அர்ஜுனன் காதல்கள் – சுபத்திரை

Jagannath Pantheon
Jagannath Pantheon

வான் வெளியைப் போர்த்தி
பூமியில் இரவாக்கி
சிறு சிறு துளைகளில்
வெண்தாரகைகள் வைத்து
உயிர்களுக்கு நித்ரை தருகிறாள்
பறவைகளைப் பள்ளியெழுச்சி
பாடவைத்து இருள் போக்குகிறாள்
மகாமாயையை ஏவி
யோகமாயை
நடத்தும் அளவிலா விளையாட்டு
இரவும் பகலும் அனவரதமும்

+++++

ஒருமுறை
நித்ரையில் உலகத்தோரை ஆழ்த்தி
கருவொன்றை மாற்றி
தன்னைப் புகுத்திக் கொண்டு
சிசுவாய் வெளிப்பட்டு
காற்றாய் மறைந்து
அசரீரியாகி……

+++++

இன்னொரு முறை
சுபத்திரையாகத் தோன்றி
ஒற்றைப் பார்வையில்
அர்ஜுனனை வசீகரித்து பித்தாக்கி
சன்னியாச வேடமிடத் தூண்டி
அண்ணன் கண்ணனின் சம்மதம் பெற வைத்து
ரதமொன்றில் ஓட்டிச்செல்லும் எண்ணம் தந்து….

இயக்கப்படுகிறோம் என்ற எண்ணம் மூளா
ஓயா இயக்கம்
திரௌபதியின் மௌன அங்கீகாரம்
அபிமன்யுவெனும் வீர மகனின் பிறப்பு
புத்திர சோகம்
மாயை அருள்பவள்
மாயைக்குட்பட்டாள்

+++++

இன்னொரு முறை
யோக மாயை
வெள்ளை யானையை
கருவாய்த் தாங்கி
சித்தார்த்தனைப் பெற்றெடுத்தாள்

மகாமாயையுடன் தொடர்பு விலகாமல்
பிடியில் சிக்காமல்
நடு வழியில் நடந்து சித்தார்த்தன்
தர்மச்சக்கரத்தைச் சுழற்றி புத்தனானான்

+++++

“மகாமாயை கொண்டு உன்னை இயக்கிய
யோக மாயையை நான் இயக்கினேன்
என்னை நீ இயக்குகிறாய்”
கண்ணன் சிரிக்கிறான்

 

 

நன்றி : பதாகை

அர்ஜுனன் காதல்கள் – உலூபி

@ Dolls of India
@ Dolls of India

வளைந்தோடும் நதியின் கரையில்
நீராடும் பார்த்தனின்
இரு கால்களைச் சுற்றி வந்ததொரு நீள்நாகம்.
வெட்கத்துடன் முத்தமிடும் இளங்காதலியாய்
அது பாதத்தை தீண்டிடவும்
நதியின் ஆழத்திற்கு இழுக்கப்பட்டான்.
ஒளி ஊடுருவும் மாளிகையின்
அறையில் விழித்தான்
வெளியே நாற்புறமும்
மீன்களும்
நீர்ப்பாம்புகளும் நீந்திக் கொண்டிருந்தன
பார்த்தனின் முன் எரிகுண்டம் ;
நெய்யிட்டு
தீ வளர்த்தான்.
அதன் உக்கிரத்துடன் போட்டியிட்டது
அருகிருந்த பாம்பின் கண்களில்
படர்ந்திருந்த இச்சைத்தீ.
கணத்துக்கொரு தரம் வடிவமாற்றம்
பாம்பு
பெண்
பாம்புப்பெண்
தீச்சடங்கு முடியவும்
“இது சாட்சி” என்ற சங்கல்பத்துடன்
பார்த்தனை நோக்கினாள்
திரௌபதியும் யுதிஷ்டிரனும்
இணைந்திருந்த அறையினுள்
விபத்தெனவே நுழைந்ததனால்
விதித்துக் கொண்ட வனவாசம் ;
கவர்ந்திழுக்கும்
சர்ப்பப்பெண்ணுடன்
கூடுதல் முறையாகுமா?
பாம்புப்பெண்
அவனின் மனதோடு மௌனமாய்ப் பேசினாள்
“சாபமில்லை ; மூத்தோர் சொல்லில்லை
உமக்கு நீரே வழங்கிக்கொண்ட
வனவாசத்தில்
உம் மேல் ஆசையுற்று அணுகுபவளைக்
கூடுதலில் பாவமில்லை”
மாலையென காலடியில் சுருண்டது சர்ப்பம்
மானிடப் பெண்ணாக எழுந்து
இதழ் குவித்து நெருங்கினாள்
அர்ஜுனன்
காமநோய் தீர்க்கும் வைத்தியனானான்.
நதியின் உயிரினங்கள்
அறையின் திரையாகின

oOo

பின்னொருநாளில்
நதிக்கரை மேடொன்றில்
வலியுடன் கண் விழித்தான்
விஷ பாணம் தாக்கி
புண்ணான அவனுடலை
பாம்புப்பெண்
நாவால் வருடினாள்
சற்றருகே ஒரு வாலிபன்
வில்லும் அம்புமாய்
பின்னே ஒரு வெள்ளைக் குதிரை
யாரிவன் என்னைப் போல்?
எங்கிருக்கிறோம்?
கனவிலா? நனவிலா?
உடலெங்கும் பாம்பு
ஊர்ந்து வைத்தியம் பார்த்தது
சலசலக்கும் நதியில்
முதலைகள் மூன்று நீந்திச் சென்றன.
இவைகளை முன்னர் சந்தித்திருக்கிறோமோ?
இறந்தகால நிகழ்வுகளும்
நிகழ்கால பிரக்ஞையும்
ஒன்றிணைந்து குழம்பாகி
வேறுபாடு காணவியலா கலவையாயின

oOo

“விஷமற்ற பாம்பினங்களில்
நான் அனந்தன் ;
ஆயிரம் பிரபஞ்சங்கள்
கடுகளவில் என் தலையில் சுழலுகின்றன”
கண்ணன் சிரிக்கிறான்

 

நன்றி : பதாகை

அர்ஜுனன் காதல்கள் – உத்திரை

Brihannala with Uttara (@ Ashok Roy)
Brihannala with Uttara (@ Ashok Roy)

அப்பா இருந்தார்
அம்மா இருந்தாள்
அண்ணன்மார் இருந்தனர்
நானும் இருந்தேன்…
இருந்தேனா?
கண்ணாடியின் பிம்பத்திடமும்
நிழற்பிரதிமையிடமும்
பேசிக் காலங்கழித்திருந்தேன்.
தென்றலாய் நுழைந்த
பிருகன்னளை என்னுள்
ஆனந்தத்தை வீசினா…..
விகுதிக் குழப்பங்கள்
நெருடவில்லை!

+++++

மிருதுவான கரங்கள்
கடிவாளத்தை எவ்வாறு ஏந்தும்?
அங்கம் அசைத்து
அபிநயம் புரிபவனா குதிரையோட்டி?
பிருகன்னளை ஆடவனாயிருக்கக்கூடுமா?
பயந்தோடிய உத்தரகுமாரனுக்கு
பதிலாக போரிட்டு கௌரவர்களை துரத்தினவன்
அவனே தானா?
சைராந்தரி சொல் கேட்டது பிழையோ?

+++++

உத்திரையின் நித்திரையில்
தோன்றிட்ட கனவுக்குள்
அர்ஜூனனின் கைப்பற்றி
நடமிட்டாள் உத்திரை.

+++++

நனவுலகில்
கைபிடித்ததோ வேறோர் இளங்கரம்
பழைய நண்பனுக்கு புது வேடம்
அர்ஜூன குமாரன் புல்லிய போது
துளிர்த்த நீர்த்திரை மேல் இமைத்திரை
அர்ஜுனனாகிய பிருகன்னளையின்
புன்னகை தழுவிய முகம் மனக்கண்ணில்

++++++

கணவனின் உடலைச் சாம்பலாக்கிய
சிதைத் தீயின் கரங்கள் வாவென்றழைத்தன
வயிற்றுச்சிசுவின் எடை
அழுத்தியது
குலுங்கியழுத அர்ஜுனனை
நோக்கி நின்றாள்
அடுத்த வேடத்துக்குள் நுழைகிறானோ?
அர்ஜுனனின் பார்வையெல்லைக்குள்
புலப்படா வேலியொன்றின் பின்
நிரந்தரமாய் நின்றிருந்தாள் உத்திரை

+++++

“குரு,தோழன், மாமன், தந்தை
மாறும் காலங்கள், மாறும் வேடங்கள்
உன்னுள் மாறாமல் இருக்கும்
என்னை உணர் அர்ஜூனா”
கண்ணன் சிரிக்கிறான்.

 

நன்றி : பதாகை (ஜூலை 20)