சிறப்புப் பதிவு : மாதவன் நாராயணன்
‘யாமிருக்க பயமேன்?’ என்ற ஆறுதற்சொற்களுக்கு மேல் வேலேந்தி நிற்கும் முருகன் படம் தொங்கும் தமிழ்நாட்டில் இன்று எழுத்தாளர் பெருமாள் முருகன் ‘மதம்’ பிடித்த யானைகளின் கால்களில் சிக்கித் தவிக்கிறார் ; ஓடி மறைகிறார்!
நக்கீரனும் பொய்யாமொழிப்புலவனும் வாழ்ந்த பூமி! நாத்திகமும் ஓங்கி, சைவமும் தழைத்து, .ராமானுஜர் வகுத்த வழியில் வைணவம் சாதிச் சுவர்களையெல்லாம் தாண்டி அந்தணரையும் மற்ற வகுப்பினரையும் இணைத்துச் செழித்த நாடு !
மீசைக்கார பாரதி சாதிகள் இல்லையென்று உரைத்தான்! தமிழும் இனிமையும் இடையறாமல் சேர்ந்தே இருந்தது – தினத்தந்தி மொழியில் சொல்லப்போனால் -தெரிந்ததே! ஆனால் வாய்மைக்கும் பட்டிமன்றத்துக்கும் பெயர் பெற்ற நாடு தமிழ் நாடு என்பதையும் நினைவில் வைத்துக் கொண்டால் பெருமை ஓங்கும். பண்பாடும், நவீன எண்ணங்களும் சேர்ந்து செழிக்கும் நாள் எப்போது வரும்?
நந்தனார் பாடலை பாடிப் போற்றும் தமிழ்நாட்டில் பகுத்தறிவும் போஷாக்குடன் வளர்ந்திருக்கிறது.
இதே தருணத்தில் சாதிக் கொடுமையின் புது அவதாரத்தையும் கொஞ்சம் கவனித்தாக வேண்டியிருக்கிறது. மேல்சாதி, கீழ் சாதி என்று சொன்னது போய், இடைச் சாதிச் சக்திகளாக மூன்றாவது சாதிக் குழுக்கள் எண்ணிக்கையின் பலத்தில் ஜனநாயகத்திற்கொரு வக்கிர வடிவம் தந்து புதுப் புட்டியில் பழைய கள்ளை ஊற்றி போதை பெருக்கெடுத்து ஆடுகின்றன. தாகூர் சொன்ன விசாலமான நோக்கு என்று வருமோ?
குறுகிய மனப்பான்மை என்றால் என்ன என்று கேள்வி கேட்ட மரபு தமிழருடையது. சமீப காலத்திய இறக்குமதி செய்யப்பட்ட சித்தாந்தங்கள் தமிழ் நாட்டிற்கு அவசியமா என்ற கேள்வி எழுகிறது. சிவபெருமானிடமே வாதாடிய நக்கீரன் தோன்றிய தமிழ்நாட்டில் ஒர் எழுத்தாளரை இங்ஙனம் இம்சைப்படுத்துவது நியாயமா? நகைச்சுவை நாயகர் வடிவேலு பாணியில் சொன்னால் : இது தேவையா?