நம்பிக்கையின் நாளைகள் – அ.முத்துலிங்கத்தின் மகாராஜாவின் ரயில் வண்டி

தமிழ்புனைவுகளின் நாயகர்கள் தமிழநாட்டில் இருப்பதாகத்தான் வர வேண்டும் என்று சில காலம் முன்னர் ஒரு மரபே ஏற்பட்டிருந்தது. எண்பதுகளில் ஒரு வாரப்பத்திரிக்கையில் சிவசங்கரி எழுதிய “47 நாட்கள்” என்ற தொடர்கதையை வாசித்திருக்கிறேன். வெளிநாட்டில் வேலை செய்யும் ஒரு மாப்பிள்ளையை மணமுடிக்கிறாள் கதையின் நாயகி. உண்மையில் அயல்நாட்டு மாப்பிள்ளை அவ்வளவு நல்லவன் இல்லை. அவன் நாயகியை கொடுமைப்படுத்துகிறான். இக்கதை பிறகு திரைப்படமாகவும் வந்தது.

இன்னொருவிதமான அயல் நாட்டுக் கதைகள் வருவதுண்டு. வறுமையில் வாடும் தமிழ்க்குடும்பத்தில் ஒருவர் கஷ்டப்பட்டு கடுமையாக உழைத்து மலேசியாவிலோ அமெரிக்காவிலோ செட்டில் ஆகிவிடுவார்; குடும்பத்தின் வறுமையை வெளிநாட்டு பணம் அனுப்பி போக்குவார். ஆனால் சொந்த வாழ்க்கையில் அவர் தனிமையை அனுபவிப்பார். அவருக்கு அங்கு விவாகரத்து நிகழும் அல்லது அவள் காதலித்த வெள்ளைக்காரப் பெண்ணை இந்தியாவில் வசிக்கும் அவருடைய குடும்பத்தினர் ஏற்காமல் போவார்கள். அயல்நாட்டில் நடப்பதாகச் சித்தரிக்கப்படும் கதைகளில் ஒரு பலமான இந்திய இணைப்பு இருக்கும்.

அறுபதுகளில் எழுதப்பட்ட “புயலில் ஒரு தோணி”யை நான் சமீபத்தில்தான் வாசித்தேன் என்பதை இங்கு பதிவு செய்தாக வேண்டும்.

அயல்நாட்டுப் பின்புலத்தில் முழுக்க முழுக்க அயல் நாட்டுப் பாத்திரங்கள் ஏன் தமிழ்க்கதைகளில் உலவக் கூடாது?

amuttulingam_newa

இனப்பிரச்னையின் காரணமாக உலகெங்கும் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் அத்தகைய கதைகள் தொண்ணூறுகளில் எழுதப்பட காரணமாயினர். அனுபவங்களின் சேகரத்துக்குப் பிறகே அது இலக்கியம் ஆகிறது . இலங்கைத் தமிழர்களின் கூட்டு அனுபவம் தமிழ் இலக்கியத்திற்கு சமகாலப் போர் அவலங்கள், புலம் பெயர் வாழ்க்கையின் நிர்ப்பந்தங்கள், அனுசரிப்புகளையும் பற்றிய புது முன்னோக்கிலான படைப்புகள் வந்தடையக் காரணமானது. உலகமயமாக்கலும் சர்வதேச கண்ணோட்டத்தில் கதைகள் புனையப்பட இன்னொரு காரணம்.
அ.முத்துலிங்கத்தின் – மகாராஜாவின் ரயில் வண்டி– அருமையான சிறுகதைத் தொகுப்பு. ஒவ்வொரு கதையும் தனிப்பட்ட அழகு கொண்டவை.. சில முக்கியமான சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன. மகாராஜாவின் ரயில் வண்டி, தொடக்கம், ஆயுள், விருந்தாளி, கடன், பூர்வீகம், ஐந்தாவது கதிரை ஆகியவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

இத்தொகுதியில் உள்ள “நாளை” என்ற சிறுகதை பெயர் சொல்லப்படாத தேசமொன்றில் நிகழும் போரில் பாதிக்கப்பட்ட இரு சகோதரர்கள் பற்றிய சிறுகதை. பாத்திரங்களுக்கு பெயர்கள் தரப்படவில்லை.
பெரியவர்கள் பாதிக்கப்படும் அனைத்து வகைகளிலும் யுத்தங்கள் சிறுவர்களையும் பாதிக்கின்றன என்றாலும் சிறுவர்கள் வேறுபட்ட வழிகளில் யுத்தங்களினால் அவதியுறுகின்றனர். பராமரிப்பு, புரிதல் மற்றும் அன்பு இவைகளுக்காக சிறுவர்கள் பெரியவர்களைச் சார்ந்து வாழ்கின்றனர். பெற்றோரின் மரணம் காரணமாகவோ, குடும்பத்தின் ஜீவனத் தேடுதலில் பெற்றோர் தீவிரமாக ஈடுபடும் காரணமாகவோ, மன அழுத்தத்துக்காளான பெற்றோரின் உணர்வு ரீதியான கவனமிழப்பின் காரணமாகவோ பெற்றோர்-சிறுவர்களுக்கிடையான இணைப்பு போர்க்காலங்களில் அறுபடுகிறது.

பெற்றோரைத் தொலைத்த சிறுவர்கள் தெரிந்த ஒருவரின் அரவணைப்பில் இருக்கலாம் ; அல்லது உறவினர் யாருடனோ இருக்கலாம் ; அல்லது அனாதை விடுதிகளில் இருக்கலாம். குறிப்பிடத்தக்க விகிதத்தில் போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெரியவர்களின் பாதுகாப்பை இழந்துவிடுகின்றனர். புகலிடச் சூழலில் இவர்கள் “துணையற்ற குழந்தைகள்” (unaccompanied children) என்று அழைக்கப்படுகின்றனர்.

பெரியவனும் சின்னவனும் துணையற்ற குழந்தைகள். ஆனால் அவர்கள் அகதிகள் முகாமில் தங்கியிருக்கவில்லை. இம்முகாம்களிலிருந்து பல மைல்கள் தாண்டி ஒரு கராஜில் வசிக்கின்றனர். பெரியவனுக்கு பதினோரு வயது ; சின்னவனுக்கு ஆறு வயது. தினமும் பல மைல்கள் நடந்து வேறு வேறு முகாம்களுக்கு சென்று உணவு சேகரிக்கிறார்கள்.

ஒரு முகாமில் உணவு வண்டியின் வருகைக்காக காத்திருக்கின்றனர். சனங்கள் ஒழுங்கின்றி நின்று வரிசையை குலைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

பெரியவனின் தலையில் சின்னவனின் பொறுப்பு. ஒழுங்கற்ற வரிசையில் சின்னவனை நிற்க விடவில்லை. சின்னவன் எங்கே தொலைந்து போய் விடுவானோ என்ற பயம் பெரியவனுக்கு.

“அந்த தொக்கையான மனுஷி நாலு பிள்ளையையும் இழுத்துக்கொண்டு முன்னேறினாள். அவள் கைகளில் பெரிய பாத்திரங்கள் இருந்தன. அவள் எல்லாவற்றையும் முன் கூட்டியே போதிய ஏற்பாடுகளுடன் வந்திருந்தாள்”

உணவு சேகரிப்பதற்காக ஒழுங்கற்று திரண்டு நின்றிருந்த சனத்திரளை அதிகாரம் செய்து பழக்கப்பட்ட முகத்துடன் தடித்த உருவங்கொண்ட பெல்ட், தொப்பி, ஓவர்கோட் அணிந்த ஒரு மனிதன் தன் குரலின் மூலம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறான். சிறிது நேரம்தான். திரும்பவும் சனவெள்ளம் பெரியவனைத் தள்ள, சின்னவனின் கைப்பிடி தளர, அவன் தள்ளிக் கொண்டு போகப்படுகிறான். சின்னவனை ஓர் அதிகாரி அழைத்து ஒரு கூடாரம் முன்னர் நிறுத்தி வைக்கிறார். அரை மணி நேரம் சின்னவன் அங்கு காத்திருக்கிறான். அந்த அதிகாரி அண்ணனை தம்பியிடம் சேர்த்து வைக்கிறார்.

இதற்குள் பல புது வரிசைகள் தோன்றியிருக்கின்றன. எல்லோரும் பெரியவர்களாக நின்றிருக்கிறார்கள். சின்னவனை வரிசையில் நிறுத்தாமல் வேலி ஓரத்தில் நிற்க வைத்து. பெரியவன் தன் பார்வையால் சின்னவனை அடிக்கடி பார்த்துக் கொண்டிருக்கிறான்.

பெரியவனின் கையில் ஒரு நெளிந்த டின் மட்டுமே. அவனிடம் பாத்திரங்கள் இருந்திருந்தால் அவனுக்கு கொஞ்சம் அதிகமாக சூப் கிடைத்திருக்கும். ஒரு மீசைக்காரன் பெரியவன் கையில் இருந்த அடையாள அட்டையைப் பரிசோதித்து, “இது இங்கே செல்லாதே!” என்று சொல்கிறான்.“இனிமேல் வராதே” என்று அறிவுறுத்தப்படுகிறான். இருந்தாலும் அவனுக்கு ரொட்டியும் சூப்பும் வழங்கப்படுகின்றன.

சூப் ஊற்றுபவரிடம் “ஆழத்தில் இருந்து கலக்கி ஊற்று” என்று கேட்டுக் கொள்கிறான். சின்னவனுக்கு இன்று சூப்பில் இறைச்சித் துண்டு கிடைக்கும் என்று நம்பிக்கை கொடுத்திருந்தான் பெரியவன். ரொட்டி மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது; ஒரு பங்கை பெரியவன் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்கிறான். மீதி இரு பகுதிகளை இருவரும் உண்கிறார்கள். சூப்பில் அன்றும் இறைச்சித் துண்டு கிடைக்கவில்லை.
முகாமில் இருந்து திரும்புகையில் நெடுஞ்சாலையெங்கும் ராணுவ வீரர்கள் காணப்படுகிறார்கள். சிகரெட் புகைத்தபடி நின்றிருந்த ஒரு வீரனை பெரியவன் அணுகுகிறான். ராணுவ வீரன் ஒரு சிகரெட்டை எடுத்து வீசுகிறான். பெரியவன் சிகரெட்டை பற்ற வைத்து புகைக்கிறான். சின்னவனுக்கும் புகைக்க ஆசை. பதினோரு வயதுப் பெரியவன் “நீயும் என்னைப் போல பெரியவன் ஆனதும் பிடிக்கலாம். இப்ப நல்ல பிள்ளையாம்” என்று அறிவுரை சொல்லுமிடம் நம் மனதை இலேசாக்குகிறது. சிறு புன்னகையை நம்முள் தோற்றுவிக்கிறது.
அவர்கள் கராஜை எட்டும்போது ஒரு நாய் வந்து அவர்கள் அருகில் நிற்கிறது. அக்காட்சி போர், பசி, துயர், அவலம் நிறைந்த காட்சிகளுக்கு நடுவே மனித கருணையின் சாத்தியப்பாட்டின் படிமமாக விரிகிறது.
”சின்னவன் கையை நீட்டி ‘அதோ, அதோ’ என்று காட்டினான். அந்த நாய் மறுபடி வந்து நின்றது. மெலிந்து எலும்பும் தோலுமாய் இருந்தது. அதுவும் அகதி நாய்தான். பதிவு கார்ட் இல்லாத நாய். நிலத்தை முகர்ந்து பார்த்தபடி தயங்கி தயங்கி வந்தது.

‘அண்ணா, அந்த நாய்க்கு ஒரு பேர் வைப்போமா?” என்றான் சின்னவன்.‘வேண்டாம், பேர் வைத்தால் அதுவும் எங்கள் குடும்பம் ஆகிவிடும்’ பையில் இருந்த ரொட்டியை எடுத்து சரி பாதியாகப் பிய்த்து ஒரு பகுதியை அந்த நாயிடம் கொடுத்தான். அது அந்த ரொட்டியை தூக்கிக்கொண்டு நொண்டி நொண்டி ஓடியது’
கராஜ் பாதுகாப்பாக இருக்கிறது. உள்ளே வாடையும் இருட்டுமாக இருக்கிறது. பழைய கம்பளிகளை விரித்து படுத்துக் கொள்கிறார்கள். காலையில் சின்னவன் அழும்போது அவனுக்குக் கொடுப்பதற்காக, மீதமான ரொட்டியைப் பெரியவன் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்கிறான். சின்னவன் தூங்கி விட்டானென பெரியவன் எண்ணிக் கொண்டிருக்கையில் திடீரென ஊர்ந்து வந்து சின்னவன் கட்டிக் கொள்கிறான். சின்னவன் அழுகிறான். “உன்னைவிட்டு ஒரு நாளும் போக மாட்டேன்” என்று பெரியவன் அவனை அணைத்துக் கொள்கிறான். ’துணையற்ற குழந்தைகளான’ இருவரும் வயதில் மிகச் சிறியவர்கள், எனினும் பெரியவனின் முதிர்ச்சி மற்றும் பரிவு இருட்டான கராஜை நம்பிக்கையொளியால் நிறைக்கும் கணம் அது.
நாளை என்பது இன்னொரு நாளாக இருக்கலாம்.. ஆனால் நம்பிக்கை நாளை இன்றைய நாளைகளைத் தாள உதவும் நன்னாட்களை நிறைக்கலாம். பெரியவன் அடுத்த நாள் பத்து மைல் தொலைவிலிருந்த இன்னொரு முகாமுக்கு செல்லத் திட்டமிடுவதோடு கதை நிறைவு பெறுகிறது.

“அங்கே கட்டாயம் இறைச்சி கிடைக்கும். அப்படித்தான் அவன் கேள்விப்பட்டிருந்தான்”

”மகாராஜாவின் ரயில் வண்டி” மனித உணர்வுகளின் பல நிறங்களை வார்த்தைகளால் படம் பிடிக்கும் அரிய சிறுகதைகளின் சிறப்பான தொகுப்பு.

மொழி, இனம் தாண்டிய பொதுவான மனிதப் பிரச்சினைகளை, அழகியலைப் பேசவருகையில் பெயரிலா பாத்திரங்கள் பேசுபொருளின் எல்லையற்ற தன்மையை விவரிக்க மிகவும் உகந்தவை என்று இச்சிறுகதைகளை வாசிக்கையில் எனக்கு தோன்றியது.

“நாளை” சிறுகதை போலவே “தொடக்கம்” சிறுகதையிலும் கதை நிகழும் நாடோ, கதைசொல்லியின் இன அடையாளங்களோ சுட்டப்படுவதில்லை. உலகமயமாகிய வியாபாரச்சூழலில் மும்மாத நிதியறிக்கைகளும், பங்குகளின் விலை வரைபடங்களும் மட்டுமே முக்கியமானவையாகப் போன காலத்தில், காலக்கெடுக்களை சந்திப்பதற்கான ஓட்டங்கள் மட்டுமே சாசுவதம் என்றாகி விட்டபிறகு, உலக மையமே அலுவலகமும் அதில் இருப்பவர்களும் என்று ஆகிவிடுகிறது. உலகத்தை நோக்குவது அலுவலக அறையின் ஜன்னலின் பரப்பளவைச் சார்ந்ததாகவும் ஆகிவிடுகிறது, வெறுமை மிஞ்சி தீரா வேலைப்பளு தரும் அழுத்தத்தில் சலித்துப்போய் கதைசொல்லி திறந்திருந்த அலுவலக ஜன்னலின் வழி நுழைந்து இறந்துபோன பறவையின் சொந்த ஊர், அது எந்தெந்த தேசங்களின் மேல் பறந்தது என்பன போன்ற விவரங்களை இணையத்தில் (”வையவிரிவலை” – ஆசிரியரின் மிக அழகான சொற்பிரயோகம்!) சேகரிக்கிறான். போர்டு ரூமில் முதலாளிகள் அவனுடைய பிரெசெண்டேஷனுக்காக பொறுமையின்றி காத்திருக்கின்றனர். ஆறஅமர பறவை பற்றிய தகவல்களை சேகரித்துக் கொண்டுபோய் போர்ட் மீட்டிங்கில் பறவை பற்றிய சிறு சொற்பொழிவாற்றுகிறான்.

“ஆயுள்” கதையின் தொடக்கத்தில் “இது காதல் கதையல்ல” என்ற குறிப்பு வாசிக்கக் கிடைக்கிறது. கதையின் கடைசி பத்தி வரை ஒரு காதல் கதை போல நகரும் கதை. இலக்கிலாமல் சதா பயணப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நாடோடி வரலாற்றுக்கு முந்திய காலம் அவன் கையிலிருக்கும் பிளாஸ்டிக் குடுவை எல்லாருடைய கவனத்தையும் கவர்கிறது – ஹொன்ஸா கூல் என்கிற ஆதிவாசிப் பெண்ணைத் தவிர.
நாடோடிக்கு அவள்மேல் ஈர்ப்பு. வழக்கத்திற்கு மாறாக அப்பெண்ணின் கிராமத்திலேயே தங்கிவிடுகிறான். இயற்கை சார்ந்த கிராமவாசிகளின் வாழ்க்கை அவனுக்கு மிகவும் பிடித்துவிடுகிறது. “என்னை மண்ந்து கொள்வாயா?” என்று அவன் கேட்கும்போது ஹொன்ஸாகூல் அவனை விரட்டிவிடுகிறாள் .நாடோடி அசரவில்லை. ஹோன்சாகூலை திருமணம் செய்துகொள்ளும் ஆசையை தெரிவிக்கிறான். அவருக்கு ,சம்மதம்தான். ஆனால் கிராம மரபுப்படி ஹோன்சாகூலின் சம்மதத்தைப் பெற்றால்தான் திருமணம் சாத்தியம்.

மழைக்காலம் துவங்கும் அறிகுறி தோன்றவும், அங்கிருந்து கிளம்ப முடிவெடுக்கிறான், போகுமுன்னர் ஹோன்ஸாகூலை மீண்டுமொரு முறை சந்தித்து அவளிடம் பிளாஸ்டிக் குடுவையை நீட்டுகிறான். ஹொன்சாகூல் அவன் தந்த குடுவையின் நேர்த்தியில் மனதைப் பறிகொடுக்கிறாள். “குடுவையை என் ஞாபகமாக வைத்துக் கொள். நான் திரும்பி வந்து உன்னை திருமணம் செய்து கொள்வேன்” என்று நாடோடி சொல்கிறான்.
இரு வருடங்கள் காத்திருந்தும் நாடோடி திரும்பி வரவில்லை. அவள் கிராமவாசியொருவனை மணக்கிறாள். சீக்கிரமே மணத்தை முறித்துக் கொண்டு விடுகிறாள். அவள் மணமுடித்த கணவன், அவளுடைய தந்தை – ஒவ்வொருவராக இறந்துவிடுகிறார்கள். குடுவை அவளுடைய குடிசையிலேயே கிடக்கிறது. ஒரு நாள் அவளும் இறந்து போனாள். பல வருடங்கள் கடக்கின்றன. குடிசையும் சிதிலமாகி மண்ணோடு மண்ணாகி விடுகிறது. சடலங்களும் மண்ணோடு மண்ணாகின. அந்த குடுவையும் மண்ணில் புதைந்து விடுகிறது. ஆனால் சாகவில்லை. அதன் ஆயுள் நானூறு ஆண்டுகள். நூறு வருடம்தான் கழிந்திருக்கிறது. அது அழிந்துபோக இன்னும் முன்னூறு ஆண்டுகள் இருந்தன. “ஆயுள்” நிச்சயமாக காதல் கதை இல்லை!

மார்பகப் புற்றுநோயின் காரணமாக மார்பகம் நீக்கப்பட்ட பெண்களின் மனவலியை நுணுக்கமாகச் சொல்லும் அழகிய சிறுகதை – பூர்வீகம். யுக்ரேய்ன் நாட்டின் தலைநகரான கீவ் நகரில் வசிக்கும் அனா என்கிற அன்னலட்சுமி சேரகோவ் ”பூர்வீகம் தேடுவதை இனி விட்டுவிட வேண்டும். இன்னும் நூறு வருடங்களில் எல்லோரும் ஒரே இனம்தான்” என்று சொல்லிக்கொண்டே வைன் குடிப்பாள். அவள் அதிகம் குடித்து நிதானமிழக்கவும், கதைசொல்லியும் மற்றவர்களும் அவளை அழைத்துக்கொண்டு அவளுடைய ஓட்டல் அறையில் விடுவார்கள். அப்போது கண்ணகி போன்று தன்னிரு மார்பையும் கழட்டி அவர்கள் மீது அனா வீசுவாள். பஞ்சு போன்ற அவளின் மார்பகங்களின் ரகசியம் கதைசொல்லிக்கு ஆறு மாதம் கழித்து அனாவின் மரணச்செய்தியைப் படிக்கும்போதுதான் தெரிய வருகிறது.

தம்பதிகளுக்கிடையே ஏற்படும் சுவையான பாலியல் அரசியலை அழகுறச் சொல்லும் ”ஐந்தாவது கதிரை”

வெளிப்பூச்சில் அதி நவீனமாக வளைய வரும் குடும்ப அங்கத்தினர்களின் உண்மையான வண்டவாளம் இரவில் தெரிய வரும் “மகாராஜாவின் ரயில் வண்டி” சிறுகதையின் கதைசொல்லி எல்லாவற்றையும் பார்த்து துல்லியமாகப் பகிர்ந்து கொண்டாலும் அந்நிகழ்வுகளை அவன் எவ்வளவு புரிந்து கொண்டான் என்பதை நாம் அறிய மாட்டோம். ரோஸலின் என்கிற பதின்பருவ அழகி வாயைத் திறந்தால் பொய்! தான் படிக்கும் பள்ளியைப் பற்றிக் கூட அளந்து விடும் பகட்டு ! கதை சொல்லிக்கோ அவளின் பெயரை எப்படி ஆங்கிலத்தில் எழுதுவாள் என்று கேட்கவில்லையே என்ற ஏக்கம். கதை சொல்லிக்கு பல வருடங்களுக்குப் பிறகு யூகமாகப் புரிந்தாலும், நீள் சதுர பிஸ்கட்டை சாப்பிடும் போதெல்லாம் (ரோஸலின் வாசித்த) கிட்டாரின் மணம் வருவதை இன்னும் தவிர்க்க முடியாமல் இருக்கிறது.

மகாராஜாவின் ரயில் வண்டி சிறுகதைத் தொகுதியை வாங்கி இரண்டு வருடங்களாகிவிட்டன. புதுப்புத்தகங்களை முகர்ந்தால் ஒரு மணம் வரும் ;புத்தகங்களை முகர்ந்து பார்க்கும் பழக்கமுள்ள எனக்கு இரண்டு வருடங்கள் முன்னர் வாங்கிய இப்புத்தகத்தில் இருந்து இன்னும் வாசனை வந்து கொண்டேயிருக்கிறது என்று தோன்றுகிறது. நீங்களும் வாங்கி முகர்ந்து பார்க்கலாம்!

புத்தகம் : மகாராஜாவின் ரயில் வண்டி
ஆசிரியர் : அ.முத்துலிங்கம்
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்

நன்றி : சொல்வனம் (http://solvanam.com/?p=29293)

2 Comments

  1. johan paris says:

    நானும் இவர் வாசகனே! அனுபவித்து எழுதியுள்ளீர்கள்.

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.