கொலைகாரனுக்கும் கொலையுண்டவனுக்கும் பொதுவான மாயை – தேவ்தத் பட்டநாயக்

பாண்டவர்கள் யுதிஷ்டிரனின் ராஜசூய யாகத்தின் முடிவில் சிறப்பு மரியாதை அளிக்க கிருஷ்ணனை அழைத்தனர். இதனால் தனக்கு அவமானம் ஏற்பட்டுவிட்டதாக நினைத்த சிசுபாலன், கிருஷ்ணனைத் திட்ட ஆரம்பித்தான். எல்லாரும் கோபப்பட்டார்கள், ஆனால் கிருஷ்ணன் கோபப்படவில்லை. அத்தனையையும் அவன் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான். இருந்தாலும், நூறாவது வசைக்குப் பின், கிருஷ்ணன் கூர்மையான தன் சக்கரத்தை வீசியெறிந்து சிசுபாலன் தலையைத் துண்டித்தான். காரணம், மன்னிப்பின் எல்லையைக் கடந்து விட்டான் சிசுபாலன்.
 
சார்லி ஹெப்டோ, பகடிகளைத் தாங்கி வரும் பிரஞ்சு மொழி வார இதழ். அது கார்ட்டூன்களைப் பதிப்பித்தது- ஆத்திரமூட்டும் கேலிச்சித்திரங்கள். அவற்றை இதுவரை நான் பார்த்தது இல்லை. அங்கு பணிபுரிபவர்களை யாரும் கொல்லாமல் இருந்திருந்தால், நான் பார்த்திருக்கவே மாட்டேன். ஆனால் அதற்குப்பின் சார்லி ஓர் ஆளாகியது, பலியாள் ஆனது, கருத்துச் சுதந்திரத்துக்கான போராட்டத் தியாகியானது. கொலையைக் கண்டித்து நாமும் ஹீரோக்கள் ஆனோம். நாங்களும் சார்லிக்கள்தான் என்று பிரகடனப்படுத்திக் கொண்டு பாரிஸில் பல லட்சக்கணக்கானவர்கள் ஊர்வலம் போனார்கள்.
 
சார்லியின் கொலைகாரர்களோடு தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளூம் இடத்தில் ஊர்வலம் நடக்குமா? அது அனுமதிக்கப்படுமா? யார் அந்தக் கொலைகாரர்கள்? முஸ்லிம்களா, கெட்ட முஸ்லிம்களா, பைத்தியக்கார முஸ்லிம்களா, இசுலாமியர்களாக அல்லாத முஸ்லிம்களா? பெஷாவரின் பள்ளிச் சிறுவர்கள் மீதான தாக்குதல் போலவே, இதையும் தலையங்கங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. பெஷாவரில் பலியானவர்கள் கொலை செய்யத் தூண்டவில்லை; பெற்றோர்கள் வேண்டுமானால் செய்திருக்கலாம்.
 
சார்லி விஷயத்தில் தூண்டுதல் இதுதான்: தங்கள் இறைத்தூதர் அவமதிக்கப்பட்டதாக, எனவே இசுலாமும் அவமதிக்கப்பட்டதாக, அவர்கள் நினைத்தார்கள். எனினும் சார்லியோ, “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்!” என்ற கோஷத்துக்குப் பேர் போன மண்ணின் சட்டங்களுக்கு உட்பட்டுதான் செயல்பட்டுக் கொண்டிருந்தது. இசுலாமும் சகோதரத்துவம் பேசுகிறது (அரபி மொழியில், உம்மா), சமத்துவமும் பேசுகிறது. ஆனால் அந்த அளவுக்கு சுதந்திரத்தைப் பேசுவதில்லை. இசுலாம் என்றால் கீழ்ப்படிதல் என்றுதான் பொருள்- அமைதியை ஏற்படுத்தும் இறைவனின் சொல்லுக்குக் கீழ்ப்படிதல்.
 
அளவைக்கு உட்பட்டதைக் கையாளுதல்
 
சமத்துவத்திலும், தங்களுக்கே உரிய வகையிலான சுதந்திரத்திலும் நம்பிக்கை கொண்டிருக்கும் இந்த இரு சகோதரர்கள் ஒருவரையொருவர் காயப்படுத்திக் கொள்வது என்று தீர்மானித்தார்கள். ஒருவர் உணர்வுகளையும், மற்றவர் உடல்களையும். உணர்வுகளின் மீது நிகழ்த்தப்படும் வன்முறைக்கு அளவைகள் கிடையாது. உடல்கள் மீதான வன்முறையைக் கணக்கெடுக்க முடியும். அதனால் பின்னது நிரூபிக்கப்படக்கூடிய குற்றமாகிறது; அதிலும் குறிப்பாக, நம்பிக்கையை மட்டுமே சார்ந்த, சமயம் போன்ற ஒன்றை நோக்கி ஏவப்படும் உணர்வுபூர்வமான வன்முறை விஷயத்தில், உடல்களின் மீதான வன்முறையே பெரியதொரு குற்றமாகிறது.
 
இதுதான் பிரச்சினை: கணக்கெடுத்தல்- அறிவியலின், புறவயப்பட்ட பார்வையின் கால்கோள். 
 
எதை நம்மால் கணக்கெடுக்க முடியுமோ, அதை நம்மால் கையாள முடியும். ஆனால், அளவைக்கு அப்பாற்பட்டதை என்ன செய்ய? அது முக்கியமா என்ன? உணர்வுகளை அளந்து பார்க்க முடியாது. மனதை அளந்து பார்க்க முடியாது, எனவேதான் தீவிர அறிவியலாளர்கள் உளவியலையும் இயங்குமுறை அறிவியலையும் போலி அறிவியல்கள் என்று சொல்கின்றனர். கடவுளை அளந்து பார்க்க முடியாது. எனவே, விஞ்ஞானியைப் பொறுத்தவரை, கடவுள் மெய்யல்ல, நம்பிக்கை என்று வேண்டுமானால் சொல்லலாம். இது முஸ்லிம்களுக்கு எரிச்சலாக இருக்கிறது, அவர்களைப் பொறுத்தவரை கடவுள் இருப்பது உண்மை. அளந்து பார்க்கக்கூடிய உண்மையாக இல்லாமல் இருக்கலாம், ஆனாலும்கூட உண்மைதான். இது அகவயப்பட்ட உண்மை. என் உண்மை. அது முக்கியமா இல்லையா?  
 
அகவயப்பட்ட உண்மையை நாம் எங்கு வைத்து பேச முடியும்: மெய் என்றா புனைவு என்றா? சிலர் தங்களுக்கு என்று “கருத்துச் சுதந்திரம்” என்பதை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள், வேறு சிலர் தங்களுக்கு என்று, “ஒரு கடவுள், மெய்யான ஒரே கடவுள்” எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இரண்டுமே அகவயப்பட்ட உண்மைகள். இவை நம் யதார்த்தத்துக்கு வடிவம் தருகின்றன. இவை முக்கியமாக இருக்கின்றன. ஆனால் நமக்குத்தான் இவற்றை எங்கு வைத்துப் புரிந்து கொள்வது என்பது தெரியாது. ஏன் என்றால், இவற்றை அளந்து பார்க்க முடியாது.  
 
சார்லியின் கேலிச்சித்திரங்கள் முஸ்லிம் சமுதாயத்தில் ஏற்படுத்திய காயத்தை நம்மால் கணக்கெடுக்க முடியாது. முஸ்லிம் சமுதாயத்தின் கூருணர்வுகள், அல்லது மிகையான கூருணர்வுகள் எவ்வளவு என்று நம்மால் மதிப்பிட முடியாது. ஆனால், கொலைகாரர்களின் செயல்களால் ஏற்பட்ட விளைவுகளைக் கணக்கெடுக்க முடியும். எனவே, நாம் சுலபமாய் வன்முறையைக் கண்டனம் செய்ய முடியும். காயப்படுத்தியது, கோபப்படுத்தியது, அவமானப்படுத்தியது என்பதே ஒரு சிலருக்கு துப்பாக்கிகளைத் தூக்கப் போதுமானதாக இருந்தது என்பது அளந்து பார்க்க முடியாத அனுமானம், நம்பிக்கை. பகுத்தறிவு பேசும் நாத்திகனுக்கு நம்பிக்கை என்பது கேலிக்குரிய விஷயம். 
 
புத்திஜீவி தன் சொற்களால் காயப்படுத்த முடியும். போர்வீரன் தன் ஆயுதங்களால் காயப்படுத்த முடியும். முன்னது ஏற்புடையதாய் உள்ள, ஏன் ஊக்குவிப்பும் அளிக்கப்படும், உலகில் நாம் வாழ்கிறோம்,  பின்னது அப்படியல்ல. உலகளாவிய கிராமத்தில் பாவிக்கப்படும் நவ-பார்ப்பனியம் இது. சிந்திக்கத் தெரிந்தவர்களும் பேசத் தெரிந்தவர்களும், அடிப்பவர்களையும் கொலை செய்பவர்களையும்விட உயர்ந்தவர்கள்- சொல்லம்புகளால் ஏற்பட்ட காயங்கள் ஆழமானவையாகவும், நீண்டகால தாக்கம் கொண்டவையாகவும், ஆறாவடுவாய் எக்காலத்துக்கும் புண்படுத்துபவையாகவும் இருந்தாலும் இது இப்படிதான். அகிம்சையைக் கடைபிடித்த சாது காந்தி, இவ்வாறே மூர்க்க வன்முறையாளன் கோட்சேவுக்கு எதிராய் நிறுத்தப்படுகிறார். புத்திஜீவியான எனக்கு, கோபத்தைத் தூண்டும் உரிமை இருக்கிறது; ஆனால் வன்முறையை மட்டுமே அறிந்த, நாகரிகமற்ற உனக்கு, கோபப்படும் உரிமை கிடையாது, உனக்குத் தெரிந்த ஒரே வழியில் பதில் சொல்லும் உரிமை கிடையாது. அப்படியே உனக்கு கோபம் வந்தாலும், நீ என் மொழியில்தான் பேச வேண்டும், உன் மொழியில் அல்ல, மூளையைக் கொண்டு, உடல் வலுவைக் கொண்டல்ல- ஏனெனில் மூளையே உயர்ந்தது. புத்திஜீவி பிராமணன் நான்தான் விதிகளை வரைகிறேன். உனக்கு இது புரிகிறதா?
 
அகிம்சையே புதுக்கடவுள், உண்மையான ஒரே கடவுள். நாம் வன்முறை என்று சொல்லும்போது, உடலையும் உடைமையையும் தாக்கும் நாகரிகமற்றவனின் வன்முறையை மட்டுமே பேசுகிறோம். புத்திஜீவிகளாய் உள்ள உயர்ந்தோர் ஏற்படுத்தும் மனக்காயங்கள் வன்முறையாய்க் கருதப்படுவதில்லை. எனவே  புத்திஜீவிகள் என்ற வகையில் இந்து சமயத்தைத் திரைப்படங்களில் (ராஜ்குமார் ஹிரானியும் ஆமிர் கானும் எடுத்த பிகே), புத்தகங்களில் (வெண்டி டோனிகரின் “இந்துகள்: ஒரு மாற்று வரலாறு) கேலி செய்ய நாம் அனுமதிக்கப்பட்டிருக்கிறோம். ஆனால், திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டுமென்றோ, புத்தகங்களைக் கூழாக்க வேண்டுமென்றோ போராடுபவர்கள் மூர்க்கர்கள், நாகரிகமற்றவர்கள், வன்முறையாளர்கள், குடிமைச் சமூகச் சொல்லாடலின் எதிரிகள். சார்லி கொலைகாரர்கள் அளவுக்கு மோசமில்லை, ஆனால் இவர்களும் அந்தப் பாதையில் போவதாகத்தான் தெரிகிறது.
 
சிந்தனையாளனின் இடம்
 
விவாதங்களை, ரத்தம் சிந்தாத மூர்க்கப் போர்களாய், உளப் போர்களாய்க் காண நாம் மறுக்கிறோம். பட்டிமன்றங்களைப் போர்க்களங்களாக நாம் பார்ப்பதில்லை. உளச் சித்திரவதை என்பது மெய்யல்ல, அது ஒரு கருத்துருவாக்கம் மட்டுமே என்று சொல்லப்படுகிறது, அதை மதிப்பிட முடியாது, எனவே நிருபிக்க முடியாது. தன் மனைவியின் மனதைச் சித்திரவதைக்கு உள்ளாக்கும் கணவனைக் கைது செய்யவே முடியாது; மனைவியை அடிக்கும் கணவனைப் பிடித்து விடலாம். நாம்  பின்னதைப் புரிந்துணர்வோடு பார்க்கிறோம், ஆனால் முன்னதைப் பொருட்படுத்துவதில்லை (அவள் ஓவர் சென்சிடிவாக இருக்கிறாள் என்று சமாதானம் சொல்கிறோம்). உளச்சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட மனைவி தன் கணவனைக் கொலை செய்தால், அவளுக்குதான் சிறைத்தண்டனை அளிப்போம், கணவனுக்கு அல்ல. அவளது குற்றத்தை நிருபிக்க முடியும், அவனது குற்றத்துக்கு எதுவும் செய்ய முடியாது.
 
சிந்தனையாளன் வினையாற்றுவதில்லை என்று சொல்கிறோம். எனவே, சிந்தனையாளனால் தூண்டப்பட்ட கொலைகள் கண்டுகொள்ளப்படாமல் போகின்றன. உடலின் மொழி மட்டுமே அறிந்த நாகரிகமற்றவன் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படும்போது, சிந்தனையாளன்- வன்முறைக்கு வித்திட்டவன்-, சிரித்துக் கொண்டிருக்கிறான். உள்ளத்தின் மீது தொடுக்கப்பட்ட போர் இரக்கமற்ற துல்லியத்துடன் தொடர்கிறது.
 
மாயை என்பதன் வேர்ச்சொல் சமஸ்கிருதத்தில் மா, மதிப்பிடு, என்பதாகும். நாம் அதை காட்சிப்பிழை அல்லது பிரமை என்று புரிந்து கொள்கிறோம். ஆனால், சரியாகச் சொன்னால், மதிப்பீடுகளை கொண்டு கட்டமைக்கப்பட்ட உலகம் என்றுதான் பொருட்படும். இவ்வாறாகவே, அறிவியல் புலம், பகுத்தறிவின் பாற்பட்ட புலம், மதிப்பீட்டின் அடிப்படையில் அமைந்த உலகம், மாயை. இது நல்லதுமில்லை, கெட்டதுமில்லை. இது ஒரு தீர்ப்பல்ல. இது ஓர் அவதானிப்பு. அளவைகளால் அமைந்த உலகம் தனக்குப் புலப்படுவதை மட்டுமே கூர்ந்து நோக்கும், புலன்களுக்கு அப்பாற்பட்டவற்றைக் காணும் பார்வையை இழக்கும். மதிப்பீட்டு உண்மையை முழுமையற்ற மெய்யெனக் கருதாமல், முழுமெய்யெனக் கொள்ளும். 
 
இறைத்தூதரைத் தார்மிக அறவுணர்வுடன் கெக்கலித்துக் கேலி செய்பவர்கள் மாயையில் இருக்கின்றனர். அதைத் தீவிரமாக எடுத்துக் கொண்டு கோபப்படுபவர்களும் மாயையில் இருக்கின்றனர். கொலைகாரன் மாயையில் இருக்கிறான், கொலையுண்டவனும் மாயையில் இருக்கிறான். இவர்களில் ஒருவனை பலியுண்டவனாகவும் மற்றவனைக் கொடியவனாகவும் கருதுபவர்களும் மாயையில் இருக்கின்றனர். நாம் அனைவரும் நம்மால் உருவாக்கப்பட்ட யதார்த்தங்களில் கட்டுண்டிருக்கிறோம்; சிலர், அளவைகள் அடிப்படையிலும் சிலர் மதிப்பீடுகளைப் பொருட்படுத்தாமலும் வாழ்கிறோம். ஒவ்வொருவரும் பிறரை நிராகரிப்பதில் ஆவலாய் இருக்கிறோம், அவர்களை ஒன்றுமில்லாமல் செய்யப் பார்க்கிறோம்: மாற்றான் நாகரிகமற்றவனாக, கல்வி கற்பிக்கப்படவேண்டியவனாக இருக்கிறான். கொலை செய்யப்பட வேண்டிய புத்திஜீவியாகவும் மாற்றான் இருக்கிறான்.
 
அடிப்படையில், மாயையே நம்மை மதிப்பிடச் செய்கிறது. ஏனெனில், நாம் அளவிடும்போது, எது பெரிது எது சிறிது என்றும் எது மேல் எது கீழ் என்றும் எது சரி எது தவறு என்றும் எது முக்கியம் எது முக்கியமில்லை என்றும் யோசிக்கிறோம். வெவ்வேறு அளவைகள் வெவ்வேறு மதிப்பீடுகளுக்குக கொண்டு செல்கின்றன. தான் ஒரு ஹீரோ என்றும் தியாகி என்றும் வெண்டி டோனிகர் நம்புகிறார், தன் எழுத்தைக் கொண்டு சபால்டர்ன் இந்தியனுக்காக அவர் போராடுவதாய் நம்புகிறார். அவர் சனாதன தர்மத்தை வேண்டுமென்றே பிழையாய் புரிந்துகொள்வதை எதிர்க்கும் ஹீரோ என்று தீனநாத் பத்ரா நம்புகிறார். பிகே தடை செய்யப்பட வேண்டும் என்று கோரும் உரிமை தனக்கு உள்ளது என்று பாபா ராம்தேவ் எண்ணுகிறார். நாம் நினைத்த மாதிரியே, கருத்துச் சுதந்திரம், பகுத்தறிவு என்று பதில் சொல்லிக் கொண்டு, அந்தத் திரைப்படத்தைத் தயாரித்தவர்கள் சிரித்தபடியே சில்லறையை எண்ணிக் கொண்டிருக்கின்றனர். எல்லாரும் தத்தம் மாயையில் சரியாகவே இருக்கின்றனர்.
 
ஒவ்வொரு வினைக்கும் விளைவுண்டு. விளைவுகள் நல்லவையாக இருக்கலாம், அல்லது தீயவையாக இருக்கலாம் – ஆனால்  பின்னோக்கியே அதை அறிய முடியும். புத்தொளிக் காலமே காலனியக் காலமாகவும் இருந்தது. உலக யுத்தங்கள் முதல் உறைபனி யுத்தங்கள் வரை, இருபதாம் நூற்றாண்டின் மிகக் கொடூரமான யுத்தங்கள், சமயச் சார்பற்றவை. வன்முறையற்ற சிந்தனை, வன்முறையற்ற சொற்களாய் வெளிப்பட்டு வன்முறைச் செயலுக்குக் காரணமாகிறது. கனியை அளவிட முடியும், விதையை அளந்தறிய முடியாது. வித்து வேறு கனி வேறு என்றும், எண்ணம் வேறு செயல் வேறு என்றும் பிரித்துப் பார்ப்பது வினையையும் எதிர்வினையையும் பிரித்துப் பார்ப்பது போன்றது. இதன் விளைவாய் தவறான புரிதலுக்கு வருகிறோம், தவறான தீர்வுகளை அளிக்கிறோம். கொலைகாரன் கருத்தை அழிப்பதில்லை. கருத்து மேலும் பல கொலைகாரர்களை உருவாக்குகிறது. 
 
வழியோடு போவது வழியோடே வரும். வன்முறைக்கு எதிரான வெஞ்சினம் கேலிச்சித்திரங்களுக்கு எதிரான வெஞ்சினத்தை வளர்க்கிறது. இந்து தத்துவம் (இந்துத்வ தத்துவமல்ல), இதை கர்மவினை என்று அழைக்கிறது. வன்முறையற்ற வெஞ்சினத்தையோ வன்முறைப் போராட்டங்களையோ கைவிட்டு இந்தச் சுழலை உடைக்கும் விருப்பம் நமக்கில்லை. மாயை, கர்மவினை போன்ற கருத்துருவாக்கங்கள் செயலூக்கத்தைப் பாழாக்குவதால் மேலைமயமாக்கப்பட்ட மனதை அவை கோபப்படுத்துகின்றன: தங்கள் அளவீட்டுக் கருவிகளைக் கொண்டு இந்த உலகைக் காப்பாற்றுவதில் தீர்மானமாக இருப்பவர்கள், மானுட நிலை குறித்த இந்த நுட்பமான அவதானிப்பை, ‘விதி விட்ட வழி என்று இருத்தல்’ என நிராகரிக்கின்றனர். 
 
முன்னொரு பிறவியில் சிசுபாலன், வைகுந்தக் கதவுகளின் காவலன் ஜெயனாக இருந்தான். சனகாதி ரிஷிகளை அனுமதிக்க மறுத்ததால் கோபித்து, அவன் விஷ்ணுவை விட்டு தொலைவில், பூமியில் பிறக்கக் கடவான், என்று சபித்தனர் ரிஷிகள். தன் வேலையைத்தான் செய்ததாக வாதாடினான் காவல்கார ஜெயன். ஆனால் சாபம் விலகவில்லை, ஜெயன் சிசுபாலனாய்ப் பிறந்தான். விஷ்ணு அவனுக்கு மோட்சம் அளிப்பதாக வாக்கு கொடுத்திருந்தார், தான் பூமியை விட்டுச் சீக்கிரம் செல்ல வேண்டுமென்ற நோக்கத்தில் சிசுபாலன், வைதலைக் கொண்டே வாழ்த்தும் விபரீத பக்தியில் ஈடுபட்டான். எனவே அவன் கிருஷ்ணனை ஏசினான், கிருஷ்ணன்தான் விஷ்ணு என்பதையும் தன் ஏச்சு கிருஷ்ணனை வினையாற்றச் செய்யும் என்பதையும் அவன் நன்றாகவே அறிந்திருந்தான். மன்னிப்புக்கு ஓர் எல்லையுண்டு. ஆனால் அன்புக்கு எல்லைகள் இருக்க முடியாது.
 
 
(Devdutt Pattanaik writes and lectures on mythology in modern times. Visit: www.devdutt.com )
 

தமிழாக்கம் – நட்பாஸ்

6 Comments

  1. seshadri says:

    Action on the Cartoon Magazine is correct. before typing this too much blog pl spend time to what they did wrong (most of the photos are in avl in google). they crossed the limit. as you said krishna waited for 100 times. similar that so many cartoon came with mohd critize. they are not like non sensible like tamil people , they bounce back their way.

    Seshan

    1. natbas says:

      “வன்முறைக்கு எதிரான வெஞ்சினம் கேலிச்சித்திரங்களுக்கு எதிரான வெஞ்சினத்தை வளர்க்கிறது. இந்து தத்துவம் (இந்துத்வ தத்துவமல்ல), இதை கர்மவினை என்று அழைக்கிறது. வன்முறையற்ற வெஞ்சினத்தையோ வன்முறைப் போராட்டங்களையோ கைவிட்டு இந்தச் சுழலை உடைக்கும் விருப்பம் நமக்கில்லை”, என்று சொல்வதுதான் கட்டுரையின் நோக்கம். யாரும் யாரையும் சொல்லாலோ, செயலாலோ காயப்படுத்த வேண்டாம், சினம் தவிர்ப்போம் என்று கேட்டுக் கொள்கிறார் கட்டுரையாசிரியர், தயவு செய்து அவரது கருத்தைத் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம்.

  2. natbas says:

    திரு சேஷாத்ரி,

    “மன்னிப்புக்கு ஓர் எல்லையுண்டு. ஆனால் அன்புக்கு எல்லைகள் இருக்க முடியாது.”

    என்றுதான் கட்டுரை முடிகிறது. மன்னிப்புக்கு எல்லை உண்டு என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு அன்புக்கு எல்லைகள் இருக்க முடியாது என்பதும் உண்மைதான். கிருஷ்ணன், சிசுபாலனைக் கொன்றது, தன்னைச் சேர வேண்டும் என்பதில் அவனுக்கு இருக்கும் ஆவலை அங்கீகரித்து, அன்பால்தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். கோபத்தால் அல்ல.

    இதை ஒரு முன்னுதாரணமாகச் சுட்டி, மற்றொரு உயிரைப் பறிக்க நாம் கடவுளும் அல்ல. அதை நியாயப்படுத்தவே முடியாது.

  3. சொல்லால் உண்டான மனக் காயங்கள் ஆற்றப்பட முடியாதவையல்ல. காலப்போக்கில் மனக்காயம் ஆறிவிட்டாலும் ஒருவித ஈகோதான் ஒரு செயற்கை மன வலியை தந்து கொண்டிருக்கிறது. சரியான மனப்பக்குவம் உள்ளவர்கள் இந்த ஈகோவை வெற்றியடைய முடியும் என்றே நினைக்கிறேன். மத அடிப்படைவாதிகள் பொங்கி எழுவது மனக் காயத்தால் அல்ல. இந்த ஈகோவினால்தான்.

    சார்லி ஹெப்டோவையும் பீகே திரைப்படத்தையும் சமமாக நோக்குவது கண்டிக்கத்தக்கது. சார்லியின் சில கார்ட்டூன்களைப் பார்த்தேன். அவர்கள் மிகவும் அநாகரீகமாக எல்லை மீறியிருக்கிறார்கள் என்பது நாத்திகனான எனக்கே தெரிகிறது. அவர்களது கார்ட்டூனில் இருப்பது பகுத்தறிவு இல்லை, இஸ்லாம் மதத்தின் மேல் காழ்ப்பு மட்டுமே. இருந்தாலும், அதற்கு பதிலாக கொலை செய்வது காட்டுமிராண்டித்தனமானது, ஏற்றுக்கொள்ள முடியாதது. ஜனநாயக நாடான ப்ரான்ஸில், முஸ்லிம்கள் ஜனநாயக ரீதியாக இதை எதிர்த்திருக்க வேண்டும்.

    இது கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது என பலர் கூறுவதற்கு காரணம், சார்லி செய்தது சரியென்ற வாதம் அல்ல. மாறாக, இந்தக் கொலைகளை நாம் ஏற்றுக்கொண்டால், அது மத அடிப்படைவாதத்தின் காட்டுமிராண்டித்தனத்தை ஜனநாயகரீதியாக ஏற்றுக்கொள்வது போலாகும். எதிர்காலத்தில் ஒருவேளை குரான் மனிதனால் எழுதப்பட்டது என்பதற்கான அறிவியல்ரீதியான வரலாற்று ஆதாரம் கிடைக்கிறது என வைத்துக்கொள்வோம். இந்தக் கொலையை நாம் ஏற்றுக்கொண்டால், அந்த அறிவியல் கட்டுரையை எழுதியவர் வீடுபுகுந்து, அல்லது அதைப் பதிப்பித்த பதிப்பகத்தில் புகுந்து இவர்கள் கொலை செய்வதை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.

    PK கூறும் கருத்துக்கள் அநாகரீகமானவை அல்ல. தற்காலத்தின் மத வியாபரத்தை சரியாக, தைரியமாக எடுத்துக்கூறுகிறது. ஏன் அதை தடை செய்ய வேண்டும்? வேண்டுமானால், இயக்குனருக்கும் ஒரு மத இயக்கத்தின் தலைவருக்கும் பொதுவிவாதம் வைத்துப் பார்க்கலாம். அது ஜனநாயக ரீதியான தீர்வு.

    ஜனநாயகத்தின் அடிப்படையே இந்தக் கருத்து சுதந்திரத்தில்தான் இருக்கிறது அல்லவா? உங்கள் கருத்தை கூறுங்கள், அதற்கு எதிர்க்கருத்தை இன்னொருவர் கூறுவார். பொதுவில் கருத்துக்களால் சண்டையிடுங்கள். அந்த விஷயத்தைப் பற்றி ஒன்றுமே அறியாத ஒருவன் உங்கள் இருவரின் கருத்தையும் படித்தால், அவனுக்கு இருண்டு தரப்பு நியாயங்களும் புரிவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

    //ஆனால் அன்புக்கு எல்லைகள் இருக்க முடியாது.//

    மிகவும் உண்மை.. ஒரு முதலியவாதியும் கம்யூனிஸ்டும் நண்பர்களாக இருக்க முடியாதா? அன்பு செலுத்திக்கொள்ள முடியாதா? இருவேறு கொள்கைகள் கொண்ட விஞ்ஞானிகள் நெருங்கிய நண்பர்களாக இருந்த வரலாற்றை அறிந்திருக்கிறோம். அடுத்தவரது கருத்துக்கு மதிப்பளித்து, புரிந்துகொள்ள முயன்று, நம் கருத்தையும் நாசூக்காக முன்வைக்க முடியுமானால் அது அன்புக்கு தடையாகாது. நாத்திகனான எனக்கும் முஸ்லிமான என் நண்பனுக்கும் இடையே அன்பு இருக்கிறது. ஆனால், நாம்-அவர்கள் என பிரித்து, கொலைவெறியுடன் அலையும் இப்படியான வெறியர்களிடம் அன்பு செலுத்த முடியுமா?

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.