வாரணாசி வாழ் அந்தணன் ஒருவனின் ஒழுக்கங் கெட்ட மனைவி சூல் கொண்டு பிழைக்கு பயந்து தென் திசை குமரி நோக்கிப் பயணமானாள். வழியில் மகவொன்றை ஈன்று இரக்கமின்றி பெற்ற இடத்திலேயே போட்டு விட்டுச் சென்றாள். அழுத குழந்தைக்கு பசுவொன்று ஏழு நாட்கள் வரை பால் சொறிந்து காத்தது. பூதி என்னும் பார்ப்பனன் ஒருவன் குழந்தையை கண்டெடுத்து வீட்டுக் எடுத்துச் சென்றான். குழந்தைப் பேறிலாத பூதி தம்பதியர் அளவிலா உவகை கொண்டனர். குழந்தைக்கு ஆபூத்திரன் என்று பெயரிடப்பட்டது. பூதியின் வீட்டில் வளர்ந்த ஆபுத்திரன் மறைகள் கற்று அந்தணர்க்கு பொருந்துவன அனைத்தும் கற்று தேர்ந்தான்.
ஒரு நாள் ஒரு மறையவன் வீட்டினுள் சென்றவன் ஊனுண்ணுதலைக் கருதுகின்ற வேள்விச்சாலையில் பசுவின் கொம்பின் கண் சுற்றப்பட்டு மூச்செறிந்துகொண்டிருந்ததைப் பார்க்க நேரிடுகிறது. பசு படும் துயரைப் பார்க்க அவனால் முடியவில்லை. இரவு வரும் வரை காத்திருந்து பிறகு திருட்டுத் தனமாக வேள்விச்சாலைக்குள் நுழைந்து பசுவை விடுவிக்கையில் அவன் கையும் களவுமாகப் பிடிபட்டு விடுகிறான். பசுவை அவன் திருட விழைந்தானென்றெண்ணி ஜனங்கள் அவனை நையப்புடைத்துவிடுகின்றனர். அவன் எவ்வளவு அரற்றியும் அவன் சொன்னதை கேட்டார்களில்லை.
இதற்கு நடுவில் ஆபுத்திரன் விடுவித்த பசுவானது அங்கு நின்றிருந்த பார்ப்பனத்தி ஒருத்தியை முட்டி மோதி தாக்கி, பின்னர் காடு நோக்கி விரைந்தோடியது.
ஆபுத்திரன் அங்கு நின்றிருப்போரிடம் கூறலானான் :
“நோவன செய்யன்மின் நொடிவன கேண்மின்
விடுநில மருங்கின் மக்கட் கெல்லாம்
பிறந்தநாள் தொட்டும் சிறந்ததன் தீம்பால்
அறந்தரு நெஞ்சோ டருள்சுரந் தூட்டும்
இதனோடு வந்த செற்றம் என்னை” (13 : 50-55)
ஆபுத்திரன் சொன்னதைக் கேட்டதும் அவர்கள் “நீ வேத விதியை அறியாமல் வேள்வியை இகழ்கின்றாய் ; எனவே பசுவின் மகனாக இருப்பதற்கு நீ பொருத்தமானவனே” என்று இகழ்ந்துரைக்கிறார்கள். மனம் தளராமல் ஆபுத்திரன் மேலும் உரைக்கிறான் :
“ஆன்மகன் அசலன்; மான்மகன் சிருங்கி
புலிமகன் விரிஞ்சி; புரையோர் போற்றும்
நரிமகன் அல்லனோ கேச கம்பளன்?
ஈங்கிவர் நுங்குலத்து இருடி கணங்களென்று
ஓங்குயர் பெருஞ்சிறப் புரைத்தலும் உண்டால்
ஆவொடு வந்த அழிகுலம் உண்டோ?” (13 : 63-68)
நின்றிருந்த சனங்கள் ஆபுத்திரன் சொல்வதை பொருட்படுத்தாமல் இகழ்ந்த வண்ணம் இருக்கிறார்கள். அம்மறையவர்களுள் ஒருவன் “இவனின் குடிப்பிறப்பை நானறிவேன்” என்று ஆபுத்திரனின் கதையை எடுத்துரைக்கிறான். அவன் குமரிக்கரைக்கு சென்ற போது அங்கு சந்தித்த சாலி என்ற பெண்ணைப் பற்றி சொல்லலானான்.
சாலி வாரணாசியில் தன் கணவனுடன் வாழ்ந்து வந்தாள். அந்தணர்க்குத் தகாத இயல்புடன் ஒழுகி காவலின் எல்லையைக் கடந்து கணவனை அவமதித்தாள். அச்சமுடைமையால் கெடுதலுற்ற மக்களுடன் தென் திசைக் குமரியில் நீராடும் பொருட்டு பயணமானாள். பொன் தேரினை உடைய பாண்டியனது கொற்கை நகரத்தில் ஆயர்களுடைய இருப்பிடத்தில் ஈன்ற சிறு குழவிக்கு இரங்காமல் கண் காணாத தோட்டத்தில் போட்டு விட்டு வந்ததாக தன் கதையை சாலி சொன்னதாக அவ்வந்தணன் சொன்னான். “இவ்வித தீவினை புரிந்த எனக்கு மோட்சமுண்டா?” என்று துன்பமுற்று அழுத சாலியின் மகன் தான் ஆபுத்திரன் என்றும் அவன் தீண்டத் தகாதவன் என்றும் அறிவித்தான்.
ஆபுத்திரன் அதனைக் கேட்ட பின்னர் பெரிதாகச் சிரித்தான். “பெரிய மறையுணர்ந்த அந்தணர்கள் வந்த மரபினைச் சொல்கிறேன். கேளுங்கள். பழமறை முதல்வனான பிரமனுக்கு தெய்வக் கணிகையாகிய திலோத்தமையினிடமாக முன்பு தோன்றிய காதற் சிறுவரல்லரோ அரிய மறை முனிவர்களாகிய அந்தணர் இருவரும் (வசிட்டன் மற்றும் அகத்தியன்). இது இங்ஙனமிருக்க சாலி செய்தது எங்ஙனம் தவறாகும்?” என்று நான்மறை அந்தணரைப் பார்த்து மேலும் சிரிக்கலானான்.
தந்தையாகிய பூதியும் ஆபுத்திரனை தன் வீட்டிலிருந்து நீக்கினான். பசுவைக் கவர்ந்த திருடன் எனும் பட்டம் அவனுக்கு முன்னால் அவன் செல்லும் கிராமத்தில் எல்லாம் பரவியிருந்தது. அவன் நீட்டிய பிச்சைப் பாத்திரத்தில் கற்களே விழுந்தன. பெருஞ் செல்வர் வாழும், தெற்கின் கண் இருக்கும் மதுரையைச் சென்றடைந்தான். சிந்தாதேவியின் அழகிய கோயில் வாயிலிலுள்ள அம்பலப் பீடிகையில் தங்கியிருந்தான்.
மதுரை மாநகரில் பிச்சைப் பாத்திரத்தை ஏந்தி, வீதிகளெல்லாம் அலைந்து, பணக்காரர்களின் மாடங்களெல்லாம் திரிந்து, கண் பார்வையற்றோர், காது கேளாதோர், முடவர், பாதுகாப்பற்றோர், நோயால் துன்புறுவோர் ஆகிய அனைவரையும் அழைத்து ஒருங்கு உண்ணச் செய்து, பின் மிஞ்சியதை தான் உண்டும், பிச்சைப் பாத்திரத்தையே தலையணையாக வைத்து உறங்கியும் வாழ்ந்து வந்தான் ஆபுத்திரன்.
(ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை)
உரை உதவி : மணிமேகலை – மூலமும் உரையும் – ந மு வேங்கடசாமி நாட்டார் & ஔவை சு துரைசாமிப் பிள்ளை