கருணையுள்ளம் பருத்தியாகி
திருப்திகுணம் நூலாகி
தன்னடக்கம் முடிச்சாகி
வாய்மை முறுக்காகி
அமைந்த பூணுலொன்று
உங்களிடம் இருந்தால்
அதை எனக்கு அணிவியுங்கள்
அது அறுந்து போகாது ;
அது அழுக்காகாது ;
எரிந்து போகாது ;
தொலைந்தும் போகாது ;
நானக் சொல்கிறான்
அத்தகைய பூணூலை அணிந்தோரே
ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
-குரு நானக்
ஒரு குளம். புனிதக் குளம். ராமதாஸ்பூரில் இருந்த குளம் என்று சொன்னால் யாருக்கும் தெரியாது. இன்று அக்குளத்தின் பெயரே அவ்வூருக்கும் பெயராக இருக்கிறது.ஆம்.அமிர்தம் நிரம்பிய குளம் என்று அர்த்தம் பெறும் அமிர்த சரஸ் என்கிற அம்ரித்சர் தான் அந்தக் குளத்தின் பெயர். நகரின் பெயரும் அதுவே!
”எப்போது பார்த்தாலும் நேற்று கட்டியது போன்ற தோற்றத்தைத் தரும் கோயிலது” என்று பல வருடங்களுக்கு முன்னர் ஒரு பஞ்சாபி நண்பர் என்னிடம் சொன்னது கோயிலுக்குள் நுழைந்ததும் ஞாபகம் வந்தது. மேற்கு வாசலில் இருந்து உள் நுழைந்தேன். மக்களே சேவகர்களாக பணியாற்றி யாத்திரிகர்களின் செருப்பை வாங்கி வைப்பதைப் பார்க்கையில் பணிவு பேசுவதில் இல்லை ; சேவை செய்வதில் இருக்கிறது என்கிற சிந்தனை நம்முள் ஊடுருவுகிறது. கைகளை கழுவி நீர்ப்பாதையில் கால்களைப் பதித்து சுத்தம் செய்து விலாசமான கோயில் வளாகத்தினுள் நுழைந்தால் பிரம்மாண்டமான குளம், அதற்கு நடுவில் தங்கத் தகடுகள் மேவிய ஹர்மந்திர் சாஹிப், குளத்தைச் சுற்றி நடையிடும் ஆயிரக் கணக்கிலான பக்தர்கள், காற்றில் அலைந்து நம் காதுகளை நிரப்பும் குர்பானி, – பொற்கோயிலின் சூழல் நம் மனதை இலேசாக்கி நெகிழ்வு நிலையை நோக்கி செல்ல வைக்கிறது.
கூட்டம் அலை மோதும் கோவில்கள் என்னுள் ஒரு பதற்றத்தையே ஏற்படுத்தும். எப்போது இக்கூட்டத்தில் இருந்து வெளிவரப்போகிறோம் என்ற எண்ணத்திலேயே கடவுள் தரிசனத்தின் போது மனம் அலை பாய்ந்தவாறு இருக்கும். நம் மீது வந்து மோதும் பக்தர்களின் மீது வெறுப்பும் கோபமும் எழும்.
அகால் தக்த்துக்கு எதிரில் துவங்கும் பக்தர் வரிசையில் நின்று மெதுவாக ஹர்மந்திர் சாஹிப்பை நோக்கி நகர்கையில் ஒரு வித அமைதி நம்மை ஆட்கொள்கிறது. குர்பானி-கீதம் நம்முள் சாந்தவுணர்வை விதைத்து, கூட்டத்தின் மேல் வெறுப்பு தோன்றாமல் செய்கிறது. ஹர்மந்திர் சாஹிப்பில் நுழைந்த பிற்பாடும் யாரும் முட்டி மோதி நம்மை தள்ளுவதில்லை. புனித கிரந்தத்தை விசிறியால் விசிறி பக்தி பண்ணுகிறார்கள் கிரந்திகள். கிரந்தி என்றால் கவனித்துக் கொள்பவர் என்று பொருள். சீக்கிய சமயத்தில் பூசாரிகள் இல்லை.
ஹர்மந்திர் சாஹிப்பின் இரண்டாம் மட்டத்திலும் மூன்றாம் மட்டத்திலும் பக்தர்கள் அமைதியாக குர்பானியை கேட்டுக் கொண்டோ அல்லது குரு கிரந்த் சாஹிப்பின் சில பகுதிகளை வாசித்துக் கொண்டோ அமர்ந்திருக்கிறார்கள்.
ஹர்மந்திர் சாஹிப்புக்கு வெளியே பிரசாதம் தரப்படுகிறது. பிரசாதத்தின் இனிப்பு அனுபவத்தின் இனிப்புடன் ஒன்று சேர்கிறது.

ஹர்மந்திர் சாஹிப்புக்கு நேர் எதிராக வரலாற்று முக்கியத்துவமிக்க அகால் தக்த் இருக்கிறது. அங்கும் பக்தர்கள் குரு கிரந்த் சாஹிப்பை வாசித்தவாறு உட்கார்ந்திருக்கிறார்கள். அகால் தக்த் என்றால் காலமிலா அரியணை என்று பொருள். அகால் தக்த் சீக்கிய மதத்தின் மிக உயர்ந்த சமய அதிகார பீடம். சீக்கிய மதத்தின் பத்தாவது குரு – குரு கோபிந்த் சிங் – அகால் தக்தை தோற்றுவித்தார். குரு கோபிந்த் சிங்குடன் பத்து குருக்களின் வரிசை முற்றுப் பெறுகிறது. இதற்குப் பின் சீக்கிய மதத்தை வழி நடத்துபவையாக – குரு கிரந்த் சாஹிப்பும், அகால் தக்த்தும், சீக்கிய புண்யத்தலங்களும் – இருக்கின்றன.
1984-இல் ராணுவம் பொற்கோயிலுக்குள் நுழைந்த போது நடைபெற்ற அழிவில் அகால் தக்த்துக்கு வெளியே இருந்த சீக்கியர்களின் புனித கிணறும் ஒன்று. அகால் தக்த் திரும்ப கட்டப்பட்டபோது அக்கிணறை காக்கும் முகமாக அகால் தக்த்துக்குள்ளேயே கிணறு இணைக்கப்பட்டு மாற்றி கட்டப்பட்டது. ஒரு கிரந்தியிடம் அக்கிணறு எங்கிருக்கிறது என்று விசாரித்தேன். அகால் தக்த்தின் அடித்தளத்தில் ஒரு சுரங்கம் மாதிரியான படிகளில் இறங்கி அக்கிணறை தரிசித்தேன். கிணற்றில் ஏதோ வேலை நடந்து கொண்டிருந்தது.
பதினேழு-பதினெட்டாம் நூற்றாண்டுகளில் முகலாயர்களின் அதிகாரத்துக்கெதிரான அரசியல் அரணாக அகால் தக்த் முக்கியப் பங்காற்றியிருக்கிறது. அதன் விளைவாக பல தாக்குதல்களுக்கும் உள்ளாகியிருக்கிறது. அவற்றுள் முக்கியமானவையாகக் கருதப்படுபது ஆப்கானிய மன்னன் அஹ்மத் ஷா அப்தாலியின் தாக்குதல். கோவிலின் தூய்மைக்கு பங்கம் விளைவிக்க நூற்றுக் கணக்கான பசுக்களை வதை செய்தானாம் அப்தாலி. 18ம் நூற்றாண்டில் ஆப்கானிய மன்னனின் தூண்டுதலில் பொற்கோயிலுக்குள் குடியாட்டம் போட்டு கோவிலை அசுத்தப்படுத்திய மஸ்ஸார் ரங்கார் என்ற அதிகாரியையும் கோவிலுக்கு பங்கமேற்படுத்தியவர்களில் ஒருவனாகச் சொல்வார்கள். 1984இல் நிகழ்ந்த ஆபரேஷன் ப்ளூஸ்டாரின் போது அகால் தக்த் பீரங்கிகளால் சுடப்பட்டு சின்னாபின்னப் படுத்தப்பட்டது. இந்நிகழ்வு சீக்கியர்களின் மனதில் ஆறா காயத்தை ஏற்படுத்தியிருப்பதை அகால் தக்த்துக்கு வெளியேயிருந்த கல்வெட்டை வாசிக்கும் போது நன்கு உணர முடிந்தது.
குளத்திற்கருகே பல நிமிடங்கள் நின்று கொண்டிருந்தேன். புஷ்டியான ஆரஞ்சு நிற மீன்கள் கரைக்கருகே வாய்களை திறந்தவாறு நீந்திக்கொண்டிருந்தன. அக்குளத்தின் நீரைக் கைகளில் பிடித்து சிறிது அருந்தி, தலையில் தெளித்துக் கொண்டேன். நிஷான் சாஹிப் வாசலுக்கருகே விரிக்கப்பட்டிருந்த கம்பளத்தில் சிறிது நேரம் இளைப்பாறினேன்.
சீக்கிய நூலகம் எங்கிருக்கிறது என்று யாத்திரிகர் ஒருவரிடம் கேட்டேன். ”இன்று ஞாயிற்றுக் கிழமை ; நூலகம் திறந்திருக்காது” என்று சொன்னார். நுழைவு வாயிலுக்கு மேல் சீக்கிய மியுசியம் இருந்தது. சீக்கியர்களின் வரலாற்றை ஓவியங்கள் வாயிலாக சித்தரித்திருந்தார்கள். பல அரிய தகவல்கள் அறியக் கிடைத்தன.
செருப்பணிவதற்காக போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்த போது பக்கத்தில் உட்கார்ந்திருந்த சீக்கியர் ஒருவர் “எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டார். அவரிடம் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தேன். மஹாராஷ்டிராவில் உள்ள நந்தேத் நகரிலிருந்து வந்திருக்கிறார். (நந்தேத் குரு கோபிந்த் சிங் அமரரான தலம் ; புகழ்பெற்ற ஸ்ரீ அஸூர் சாஹிபு குருத்வாரா அங்கு இருக்கிறது.) என்னைப் போலவே அவருக்கும் அம்ரித்சர் வருவது இது தான் முதல்முறை, சீக்கியராக இருந்தாலும் இதற்கு முன் ஹர்மந்திர் சாஹிப் வர சந்தர்ப்பம் அமையவில்லையாம். ’எனக்கும் தான்’ என்றேன். தன் டர்பனைக் காட்டி ”இதை அணிந்தவன் இவ்வளவு காலம் கழித்து வருவது சரியில்லை தானே!” என்று சொல்லி முறுவலித்தார். “நீங்கள் டர்பன் அணிந்திருக்கிறீர்கள் ‘ நான் அணிந்திருக்கவில்லை..அது ஒன்றைத் தவிர வேறு என்ன வித்தியாசம்” என்றேன். அவர் ’மிக சரியாகச் சொன்னீர்கள்’ என்று சொல்லி கையில் வைத்திருந்த சிறு புத்தகத்தை திறந்து குரு கோபிந்த் சிங்கின் ஷபத் ஒன்றை வாசித்துக் காட்டினார். இனிமையான பஞ்சாபி மொழியின் சத்தம் நெஞ்சை நிறைத்தது. அவரிடமிருந்து அந்த ஷபத்தின் அர்த்தத்தை சுருக்கமாக விளங்கிக் கொண்டேன். பின்னர் இணையத்தில் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பை விகிபீடியாவில் வாசித்தேன்.
“வெவ்வேறு தோற்றங்கொண்டவரானாலும் அனைத்து மனிதரும் ஒருவரே.
வெளிச்சமானவர்களும், இருண்டவர்களும் ; அழகானவர்களும் அழகற்றவர்களும்,
வெவ்வேறு சூழ்நிலைகளில் இருந்ததனாலேயே
இந்துக்களாகவும் முஸ்லீம்களாகவும் வளர்ந்திருக்கிறார்கள்.
எல்லா மனிதர்களுக்கும் அதே கண்கள், அதே காதுகள் ;
பூமி, காற்று, தீ, நீர் – இவற்றால சமைக்கப்பட்டதே நம் உடல்கள்.
அல்லாவும் பகவானும் ஒரே கடவுளின் நாமங்கள்
புராணங்களிலும் குரானிலும் இதுவே சொல்லப்பட்டிருக்கிறது
எல்லா மனிதர்களும் ஒரே கடவுளின் பிரதிபலிப்புகளே
முழு மனித இனமும் ஒன்றே என்று உணர்”