தத்துவங்களின் குறியீடாக விக்கிரகங்கள் உருவாக்கப்படுகின்றன. தத்துவங்களை ஆழமாக தியானிக்கும் பொருட்டு உருவான மதங்கள் சிந்திக்கும் பயிற்சியில்லாத சாமானியர்களுக்காக விக்கிரகங்களை படைத்துக்கொண்டன. “புத்தரைத் தேடாதே ; புத்த நிலையைத் தேடு” என்று முழங்கினார் புத்தர். ஆனால் தேரவாத பௌத்தத்திலிருந்து கிளைத்த பல்வேறு பௌத்த பிரிவுகள் புத்தரை ஆசானாக குருவாக மனிதராக மட்டும் எண்ணாமல் பரமனாகவும் ஆக்கின. பிரம்மாண்ட புத்தர் சிலைகள் காந்தாரத்தில் உருவாகத் தொடங்கின. பின்னர் பௌத்த உலகெங்கும் புத்தர் சிலைகள், விக்கிரகங்கள் பல்கிப் பெருகின. தியான நிலைப் புத்தர், பரி நிர்வாண நிலையில் புத்தர், பொன்னால் செய்யப்பட்ட புத்தர், புத்தரின் முன் பிறவிகள் என்று புனையப்பட்ட ஜாதகக் கதைகளின் ஒவ்வொரு நாயகனின் உருவிலும் புத்தர், என்று புத்தரின் திருவுருவங்கள் விகாரைகளிலும், ஸ்தூபங்களிலும், ஓவியங்களிலும் புத்தகங்களிலும் சித்தரிக்கப்படலாயின.
முதலில் சமூகக் குறியீடுகளாகப் புரிந்து கொள்ளப்பட்டு, பின்னர் அரசியல் குறியீடுகளாகவும் இனக் குறியீடுகளாகவும் சமயக் குறியீடுகள் செயல்படுகின்றன என்பது கண்கூடு. காவியங்களினால், தத்துவநூல்களினால், காலகாலமாக நிற்கும் சிலைகளினால், பொது நினைவுகளில் அமைதியாக நிறுவப்படும் இக்குறியீடுகள், சமன் சிந்தனையற்ற மனங்களில் பெருமிதம், கர்வம், மேட்டிமைத்தனம் முதலான உணர்ச்சிகளை எழுப்ப வல்லனவாகின்றன. சிறுபான்மையினராய் இருக்கும் வேற்று நம்பிக்கையுடையோரின் மேல் அடையாள வன்முறையை திணிக்கும் சாதனங்களாகவும் பெரும்பான்மை சமூகத்தினரின் உபயோகத்துக்குள்ளாகின்றன.
இலக்கியத்தில் குறியீடுகளை பயன் படுத்துதல் ஓர் உத்தி; சொல்ல வந்த கருத்தை பூடகமாக சொல்வதற்கும், வாசக அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் அவை ஏற்றவை. சக்தி வாய்ந்த படிமங்கள் சித்தரிக்கப்படும் சிறுகதைகள் வாசகரின் நினைவுகளில் நெடுங்காலம் தங்கும். மிகவும் பேசப்படும் சிறுகதைகளில் குறியீடுகளின் தக்க, பயனுறுதி மிக்க பயன்பாடு இன்றியமையாத அங்கமாயுள்ளது.
ஷோபா சக்தியின் கச்சாமி (http://www.shobasakthi.com/shobasakthi/?p=1081) சிறுகதையினூடே புத்தர் வருகிறார் – கெய்லாவின் முதுகில் வரையப்பட்ட tattoo-வாக, நிலத்தில் கண்டெடுக்கப்பட்டு பின்னர் உடைத்து புதைக்கப்படும் புராதன சிலையாக, புளியங்குளத்தில் இன்னும் பிரசன்னமாகாத புத்தராக. ஒவ்வோர் இடத்திலும் புத்தரின் படிமம் நம்முள் வெவ்வேறு உணர்ச்சிகளை ஏற்படுத்துகிறது.
கதை சொல்லியும் அவருடைய தோழியும் இலங்கையில் சுற்றுலா செல்கிறார்கள். தோழி தன் முதுகில் புத்தர் தியானம் செய்யும் சித்திரமொன்றை tattoo – குத்திக்கொண்டிருக்கிறாள். அது தெரியும் வண்ணம் உடை அணிந்திருந்ததால் போலீஸ் காரர்கள் விசாரிக்கிறார்கள். “புத்தரின் உருவத்தை உடலில் பச்சை குத்துவது தண்டனைக்குரிய குற்றம்” என்று அவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். கதை சொல்லியை அவனுடைய பூர்வீக கிராமத்துக்கு அழைத்து செல்வதாய் சொல்லியிருந்த தோழிக்கு ஏமாற்றவுணர்ச்சியில் ஆத்திரம் ; கோபம் மேலிட பிரச்னையை முடிவு செய்ய இலங்கையை விட்டு இருபத்தி நான்கு மணி நேரத்தில் வெளியேற முடிவு செய்கிறார்கள்.
கதை சொல்லி இனப்பிரச்னையின் காரணமாக புலம் பெயர்ந்தவர்களில் ஒருவன். தான் ஆறு ஆண்டுகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலைக்குச் செல்லும் வழித்தடத்தை கண்டிக்கருகே அவன் காண்கிறான். அவன் ஏன் சிறை செய்யப்பட்டான் என்ற காரணம் சொல்லப்படவில்லை. கடந்தகால நினைவுகள் ஒரு சிறைவாசமாக அவன் மனதை பாரமாக அழுத்துவதை சொல்வதாக இதைக் கொள்ளலாம்.
முன்னதாக வியட்நாமிலிருந்து இலங்கை செல்லும் எண்ணம் கதை சொல்லிக்கு வருகிறது ; காலியாகப் போய்விட்ட சொந்த ஊரில் தங்குவதற்கென்று ஓர் உறவினர் கூட இல்லாமல் போய் சந்திப்பதற்கென ஒருவரும் இல்லாமல் போன பிறகு கடந்த கால கசப்பான நினைவுகளின் வேதனையை தனியாக இருந்து தாங்கிக் கொள்ள இயலாது என்ற காரணத்தினாலோ என்னவோ “நீ என்னை யாழ்ப்பாணம் கூட்டிக் கொண்டு செல்வாயா?” என்று ஒரு சின்னக் குழந்தை போல கெய்லாவிடம் கேட்கிறான்.
கெய்லாவின் free-spiritedness சம்பவங்கள் வாயிலாக தெளிவுற சொல்லப்படுகின்றன. கட்டுப்பாடுகளை ஏற்காத கிளர்ச்சியை கோபத்தினால் வெளிப்படுத்தும் கெய்லா, காதலன் தன் பூர்வீகத்தை காணாமல் திரும்பக் கூடாது என்ற அக்கறை மேலிட தன்னுடைய tattoo வை அழிக்க தன் முதுகில் ஊற்றிக் கொள்ளும் எரி சாராயம் free-spirit-ஐ வரம்புக்குள் அடக்கி வைக்கும் சட்டத்தின் இரும்புக்கரங்களின் குறியீடு. தோழமையின் பாற்பட்ட தாய்மை கலந்த அன்பின் பரிமாணமாகவும் இதைக் கொள்ளலாம்.
Tattoo அழிந்து கருத்துப்போயிருந்த கெய்லாவின் முதுகுப்புற காயம் கதைசொல்லியின் மனதில் ஒரு பழைய நினைவைக் கிளறுகிறது. மலையகத் தமிழர்களை வன்னிக்காட்டுப் பகுதிகளில் குடியேற்றுவதற்கான இயக்கத்தில் கதை சொல்லி பங்கு பெற்ற போது நிகழ்ந்த சம்பவம். கதை சொல்லியும் அவனுடைய நண்பர்களும் செல்வா நகர் என்ற புது காலனியை சமைப்பதற்காக ஒரு நாள் குழி தோண்டிக் கொண்டிருந்த போது புத்தர் சிலையொன்று தட்டுப் படுகிறது. புத்தர் சிலை அவ்விடத்தில் கிடைத்தது என்று தெரிந்தால் வன்னி மண் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசம் என்பதை மறுப்பார்கள். பிக்குக்கள் வழிபாடுகளுக்கும், தொல்பொருளியலார் ஆய்வுகளுக்கும் வந்து குவிவார்கள் என்று சொல்லி பாதிரியார் ஒருவர் அச்சிலையை உடைத்து விடுமாறு ஆலோசனை கூறுகிறார்.
“புத்தரைக் கீழே போட்டுவிட்டு, நான் அலவாங்கால் முதல் அடியை புத்தரின் மார்பில் இறக்கினேன். சிலையிலிருந்து ‘கிலுங் கிலுங்‘ எனச் சில்லறை நாணயங்கள் குலுங்குவது போல ஒலி எழுந்தது. அலவாங்கு என் கைகளிலிருந்து துள்ளப் பார்த்தது. ஏதோ நூதனமான கல்லில் சிலையை உருவாக்கியிருக்கிறார்கள் என நினைத்துக்கொண்டேன். மூன்றாவது அடியில் புத்தரின் மார்பு இரண்டாகப் பிளந்தது. நாங்கள் மூவரும் ஆள்மாறி ஆளாக அடித்து அந்தச் சிலையைத் தூள் தூளாக்கினோம். ஒவ்வொரு அடிக்கும் ‘கிலுங் கிலுங்‘ என்ற ஒலி எழுந்துகொண்டேயிருந்தது. சிலையைச் சல்லிக் கற்களாகச் சிதைத்தோம். அந்தக் கற்களைகாட்டின் எல்லாத் திசைகளிலும் சில்லஞ் சில்லமாகக் குழிதோண்டிப் புதைத்தோம்”
பெரும்பான்மையரின் நோக்கின்படி வரலாறுகள் திரிக்கப்படுவதையும் அதனால் எழும் அச்சங்களின் பொருட்டு அதே வரலாறு இருட்டடிப்புக்குள்ளாக்கப்படுவதையும் மிக அழகாக எடுத்துக் கூறும் பகுதி இது. வரலாற்று உண்மைகள் ஏற்றுக் கொள்ளப்படும்போது அவை முரண்பட்டிருக்கும் இரு தரப்பினரையும் சுத்திகரித்துப் பிணைக்கிறதென்றால், உண்மைகள் குறித்த பெருமிதங்களும் அச்சங்களும் இருவரையும் பொய்மையால் பிணிக்கின்றன.
கதை சொல்லியும் கெய்லாவும் பயணம் செய்யும் பஸ் புளியங்குளத்தருகே செல்வா நகருக்கருகில் நிற்கிறது. கதை சொல்லி தூங்குவதைப் போல கண்ணை இறுக மூடி தலை கவிழ்ந்திருக்கிறான். பேருந்துக்கு வெளியே “இந்த இடத்தில் புத்தர் சிலையொன்றை நிர்மாணிக்கப் போகிறோம் ; தானம் செய்யுங்கள்” என்று யாரோ உண்டியல் குலுக்குகிறார்கள். ஏற்கெனவே உடைத்தெறியப் பட்ட பழைய புத்தர் சிலை புதைந்திருந்த இடத்தில் ஒரு புதிய சிலை வரவிருக்கிறது ; அதற்கு முன்னரே சிங்களக் குரல்கள் வந்து விட்டதை கண்ணை மூடியவாறே கதை சொல்லி கேட்கிறான்..
பஸ் நகரத் தொடங்கியவுடன் கெய்லா கதை சொல்லியில் தோள்களில் ஆதுரமாய சாய்ந்து கொள்ள, அவளின் காயத்தை அன்புடன் வருடி விடுகையில் கதைசொல்லியின் உள்ளங் கைகளில் புத்தர் இருந்தார் என்று சொல்லி கவித்துவமாக முடிகிறது கதை.
+++++
ஒரு ஜென் குட்டிக் கதை – கரிய மூக்கு புத்தர்
ஒரு பெண் புத்தத் துறவி தன்னொளி பெறுவதற்காக அலைந்து திரிந்து கொண்டிருந்தாள். அவள் தங்கத்தால் வெகு அழகாக புத்தச் சிலை ஒன்றினைச் செய்தாள். எங்கு சென்றாலும் அந்தச் சிலையைக் கூடவே எடுத்துச் செல்வாள்.
நாட்கள் கடந்தன. அப்படியே நடந்து கொண்டிருந்தவள், அமைதியான ஆனால் இயற்கை அழகுடன் இருந்த ஒரு கிராமத்திற்கு வந்தாள். அங்கு இருந்த சிறிய புத்தக் கோயிலை மிகவும் பிடித்து விட்டது. அங்கேயே வசிப்பது என முடிவெடுத்தாள். அந்தச் சிறிய கோயிலில் பல புத்தர் சிலைகள் இருந்தன.
தன்னுடைய தங்கச்சிலைக்கு நறுமணப் பொருட்களை (சாம்பிராணி, ஊதுவத்தி) எற்றி வைக்க ஆசைப் பட்டாள். ஆனால் அந்த சின்னக் கோயிலில் இருந்த மற்ற புத்த விக்கிரங்களுக்கு தன்னுடைய நறுமணப் பொருட்கள் செல்லக் கூடாது என முடிவெடுத்தவள், அதற்காக ஒரு கூம்பு வடிவினால் ஆன புனல் ஒன்றினைத் தயாரித்தாள். சாம்பிராணி ஏற்றியதும், அது அவளுடைய புத்த விக்கிரத்திற்கு மட்டுமே போகும்படி செய்தாள். சாம்பிராணியும் புத்தரின் முகத்திற்கு அருகில் மட்டுமே சென்றது. ஆனால் கொஞ்ச நாட்களில் தங்க புத்தரின் மூக்கு கறுத்துப் போய் மிகவும் அசிங்கமாகிவிட்டது
எனக்கு எனமோ இந்த சிறுகையின் வெளிப்படையான அரசியலை தெளிவாக புரிந்து கொள்ளமுடியவ்வில்லை. என் வாசிப்பின் போதாமையா புரியவில்லை.
நீங்கள் ரசித்த இந்தச் சிறுகதை குறித்த எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள். நானும் படித்துப் பார்க்கிறேன்.
வேண்டியவர்கள் எழுதியதைப் பாராட்டுவது, மற்றவர்களைக் கண்டுகொள்ளாமல் விடுவது என்றில்லாமல், நல்ல கதைகள் என்று நீங்கள் நினைத்தால், யார் எழுதியிருந்தாலும் பகிர்ந்து கொள்ளுங்கள், காத்திருக்கிறேன்.
நன்றி.