புத்த பூர்ணிமா

Happy Wesak

மே நான்காம் தேதி வரப்போகிற புத்த பூர்ணிமா தினத்தன்று பௌத்தம் பற்றிய கட்டுரையொன்று எழுதிப்  பதிவிட வேண்டுமென்று ஒரு வாரமாக ஆசையாக இருந்தது. தொடர்ச்சியாகப் பயணத்தில் இருந்ததால் எதுவும் தயார் செய்ய முடியவில்லை. சனிக்கிழமையன்று அலுவலகப் பணி நிமித்தமாக தற்செயலாக ஔரங்காபாத் செல்லும் சந்தர்ப்பம் அமைந்த போது அஜந்தா குகை ஓவியங்கள் நம்மை அழைக்கின்றனவோ என்று தோன்றியது. ஆனால் அஜந்தா செல்ல முடியவில்லை. நான்கு மணி விமானத்தில் தில்லி திரும்ப வேண்டியிருந்ததால் நேரம் போதாது என்று சொன்னார்கள்.

விமானத்தில் என் பக்கத்தில் ஜப்பானியர் ஒருவர் அமர்ந்தார். Pure Land Buddhism பற்றியோ Nichiren Daishonin Buddhism பற்றியோ பேச்சு துவங்குமா என்று பார்த்தேன். இனங்கண்டு கொள்ள முடியாததொரு கோட்டோவியத்தை முகப்பாய் கொண்டிருந்த புத்தகத்துள் தன்னை புதைத்துகொண்டார் அவர். மேலிருந்து கீழாய் சித்திர எழுத்துக்கள்! கவிதை புத்தகமோ? சில நிமிடங்களில் அஜந்தா குகை ஓவியம் – பத்மபாணி – அச்சிட்ட தபாலட்டையை படித்துக்கொண்டிருந்த பக்கத்தில் வைத்து புத்தகத்தை மூடி தூக்கத்திலாழ்ந்தார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை. பௌத்தம் குறித்த கட்டுரைகளை வாசித்தேன். அவற்றிலிருந்து உத்வேகமுற்று ஏதேனும் பொறி கிளம்பலாம். Expedient Means என்ற கலைச்சொல் பற்றி பல கட்டுரைகளை இணையத்தில் வாசித்தேன். ஆங்கிலேய தத்துவவாதி ஜான் ஹிக்-கின் கட்டுரை மிகவும் ஈர்த்தது. (http://www.johnhick.org.uk/article9.html) அக்கட்டுரையை மொழிபெயர்க்கலாம்  என்ற எண்ணம் தோன்றிற்று. ஆனால் Expedient Means அல்லது Skilful Means – என்னும் கலைச்சொல்லை எப்படி தமிழ்ப்படுத்துவது என்று தெரியவில்லை. இச்சொல்லின் தமிழிணையை  பிடித்துவிட்டால் கட்டுரையை மொழிபெயர்ப்பது எளிதாகிவிடும்.

ஃபேஸ் புக்கில் கீழ்க்கண்ட நிலைத்தகவலை இட்டேன் :

“Expedient Means” அல்லது “Skilful Means” என்ற பௌத்த கலைச்சொல்லுக்கிணையான தமிழ்ச்சொல் என்ன? வடமொழியில் Upaya-Kausalya என்று சொல்வார்கள்.”

என்ன பதில் வரும் என்று பார்க்கலாம் !  ஆதி பௌத்தத்தில் Skilful Means – இன் மூலம் பற்றி பீட்டர் நெல்சன் எழுதிய கட்டுரையும் முக்கியமான கட்டுரையாகப் பட்டது. (http://www.buddhanet.net/skilful-means.htm)  பீட்டர் நெல்சன் கட்டுரையில் தெவிஜ்ஜ சுத்தம் பற்றி குறிப்பிட்டிருந்தார். புத்தரை அணுகி சந்தேகம் கேட்ட இரு வைதீக பிராமணர்களுக்கு வைதீக கலைச் சொற்களை பயன் படுத்தி ஐயம் போக்கிய சுத்தம் அது. திக்க நிகாயத்தில் வருவது. பிரம்மம், பிரம்ம நிலை, பிரம்மத்துடன் இணைதல் போன்ற கருத்தியல்களை பௌத்தம் ஏற்கவில்லை என்றாலும் தெவிஜ்ஜ சுத்தத்தில் வைதீக கலைச்சொற்களை புத்தர் பயன் படுத்தியதை Skilful Means என்று சொல்கிறார் பீட்டர் நெல்சன்.

Rhys davids மொழிபெயர்த்த தெவிஜ்ஜ சுத்தத்தை இணையத்தில் தேடினேன். கிடைத்தது. (http://www.bps.lk/olib/wh/wh057.pdf) . படிக்க சுவையாக இருந்தது. கதைகளும் உவமைகளும் நிறைந்த உரையாடல் வாயிலாக இரண்டு வைதீக பிராமணர்களுக்கு நான்கு பிரம்ம விகாரங்களை புத்தர் விவரிக்கிறார்.

ஃபேஸ் புக்கில் இட்ட நிலைத்தகவலுக்கு ஒரு பதிலும் இல்லை. தமிழ் தெரியாத பஞ்சாபி நண்பர் ஒருவர் மட்டும் ‘லைக்’ போட்டிருந்தார்.

எதுவும் எழுதத் தோணவில்லை. வெளியில் சென்று உலாவி வரலாம் என்று கிளம்பினேன். காலனிக்கு வெளியே பகுஜன் சமாஜ் கட்சியினர் பந்தல் போட்டிருந்தார்கள். புத்த பூர்ணிமா கொண்டாட்ட நிகழ்ச்சிகள். இளைஞர் ஒருவர் வினாடிவினா நடத்திக் கொண்டிருந்தார்.

“புத்தர் எங்கு பிறந்தார்?”

பந்தலில் இருந்த சிலர் லும்பினி என்று கத்தினார்கள்.

“தவறான விடை”

ஒரு கிழவர் எழுந்து நின்று “வேறு எங்கு பிறந்தார்?” என்று கேட்டார்.

“புத்த கயா’

கிழவருக்கு கோபம் வந்து விட்டது. பல்லை இறுக்கிக் கொண்டு “கயாவிலா புத்தர் பிறந்தார்?” என்று கேட்டார்.

“அய்யா, சித்தார்த்த கௌதமர் எங்கு பிறந்தார் என்று நான் கேட்கவில்லை. அப்படி கேட்டிருந்தால் லும்பினி என்ற விடை சரியாக இருந்திருக்கும். சித்தார்த்த கௌதமர் புத்தரானது கயாவில் தானே! எனவே புத்தகயாவில்  தானே புத்தர் பிறந்தார்”

கிழவரின் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. வினாடி வினா நடத்திக் கொண்டிருந்த இளைஞருக்கருகில் சென்று ஏதோ சொன்னார். இளைஞர் கிழவர் சொல்வதைக் கேட்டு தலையசைத்தார். வினாடிவினா நிகழ்ச்சி பாதியிலேயே நின்று விட்டது. பிறகு இளைஞர் உரையாட ஆரம்பித்தார். மகன் இறந்த சோகம் தாளமுடியாமல் தாயொருத்தி புத்தபகவானிடம் சென்று அவனை உயிர்ப்பிக்க வேண்டுமாறு கேட்ட கதையை சொன்னார். கிராமத்தில் இருந்த வீடுகளுக்குக சென்று எள் வாங்கி வர அனுப்பினார் புத்தர். ஒரு நிபந்தனையும் இட்டார். எந்த வீட்டில் ஒரு சாவும் விழுந்ததில்லையோ அந்த வீட்டில் இருந்துதான் எள் வாங்க வேண்டும். இறப்பைக் கண்டிராத வீடொன்றும் அத்தாய்க்கு கிடைக்கவேயில்லை.

வீட்டுக்கு திரும்பிய பிறகு என் வாசிப்பு மீண்டும் தொடர்ந்தது. “புத்தர் போதித்த தர்மமே skilful means தானோ என்ற சிந்தனை மகாயான பௌத்தர்களை பெரிதும் பாதித்தது” என்று ஜான் ஹிக் தன கட்டுரையில் சொல்லியிருப்பார். மகாயான சூத்திரங்களில் முக்கியமானதாகக் கருதப்படும் சத்தர்ம புண்டரீக சூத்திரத்தில் (Lotus Sutra) பகவான் ஒரு கதை சொல்வார். மிக அழகான கதை.

ஒரு செல்வந்தரின் மாளிகையின் ஒரு பகுதி தீப்பற்றி எரிகிறது ; விரைவில் முழு மாளிகையும் எரியப்போகும் அபாயம் இருக்கிறது. அவருடைய குழந்தைகளோ வீடு எரியப்போகும் அபாயம் பற்றிக் கவலை இல்லாமல் தந்தை வாங்கிக் கொடுத்திருந்த பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். தந்தையார் எவ்வளவு அழைத்தும் அவர்கள் தம் அறையிலிருந்து வெளியே வர மாட்டேன் என்கிறார்கள். தந்தையார் அப்போது மூன்று குழந்தைகளுக்கும் – ஆடுகளால் இழுக்கப்படும் வண்டி, காளைகளால் இழுக்கப்படும் வண்டி, மானால் இழுக்கப்படும் வண்டி – என மூன்று வண்டிகள் வாங்கி வந்திருப்பதாகவும் அவைகள் வெளியே நிற்பதாகவும் சொல்கிறார். சீக்கிரம் குழந்தைகள் மாளிகையை விட்டு வெளியே வந்தால் அவர்களுக்கு அந்த வண்டிகள் பரிசாகக் கிடைக்கும் என்றும் சொல்கிறார். குழந்தைகள் ஆர்வத்துடன் வெளியே ஓடி வருகின்றன. ஆபத்திலிருந்தும் தப்புகின்றன. சில நாட்கள் கழித்து செல்வந்தர் தன் குழந்தைகளுக்கு அணிகலன் பூட்டிய வெண்ணிற காளையால் இழுக்கப்படும் பெரியதொரு வாகனத்தை பரிசாக அளித்தார்.

தந்தையார் சொன்னது பொய் என்றாலும் குழந்தைகளை ஆபத்திலிருந்து மீட்பதற்காகவே அந்தப் பொய்யைக் சொன்னதால் அவர் தவறு செய்யவில்லை என்றே கொள்ளப்பட வேண்டும் என்று புத்தர் சத்தர்ம புண்டரீக  சூத்திரத்தில் அறிவிக்கிறார்.  தந்தையார் தெரிவிக்கும் மூன்று வாகனங்கள் பௌத்தத்தின் மூன்று வழிகளை குறிப்பதாகக் கொள்ளலாம். – ஸ்ராவகர்களின் வாகனம், பிரத்யேக புத்தர்களின் வாகனம் மற்றும் போதிசத்வர்களின் வாகனம். குழந்தைகளுக்கு கிடைத்தது போதிசத்வர்களின் வாகனம் – மகாயானம்.

சுவையான கட்டுரைகள், உவமைகள், கதைகள் எல்லாம் படித்தும் என்ன எழுதுவது என்ற தெளிவு கிடைக்கவில்லை.

ஃபேஸ் புக்கில் இட்ட நிலைத்தகவலுக்கு ஒரு பதிலும் இல்லை. Skilful Means – ஐ விட்டுவிட வேண்டியது தான்!

வேறு ஏதாவது படிப்போம் என்று சாந்தி தேவர் எழுதிய மகாயான நூலான “போதிசார்யாவதாரா” வின் ஆங்கில மொழிபெயர்ப்பை கையில் எடுத்தேன். சாம்பலா புத்தக நிறுவனத்தின் வெளியீடு. புனித தலாய் லாமா இந்நூலுக்கு முகவுரை எழுதியிருக்கிறார். ஏழாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட நூல். நாகர்ஜுனரின் மத்யாமிகா பள்ளியைக் சேர்ந்தவர் சாந்தி தேவர். இன்றைய குஜராத் மாநிலம் சௌராஷ்டிரா பிராந்தியத்தில் பிறந்தவர். நாலந்தாவில் பயின்றவர். போதிசித்தம் என்ற கருத்தை விரித்துக் கூறும் நூல். மத்யாமிக தத்துவத்தின் அடிப்படையில் இந்நூலின் கருத்துகள் அமைந்திருக்கின்றன.

பத்து நிமிடங்கள் படித்திருப்பேன். கண்கள் சுழன்று கொண்டு வந்தன. தூங்கும் முன்னர் மீண்டுமொருமுறை ஃபேஸ் புக்கை பார்த்தேன். பனிரெண்டு மணியாகிவிட்டது. பூட்டானில் இருக்கும் ஒரு புத்த பிட்சு நண்பர் புத்த பூர்ணிமாவுக்கு என் டைம் லைனில் வாழ்த்து சொல்லியிருந்தார். அவருக்கு நன்றி சொல்லி மறு வாழ்த்து தெரிவித்தேன். வாட்ஸ்-அப்பில் என் குடும்பக்குழுமத்தில் “Sukho Buddhanam Uppado – Joyful is the birth of the Buddhas – HAPPY WESAK DAY”  என்று வாழ்த்துச்  செய்தியை இட்டேன்.

அடுத்த நாள் எழுந்து கணினியின் வெண் திரைக்கு முன்னால் உட்கார்ந்து எழுத முயன்றேன். கணினித் திரை போன்று என் சிந்தனையும்  வெறுமையாக இருந்தது. கைத்தொலைபேசியில் வாட்ஸ் – அப்பில் என் உறவினர்கள் என் வாழ்த்துக்கு சில எதிர்வினைகள் இட்டிருந்தார்கள்.

“வேஸாக் நாள் என்பது புத்த பூர்ணிமாவைக் குறிக்கிறதா?”

“சித்ரா பௌர்ணமி நேற்று ; புத்த பூர்ணிமா இன்று ; என்று நிஜமான பௌர்ணமி?”

“என்னப்பா…பௌத்தத்துக்கு கன்வர்ட் ஆகலாம்னு இருக்கியா?”

மீண்டும் கணினித்திரையை நோக்கி என் பார்வையை திருப்பினேன் ; நிறைய எழுதலாம் ; எழுதுவதற்கு நிறைய இருக்கிறது என்ற நிச்சயவுணர்வு புத்த பூர்ணிமா தினக்காலையில் என்னுள்ளில் நிறைந்தது.

Advertisements

4 thoughts on “புத்த பூர்ணிமா

  1. Pingback: பத்மசம்பவர் யார்? | இலைகள், மலர்கள், மரங்கள்

  2. Pingback: இரு வாகனங்கள் | இலைகள், மலர்கள், மரங்கள்

  3. Pingback: லோட்டஸ் சூத்ரா – ஓர் அறிமுகம் | இலைகள், மலர்கள், மரங்கள்

  4. Pingback: ஒரு தாமத பகிர்வு | புத்தம் புதிய காப்பி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s