
வான் வெளியைப் போர்த்தி
பூமியில் இரவாக்கி
சிறு சிறு துளைகளில்
வெண்தாரகைகள் வைத்து
உயிர்களுக்கு நித்ரை தருகிறாள்
பறவைகளைப் பள்ளியெழுச்சி
பாடவைத்து இருள் போக்குகிறாள்
மகாமாயையை ஏவி
யோகமாயை
நடத்தும் அளவிலா விளையாட்டு
இரவும் பகலும் அனவரதமும்
+++++
ஒருமுறை
நித்ரையில் உலகத்தோரை ஆழ்த்தி
கருவொன்றை மாற்றி
தன்னைப் புகுத்திக் கொண்டு
சிசுவாய் வெளிப்பட்டு
காற்றாய் மறைந்து
அசரீரியாகி……
+++++
இன்னொரு முறை
சுபத்திரையாகத் தோன்றி
ஒற்றைப் பார்வையில்
அர்ஜுனனை வசீகரித்து பித்தாக்கி
சன்னியாச வேடமிடத் தூண்டி
அண்ணன் கண்ணனின் சம்மதம் பெற வைத்து
ரதமொன்றில் ஓட்டிச்செல்லும் எண்ணம் தந்து….
இயக்கப்படுகிறோம் என்ற எண்ணம் மூளா
ஓயா இயக்கம்
திரௌபதியின் மௌன அங்கீகாரம்
அபிமன்யுவெனும் வீர மகனின் பிறப்பு
புத்திர சோகம்
மாயை அருள்பவள்
மாயைக்குட்பட்டாள்
+++++
இன்னொரு முறை
யோக மாயை
வெள்ளை யானையை
கருவாய்த் தாங்கி
சித்தார்த்தனைப் பெற்றெடுத்தாள்
மகாமாயையுடன் தொடர்பு விலகாமல்
பிடியில் சிக்காமல்
நடு வழியில் நடந்து சித்தார்த்தன்
தர்மச்சக்கரத்தைச் சுழற்றி புத்தனானான்
+++++
“மகாமாயை கொண்டு உன்னை இயக்கிய
யோக மாயையை நான் இயக்கினேன்
என்னை நீ இயக்குகிறாய்”
கண்ணன் சிரிக்கிறான்
நன்றி : பதாகை