ஆபுத்திரன் – 4

புண்ணியராசன் தன் பெருந்தேவியோடு சோலைக்கு வந்தான். அங்கிருந்த தருமசாவகன் என்னும் முனிவனை வணங்கி அறமும் பாவமும் அநித்தியப் பொருட்களின் வகைகளும் நித்தியப் பொருட்களின் வகைகளும், பிறப்பு முதலான துக்கமும், செல்கின்ற உயிர் புகுகின்ற இடமும், பேதைமை முதலிய பன்னிரெண்டின் தோற்றமும், அவற்றிலிருந்து நீங்கும் வழிவகையும், ஆசிரியன் புத்தனின் இயல்பும் தருமசாவகனிடமிருந்து அமைதி பெறக் கேட்டுக் கொண்டான். “மகளிருள் தனக்கிணையில்லாத பேரழ்குடையாளாய் கண்களில் இயங்கியும் காமத்துடன் இயங்காமலும் அழகிய கையிற் பிச்சைப் பாத்திரத்தைக் கொண்டு அறவுரை கேட்கின்ற இம்மங்கை யார்? என்று தருமசாவகனை வினவினான். “சம்புத் தீவில் இவளுக்கிணையானவர் யாரும் இலர் ; கிள்ளி வளவனோடு நட்பு கொள்ளுதலை வேண்டி கலத்தில் ஏறி காவிரியின் பக்கத்தில் இருக்கும் புகார் நகரை அடைந்த போது நான் சந்தித்த அறவண முனிவன் ஒரு பெண்ணின் பிறப்பைப் பற்றி எனக்கு சொன்னான் என்று நான் உனக்கு நான் முன்னரே சொல்லியிருக்கிறேன்” என்று தருமசாவகன் சொன்னான்.

“அவளே இந்நங்கை ; அப்பெரிய நகரிலிருந்து இங்கி வந்திருக்கிறாள்” என்று தரும சாவகன் சொல்லவும் இடையில் மணிமேகலை பேச ஆரம்பித்தாள். “உனது கையிலிருந்த அமுதசுரபியே என் கையில் வந்தடைந்தது. மிகப் பெரும் செல்வத்தினால் நீ மயங்கியிருக்கிறாய் என்று நீ அறிந்திருக்க மாட்டாய். உனது முற்பிறப்பினைப் பற்றி நீ அறிந்திலாயேனும் பசுவின் வயிற்றில் உதித்த இப்பிறப்பினையுப் பற்றியும் நீ அறியாமல் இருக்கிறாயே! மணிபல்லவம் சென்று புத்தபீடிகையை வலம் வந்தாலன்றி பற்றுதலை ஏற்படுத்தும் பிறவியின் தன்மையை நீ அறிவது சாத்தியமில்லை. நீ அங்கு வருவாயாக!” என்று மணங்கமழ் மாலையணிந்த மன்னவன் முன்னர்க் கூறி இளங்கொடியான மணிமேகலை வானோடு எழுந்தாள்.

கதிரவன் மேற்றிசையில் சென்று வீழ்வதற்கு முன்னர் மேகங்களில் இருந்து இறங்கி வளைந்த அலைகள் உலாவுகின்ற பூக்கள் மணம் வீசுகின்ற அடைகரையெங்குஞ் சென்று மணிபல்லவத்தை வலம் வந்து பற்றற்ற பெருந்தவனாம் புத்தனது பீடிகையை மணிமேகலைக் கண்டு வணங்கினாள். அவ்வழகிய தூய பீடிகையின் குற்றமற்ற சாட்சியானது தனது பிறப்பை அவளுக்கு அறிவித்தது. காயங்கரை என்னும் பேராற்றின் அடைகரையிலுள்ள வஞ்சனையற்ற பெருந்தவனாகிய பிரமதருமன் திருவடிகளை வணங்கி, அறங்கேட்டு அடியிணை பணிந்து துதிக்கலானாள் மணிமேகலை.

“அரசனுடன் அவந்தி நகரஞ் சென்றடைவோர் அனைவர்க்கும் விலங்கினமும் நரகவாசிகளும் பேய்களுமாகத் தோற்றுவிக்கும் ; கலக்கம் தரும் துன்பத்தைத் தரும் தீவினைகளை நீக்கினால் வானவரும் மக்களும் பிரமரும் ஆவீர். ஆதலால் நல்வினைகளை மறவாது பாதுகாத்திடுவீர். பேரறிவுடையோனும் அனைத்தையும் வழுவின்றி உணர்ந்தோனுமாகிய ஒருவன் உலகினை உய்விக்க உதித்தருள்வான். அந்நாளிலே அவனுடைய அறமொழிகளைக் கேட்டோரையன்றி துன்பந்தரும் பிறவியினின்று தப்புவோர் எவரும் இல்லை ; ஆதலால் பிறரால் தடுக்கமுடியாத கூற்றுவன் வருவதற்கு முன்னரே அறம்புரியுமாறு விளங்க எடுத்துரைத்து நாவே குறுந்தடியாக வாயாகிய பறையை அறைந்தீர். அவ்வற மொழிகளைக் கேட்டு யாமும் நும் திருவடிகளை வணங்கித் துதிக்க நீர் எங்கட்குத் துன்பம் தரும் மொழிகளைக் கூறியருளினீர் ஆகலின் புத்தன் தோன்றுதற்கு முன்னரே இப்பீடிகையை இந்திரன் இங்கு வைத்த காரணமும் பெருமை மிக்க இப்பீடிகை யாக்கையினின்றும் உயிர் நீங்கி மறைந்த எனது முற்பிறப்பினை உணர்த்துதற்கு காரணமும் என்னவென்று யான் வணங்குவது! எல்லாமறிந்த இறைவனைத் தவிர வேறெவரையும் அப்பீடிகை தன்மீது தாங்காது ; அப்பீடம் அறவோன் அடியிணையைத் தாங்கிய பின்னரேயன்றி இந்திரன் அதனை வணங்கான். அவ்விண்ணவன் புத்தனை அறிந்து கொள்ளும் பொருட்டு இயற்றி பிறந்தோர்களுடைய பழம் பிறப்பின் செய்தியை இத்தரும பீடிகை உணர்த்துக என ஆணை தந்தனன் ஆகலின் நின் பிறவியையும் மயக்கமறக்காட்டும் என்று எடுத்துக் கூறியதாகிய அன்றுரைத்த நுமது வாய்மொழி எனக்கு இன்று கூறினாற்போன்றது”

இவ்வாறு துதித்த வண்ணம் மணிமேகலை இப்படியிருக்க, புண்ணியராசனும் அச்சோலையை விட்டு நகரத்துள் சென்றான். தாதை முனிவனாகவும் தாய் பசுவாகவும் வந்த பிறவியையும், தவமுனிவன் திருவருளாற் குடலாகிய தொடர்மாலையாற் சுற்றப்படாமல் பசுவின் வயிற்றினுள் பொன் தகட்டினாலான ஒரு முட்டைக்குள் அடங்கிய அற்புதத்தையும், மக்கட்பேறில்லாத பூமிசந்திரன் முனிவரின் அருளால் தன்னைக் கொணர்ந்த திறத்தினையும், ஆராய்ந்த வளையல்களை அணிந்தவளாகிய அமரசுந்தரி என்கிற தாயிடமிருந்து கேட்டறிந்து மிக்க துன்பத்தையடைந்து சென்ற பிறப்பின்கண் தாய் செய்ததனையும் இப்பிறப்பின் இயல்பினையும் எண்ணி வருந்தி அரசாட்சியில் வெறுப்புற்று துறத்தற்குத் துணிந்து தன் கருத்தைச் சொன்னான். அதனைக் கேட்ட சனமித்திரன் என்னும் அமைச்சன் “அரசே, பூமிசந்திரன் நின்னைப் பெறுவதன்முன் இந்நாட்டில் பன்னீராண்டு மழைவளம் சுரந்து வறுமை மிக்கது ; அதனால் எல்லா உயிர்களும் வருந்தின; அப்பொழுது காய்கின்ற கோடையில் கார் தோன்றியது போல நீ தோன்றினாய்; தோன்றிய பின் இந்நாட்டில் வானம் பொய்யாது ; மண் வளம் குறையாது; உயிர்கள் உறுபசி அறியா ; இனி நீ நீங்குவாயாயின் உயிர்களெல்லாம் தாயைப் பிரிந்த குழவிபோலக் கூவாநிற்கும். இத்தகைய உலகைக் காவாமல் உனது பயனையே விரும்பிச் செல்லுதல் தகுதியன்று ; புத்ததேவன் அருளிய அறமும் இதுவன்று” என்று கூறினான். அதைக் கேட்ட அரசன் “மணிபல்லவம் சென்று வலங்கொள்ள வேண்டும் என்று எனக்குண்டான வேட்கை தணித்தற்கரியது. ஆதலால் ஒரு மாதம் இந்நகரை என்னிடத்தில் நீ இருந்து மேற்பார்வை செய்வாயாக” என்றான். நாவாய் ஏறி மணிபல்லவம் அடைந்தான். புண்ணியராசனுக்காக காத்திருந்த மணிமேகலை அவனை பீடிகைக்கு அழைத்துச் சென்றாள். “முற்பிறப்பைக் காட்டும் தரும பீடிகை இது ; இதைக் காண்பாயாக” என்று சொன்னாள். வேந்தன் பீடிகையை வலம் வந்து துதித்தான். உயரிய மணிகளாலிழைக்கப்பட்ட அப்பீடிகை மன்னனுக்கு அவனின் முற்பிறப்பை கையிலெடுத்துக் காண்போருடைய முகத்தைத் தெளிவாகக் காண்பிக்கும் குற்றமற்ற கண்ணாடி போல எடுத்துக் காட்டியது.

“என்பிறப் பறிந்தே னென்னிடர் தீர்ந்தேன்

தென்றமிழ் மதுரைச் செழுங்கலைப் பாவாய்

மாரி நடுநாள் வயிறுகாய் பசியால்

ஆரிரு ளஞ்சா தம்பல மணைந்தாங்கு

இரந்தூண் வாழ்க்கை யென்பாள் வந்தோர்க்கு

அருந்தூண் காணா தழுங்குவேன் கையின்

நாடுவறங் கூரினுமிவ் வோடுவறங் கூராது

ஏடா வழிய லெழுந்திது கொள்கென

அமுத சுரபி யங்கையிற் றந்தென்

பவமறு வித்த வானோர் பாவாய்

உணர்விற் றோன்றி உரைபொரு ளுணர்த்தும்

அணிதிக ழவிரொளி மடந்தை நின்னடி

தேவ ராயினும் பிரம ராயினும்

நாமாக கழூஉ நலங்கிளர் திருந்தடி

பிறந்த பிறவிகள் பேணுத லல்லது

மறந்து வாழேன் மடந்தையென் றேத்தி (25 : 139-153)

“என் பிறப்பறிந்தேன் ; என் இடுக்கண்களிலிருந்து நீங்கினேன்” என்று வியப்புற்றுத் தனக்குப் பழம்பிறப்பில் அமுதசுரபியென்னும் பாத்திரத்தையளித்த சிந்தா தேவியை நினைத்து துதித்தான். பின்னர் மணிமேகலையோடு தீவின் தென்மேற்கே சென்று கோமுகிக் கரையில் ஒரு புன்னை மரத்தின் நிழலிலே இருந்தான். ஆபுத்திரனோடு மணிமேகலை வந்திருப்பதை அறிந்து கொண்டு காவல் தெய்வமாகிய தீவதிலகை அவர்களருகே வந்து “ஆருயிர் மருந்தினைக் கையில் ஏந்தி உயிர்களின் பெருந்துயரினைப் போக்கிய பெரியோய்! அக்காலத்தில் மறந்து உன்னை இத்தீவிலேயே விட்டு விட்டு கப்பலேறிச் சென்று பின்பு நின்னை நினைத்து மீண்டு வந்து நீ இங்கு இறந்திருத்தலையறிந்து உடனே தம்முயிரை நீத்த ஒன்பது செட்டிகளின் உடல் எலும்புகள் இவை. இவற்றைப் பார். அவர்களுடன் வந்திருந்த சேவகர்களும் இவர்கள் இறந்தார்களே என்று அவர்களும் தம்மை மாய்த்துக் கொண்டனர். அவர்களுடைய எலும்புகள் இவை. அலைகள் தொகுத்த மணலால் மூடப்பட்டுப் புன்னை நிழலின் கீழ் உனது பழைய உடம்பு இருந்ததனைக் காண்” என்றாள். அதற்குப் பின் மணி மேகலையை நோக்கி காவிரிப்பூம்பட்டினத்தை கடல் கொண்டுவிட்டது என்ற செய்தியைக் கூறத்தொடங்கினாள். புண்ணியராசனின் காதில் எதுவும் விழவில்லை. புன்னை மர நிழலடியும் இருந்த மணலைத் தோண்ட ஆரம்பித்தான். அங்கே அவனுக்கு கிடைத்த தன் முன் – ஜென்ம உடலை மூடியிருந்த எலும்புகளைப் பார்த்தான். அவற்றைக் கண்டு கண்ணீர் மல்கினான். அதைக் கண்ட மணி மேகலை “நீ ஏன் துன்பமுற்றாய்? உனது நாட்டிலிருந்து உன்னை இங்கு அழைத்துக் கொண்டு வந்தது உன்னுடைய முற்பிறப்பை உனக்கு உணர்த்தின் உன் பெயரை என்றும் நிலைநிறுத்தவேயாம். உலகத்தை ஆளும் அரசர் தாமே அருளறத்தை மேற்கொண்டால் உலகில் குற்றமெல்லாம் அற்றுவிடுமன்றோ? அறமெனப்படுவது யாதெனில் உயிர்களுக்கு உணவையும் உடையையும் உறையுளையும் வழங்குவதே ; இதனையன்றி வேறில்லை” என்று சொல்லித் தேற்றினாள்.

விடைபெறுமுன் புண்ணியராசன் சொல்கின்றான் :-

“என்னாட் டாயினும் பிறர்நாட் டாயினும்

நன்னுத லுரைத்த நல்லறஞ் செய்கேன்

என்பிறப் புணர்த்தி யென்னைநீ படைத்தனை

நின்றிறம் நீங்க லாற்றேன் யான்….” (25 : 231-235)

(ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை)

உரை உதவி : மணிமேகலை – மூலமும் உரையும் – ந மு வேங்கடசாமி நாட்டார் & ஔவை சு துரைசாமிப் பிள்ளை