பத்மசம்பவர் யார்?

குளிர் காதுக்குள் நுழையாத படி ஸ்வெட்டருக்கு மேல் போட்டுக் கொண்ட ஜம்பரின் நீளமான காலர்களால் முடிக்கொண்டேன் ; காற்றில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருந்ததால் மூச்சை இழுத்து இழுத்து விட வேண்டியதாயிற்று.  கல் படிகளில் மெதுவாக ஏறி ஹெமிஸ் பௌத்த மடாலயத்தின் வாசலை அடைந்தோம். லடாக்கின் லெஹ் நகரிலிருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு குன்றின் மேலிருக்கிறது ஹெமிஸ் மடாலயம். 11ம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. பதினேழாம் நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்டது.

இந்தியாவின் பல பிரதேசங்களிலும் இருந்து வந்த சுற்றுலாப்பயணிகள் இதுவரை அறிந்திராத உருவங்களில் புத்தரையும் பெயர் தெரியா தெய்வங்களையும் பார்த்துக் கொண்டிருந்தனர். மடாலயத்துக்கு நடுவே பரந்து விரிந்த முற்றத்தில் சுற்றுலா பயணிகள் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். நாய் ஒன்று ‘லொள் லொள்’ என்று புகைப்படம் எடுப்போரை நோக்கி  விடாது குரைத்துக்கொண்டிருந்தது. பல அடுக்குகளில் குளிராடைகள் அணிந்திருந்த இரு இளைஞர்கள் ஓடிப்பிடித்து விளையாடுபவர்கள் போல் ஓடிக்கொண்டிருந்தனர்.

மடாலயத்தின் மூன்றாம் மட்டத்தில் அந்த புகழ்பெற்ற விக்கிரகம் இருந்தது. காவியுடை கட்டி சாந்தவுருவான புத்தபிக்ஷுவின் உருவமில்லை. அந்தக் கால ராஜாக்கள்  போன்றதொரு கம்பீர  உருவம். ஐந்து இதழ் கொண்ட தாமரை தொப்பி ; குறுந்தாடி ; வளைந்த சிறு மீசை ; கோபமான ஊடுருவும் பார்வை ; வெண்ணிற வைர உள்ளாடை ; அதன் மேல் அடுக்குகளாக செந்நிற அங்கி, அடர் நீல நிற சொக்காய், பொன்னிற மலர்கள் பொறித்த காவி நிற சால்வை மற்றும் ஜரிகை பூ வேலை செய்த அரக்கு நிற மேலாடை. வலது கையில் ஐந்து முனை வஜ்ரமும்  வலது கையில் அமிர்தம் நிரம்பி வழியும் கபால கோப்பையையும் இருக்கின்றன. கபாலக்கோப்பைக்குள் நீண்ட ஆயுளைக் குறிக்கும் குவளை இருக்கிறது. கபாலகோப்பை அழகான வரமளிக்கும் மரம் இருக்கும் மூடியால் மூடப்பட்டிருக்கிறது. அவரிடம் தடியொன்றும் இருக்கிறது ; அதனுள்  மூன்று கொய்யப்பட்ட தலைகள் சொருகப்பட்டுள்ளன. தடியின் உச்சி பாகத்தை திரிசூலமொன்று அலங்கரிக்கிறது.

பத்மசம்பவரைப் பற்றி என் துணைவியாருக்கு சொல்லிக்கொண்டிருந்தேன். என்னை ‘டூரிஸ்ட் கைடு’ என்று நினைத்துக்கொண்டு ஒரு பெண்மணி என்னருகில் வந்துவிட்டார். மேற்கு வங்கத்திலிருந்து வந்திருக்கிறார். “பௌத்தம் என்றாலே அமைதி, சாந்தம் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன் ; ஆனால் இவ்விக்கிரகத்தை பார்த்தால் உக்கிரமாக இருக்கிறதே?” என்று கேட்டார். மருந்தும் மாந்திரிகமுமாய் இருந்த ‘பான்’ கலாசார விளைநிலமான திபெத்தில் எட்டாம் நூற்றாண்டில் நிலவிய சூழல், பௌத்த சமயத்தை தழுவிய மன்னர் த்ரிசாங் டெட்சென் மக்களுக்கு நடுவில் பௌத்தத்தை பரவலாக்குவதற்காக இந்தியாவிலிருந்து சில மடாதிபதிகளை அழைத்தது,  அழைக்கப்பட்டவர்களுல்  ஒருவர் பத்மசம்பவர் ( அப்படி அழைக்கப்பட்ட புகழ்பெற்ற இன்னொருவர் சாந்தரக்ஷிதர் ), திபெத்தில் முதல் பௌத்த மடாலயமான  சம்யே மடாலயத்தை கட்டுவதற்கு பத்மசம்பவர் உதவியது போன்ற வரலாற்று குறிப்புகளை மட்டும் அவரிடம் பகிர்ந்து கொண்டேன். “பௌத்தம் பல நாடுகளில் தழைத்தததன் காரணம் அந்நாடுகளில்  ஏற்கெனவே இருந்த நம்பிக்கைகளை ஒட்டி வடிவமைத்துக் கொண்டதுதான்” என்றும் அவரிடம் சொன்னேன். “புத்தர் அமானுஷ்ய விடயங்களில் கவனம் செலுத்தாதவராகவே அல்லவா இருந்தார்?” என்று கேட்டார் அந்தப் பெண்மணி. Skilful Means பற்றி சிறிது அவருக்கு விளக்கினேன். ( புத்த பூர்ணிமா )

அப்பெண்மணிக்கு தோன்றிய சந்தேகம் எனக்கும் தோன்றியதுண்டு. சாக்கியமுனி புத்தரின் வாழ்க்கை வரலாற்றை படிக்கையில் புனைவு சார்ந்த தொன்மம் மிகமிகக் குறைவாகவே படிக்கக் கிடைக்கிறது. இரண்டாம் புத்தர் என்று வஜ்ராயன புத்தர்களால்  நம்பப்படும்  பத்மசம்பவரின் பல்வேறு வாழ்க்கை வரலாறுகளைப்  படிக்கையில் ஒரு சூப்பர் ஹீரோவின் காமிக்ஸ் கதை படிக்கிற அனுபவம் கிடைக்கிறது.

பத்மசம்பவர் எட்டு வயதினனாக ஒரு தாமரைப்பூவிலிருந்து உயிர் பெறுகிறார். உத்தியானா (இன்றைய பாகிஸ்தானின் கைபர்-பக்துன்க்வா மாநிலத்தில்  இருக்கும் ஸ்வாட் பள்ளத்தாக்கு ) என்னும் ராச்சியத்தின் மன்னன் தன் மகனாக தத்தெடுத்துக் கொள்கிறான்.  மன்னனாக விரும்பாததால் மந்திரி ஒருவரின் மகனை பத்மசம்பவர் கொன்று விடுகிறார். கொலைகாரர்களை நாடு கடத்தும் வழக்கம் இருந்தமையால் பத்மசம்பவர் நாடு கடத்தப்படுகிறார். இந்தியாவுக்கு வந்து சில பௌத்த யோகிகளிடமிருந்து இரகசிய தாந்த்ரீக பயற்சிகளை கற்றுக்கொள்கிறார். சஹோர் (இன்றைய இமாச்சலப்பிரதேசம்) இராச்சியத்தில் ஒரு குகையில் அந்நாட்டு இளவரசி மண்டரவையுடன் இரகசிய தாந்த்ரீக பயிற்சிகளில் ஈடுபடுகிறார். சஹோர் மன்னனுக்கு விஷயம் தெரியவர பத்மசம்பவரை தீமூட்டி எரித்துவிடுகிறார்கள். தீ எரிந்து முடிந்து புகை நடுவிலிருந்து ஒரு  காயமுமில்லாமல் எழுந்து வருகிறார் பத்மசம்பவர். அதிசயத்தைக் கண்ட மன்னன் இளவரசி  மண்டரவையை பத்மசம்பவருக்கே மணமுடித்துவிடுகிறார். இந்த அதிசயம்  நிகழ்ந்த இடம் இமாசலப்பிரதேசத்தில் உள்ள ரேவல்சார் ஏரி என்று சொல்லப்படுகிறது. அவ்வேரிக்கு நடுவில் பத்மசம்பவரின் பிரம்மாண்ட சிலையொன்று இருக்கிறது.

பின்னர் பத்மசம்பவர் திபெத் செல்கிறார் ; சம்யே பௌத்த மடாலயத்தை மன்னன் டெட்சென் கட்டத்துவங்குகிறான். நாடெங்கும் பெரியம்மை தொற்று நோய் பரவி  ஆயிரக்கணக்கானோர் இறக்கின்றனர். பௌத்த தர்மத்தின் பரவலை தடுக்க அசுரப்படைகளின் முயற்சிதான் பெரியம்மை தாக்குதல் என்பதாக பத்மசம்பவர் புரிந்து கொண்டு தாந்த்ரீக பயிற்சிகளை மேற்கொண்டு அசுரர்களை கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்துவிடுகிறார். கி பி 774இல் பத்மசம்பவர் திபெத்தை விட்டு வெளியேறியதாக வரலாறு சொல்கிறது. மன்னனின் மனைவியையும் (தகினி யெஷெ ட்சொக்யால் ) அவர் துணையாக கூட அழைத்துச்  சென்றதாக மரபு சொல்கிறது.

நேபால் சொல்கிறார் ; அங்கு இளவரசி சாக்ய தேவியை துணையாக சேர்த்துக்கொள்கிறார்.

ஒருமுறை யெஷெ ட்சொக்யாலை பறக்கும் பெண் புலியாக  மாற்றி அதன் மேல் உட்கார்ந்து பூடான் பறந்து செல்கிறார். அங்கு குன்றிலிருக்கும் ஒரு குகையில்  (பூடானின் முக்கியமான கோயில் – புலிக்கூண்டு என்று பொருள்படும் – takhtsang என்ற கோயில் வளாகம் அங்கிருக்கிறது ) மூன்று வருடம், மூன்று மாதம், மூன்று நாள், மூன்று மணி நேரம் இருந்து தாந்த்ரீக பயிற்சிகள் செய்கிறார். பூடான் நாட்டில் பௌத்த சமயத்தை நிறுவுவதில் பத்மசம்பவரின் பங்கு முக்கியமானது.  அங்கே பும்தாங் மாநிலத்தில் அரசனால்  அவமதிக்கப்பட்ட துர்த்தேவதை ஒன்றினை அடக்கி அமைதியுறச்  செய்கிறார். அருகிருக்கும் க்ஹுர்ஜே-லாக்ஹாங் கோயிலின் பக்கத்தில் உள்ள குகைசுவருக்குள்  பத்மசம்பவரின் உடற்தடத்தை இன்றும் காணலாம்.

இது போன்று நூற்றுக்கணக்கான தொன்மக்கதைகள் ; கற்பனை, உண்மை என்ற வித்தியாசங்கள் இல்லாமல் பிரபஞ்ச இருமையின் ஒன்றுமற்ற தன்மையை கோடிட்டு காட்டும் வெவ்வேறு நிகழ்வுகளை கூறும் நூற்றுக்கணக்கான பத்மசம்பவர் வாழ்க்கை வரலாற்று நூல்கள்  திபெத்திய மொழியில் இருக்கின்றன. தகினி யெஷெ ட்சொக்யாலின் நூல் இவற்றுள் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

வஜ்ராயன மரபில் அமிதபா புத்தாவின் சாக்கியமுனி புத்தரின் அம்சங்களை ஒன்றிணைத்த அவதாரமாக பத்மசம்பவர் வணங்கப்படுகிறார்.

டெர்மா எனப்படுபவை மிக்கியமான திபெத்திய பௌத்த மற்றும் பான் கொள்கைகளின் சாவியாகும். இச்சாவிகள் பத்மசம்பவராலும் அவருடைய தகினிகளாலும் (துணைவிகள்) எட்டாம் நூற்றாண்டில் இரகசியமாக மறைத்துவைக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது ; அவைகள் க்டேர்ஸ்டான்கள் என்னும் எதிர்கால நிபுணர்களால் மீண்டும் தேடி எடுக்கப்படும் என்றும் இந்த க்டேர்ஸ்டான்கள் பத்மசம்பவரின் 25 சீடர்களின் மறு பிறப்பாக  இருப்பார்கள் என்பதும் ஐதீகம். டெர்மாக்கள் தாந்த்ரீக இலக்கியத்தின் அங்கங்கள்.

தருக்க மரபு  வளர்ச்சி பெற்ற பின்-உபநிடத காலத்தில் வாழ்ந்த சாக்கியமுனி புத்தர் தருக்கங்கள் வாயிலாக பௌத்தம் வளர்த்தார். திபெத்தில் பத்மசம்பவர் பான் கலாசார பயிற்சிகளுடன் பௌத்தக் கொள்கைகளை  இணைத்து வஜ்ராயன வடிவத்தை தந்தார் எனலாம்.

பனிமூட்டத்துக்கு நடுவே ரேவல்சார் ஏரியினடுவில் 123 அடி பத்மசம்பவர்

Advertisements

4 thoughts on “பத்மசம்பவர் யார்?

  1. Pingback: ஒரு தாமத பகிர்வு | புத்தம் புதிய காப்பி

  2. Pingback: பவத்திறமறுத்தல் – 1 | இலைகள், மலர்கள், மரங்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s