதகம்’ மற்றும் ‘மகாஜனக ஜாதகம்’ என்னும் இரண்டு ஜாதகக் கதைகளில் மணிமேகலா தெய்வம் சித்தரிக்கப்படுகின்றது.

காப்பிய நாயகி மணிமேகலை முன் தோன்றிய மணிமேகலா தெய்வம் அவளை மணிபல்லவத்தீவுக்கு தூக்கிசெல்கிறது. அங்கே தான் மணிமேகலைக்கு அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபி கிடைக்கிறது. அதன் வாயிலாக ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே உயிர்க்கொடை பூண்ட உரவோய் ஆகி கயக்கறு நல்லறம்’ கண்டடைகிறாள் மணிமேகலை.

+++++

பயனுக்கு ஏதுவாகிய வினையின் நிகழ்ச்சி ‘ஏது நிகழ்ச்சியாகும்’ ; சமஸ்கிருதக் சொல் ‘ஹேது’வின் தமிழ்த் திரிபே ‘ஏது’; “ஏது நிகழ்ச்சி யீங்கின் றாதலின்” என்று ஒன்பதாம் காதையிலும்  “ஏது நிகழ்ச்சி யாவும் பலவுள” என்று பனிரெண்டாம் காதையிலும் என பின்னரும் இச்சொல் திரும்ப திரும்ப வருகிறது.

மணிமேகலை காப்பிய ஆராய்ச்சியாளர் Anne E Monius இவ்வாறு குறிப்பிடுகிறார் :-

“Amid the intricacies of narrative detail, a careful examination of the Tamil text reveals an explicit focus ; the gradual arising and manifestation of the circumstances necessary for liberation (signaled by the Tamil term ‘etu’. “cause’) in the life of the main character. Like so many narratives concerning the life of Buddha and his followers, from the tale of Angulimala, the homicidal thief converted to the dharma by the Buddha himself, to the story of Matthakundali whose ‘abundant beneficial root conditions’ (ussannakusalamula) render him ‘ready to receive the teaching’, the Manimekalai tells the story of its central character’s Karmic ripening, of Manimekalai’s growing readiness to hear and truly understand the teachings of the Buddha. The persistent motif of the maturation of beneficial conditions (Tamil, nalletu) not only structures the main narrative but also serves to tie together in a thematically significant way both the narrative and philosphical portions of the text”

மயக்கத்திலிருந்து விழித்து, மணிமேகலையைக் காணாது பதறும் சுதமதியின் முன்னம் பிரசன்னமாகி மணிமேகலா தெய்வம் இங்ஙனம் தெரிவிக்கிறாள் :-

“ஆதிசான் முனிவன் அறவழிப் படூஉம்
ஏது முதிர்ந்த திளங்கொடிக் காதலின்
விஞ்சையிற் பெயர்த்துநின் விளங்கிழை தன்னையோர்
வஞ்சமில் மணிபால் லவத்திடை வைத்தேன்”   (7- 19-22)

“புத்த தேவனின் அறநெறியிற் செல்லும் ஏது நிகழ்ச்சி மணிமேகலைக்கு முற்றினதாதலின் நின் மெல்லியலை என் வித்தையினாலே பெயர்த்து மணிபல்லவத்தின் கண் வைத்துள்ளேன்”

தெய்வங்களெல்லாம் தானே அருளளிக்க இயலாதன ; அவை அருள் செய்ய “beneficial root conditions” முதிர்ந்திருப்பது அவசியம் ; இது அவரவர் உற்ற கர்மபலனைப் பொருத்தது என்கிற பௌத்த நெறியை சிறப்புற நிகழ்த்திக் காட்டுவது மணிமேகலை ஒப்பற்ற பௌத்த காவியம் என்பதற்கு ஒரு சான்று.

Advertisements

2 thoughts on “மணிமேகலா தெய்வமும் ஏதுநிகழ்ச்சியும்

  1. Pingback: ஒரு தாமத பகிர்வு | புத்தம் புதிய காப்பி

  2. Pingback: பவத்திறமறுத்தல் – 1 | இலைகள், மலர்கள், மரங்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s