அடுக்குகள்

கணிதத்தில்

முற்றொருமைகளில் வரும்

அடுக்குகளின் விதிகளை

மகளுக்கு

கற்றுவிக்கும் முயற்சியில் தோற்று

துவண்டு ஓய்ந்தேன்.

“அடுக்குகளை கூட்டினால் மதிப்பு பெருகும்.

அடுக்குகளை கழித்தால் மதிப்பு குறையும்

அடுக்குகளை வகுக்க மேலடுக்குகளிலிருந்து

கீழடுக்குகளை கழிக்க வேண்டும்”

ஆறாம் வகுப்பு மாணவிக்கு

சமூகவியல் நியதிகள் புரியுமா

என்ற கேள்வி கூடவா

கணிதப் புத்தக ஆசிரியர்களுக்கு தோன்றியிராது?

கதவுடன் ஒரு மனிதன் – சச்சிதானந்தன்

சமீபத்தில் நேஷனல் புக் ட்ரஸ்ட் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பங்கு கொள்வதற்காக நண்பர் எம்டிஎம் தில்லி வந்திருந்தார். இக்கருத்தரங்கில் பார்வையாளனாக கலந்து கொண்டேன். கருத்தரங்கை மட்டுறுத்தியவர் மலையாளக் கவிஞர் சச்சிதானந்தன் அவர்கள். சர்வதேச அளவில் கவனத்தை பெற்றிருக்கும் சச்சிதானந்தன் இரு வருடங்களுக்கு முன்னர் நோபல் பரிசுக்கான இறுதிப் பட்டியலில் இடம் பெற்றிருந்தார் என்று சொல்லப் படுகிறது. சாஹித்ய அகாடமியின் முதன்மை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெறுவதற்கு முன்னர் கேரளாவில் ஆங்கிலப் பேராசிரியாக இருந்தார். ஏகப்பட்ட தேசிய சர்வ தேசிய விருதுகளுக்குச் சொந்தக்காரர்.

1996 முதல் தில்லியில் வசிக்கிறாராம். தில்லியில் வசிப்பது பற்றி அவரிடம் கேட்ட போது “எனக்கும் தில்லிக்குமான உறவு அன்பு – வெறுப்பு இரண்டுங் கலந்தது” என்று பதிலளித்தார்.

இச்சந்திப்புக்கு முன்னர் அவருடைய கவிதைகளைப் படித்ததில்லை. எம்டிஎம் சச்சிதானந்தனின் எழுத்தை சிலாகித்துப் பேசினார். ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட சில கவிதைகளை இணையத்தில் வாசித்தேன். அவருடைய கவிதை நூல்களை வாங்கி ஆழ்ந்து படிக்க வேண்டும் என்ற ஆர்வம் தோன்றியிருக்கிறது. அவருடைய மூன்று கவிதைத் தொகுதிகளின் தமிழாக்கங்கள் இதுவரை வெளிவந்திருக்கின்றன என்று அவருடைய இணைய தளம் (http://www.satchidanandan.com/index.html) சொல்கிறது. வாங்க வேண்டும்.

கவிஞர் சச்சிதானந்தனின் அனுமதியுடன் “A man with a door” என்ற அவருடைய கவிதையின் தமிழாக்கம் கீழே.

கதவுடன் ஒரு மனிதன்
ஒரு மனிதன் கதவைச் சுமந்த படி
நகரத்தெருவினூடே நடக்கிறான் ;
அவன் அதனுடைய வீட்டை தேடுகிறான்.

அவனின் மனைவியும்
குழந்தைகளும் நண்பர்களும்
அக்கதவின் வழி உள்ளே வருவதை
அவன் கனவு கண்டிருக்கிறான்.
இப்போதோ முழுவுலகமும்
அவனால் கட்டப்படாத வீட்டின்
கதவினூடே நுழைந்து செல்வதை
அவன் பார்க்கிறான்.

கதவின் கனவு
உலகை விட்டு மேலெழுந்து
சுவர்க்கத்தின் பொன் கதவாவது.
மேகங்கள்;வானவிற்கள்
பூதங்கள், தேவதைகள் மற்றும் முனிவர்கள்
அதன் வழி நுழைவதை
கற்பனை செய்கிறது,

ஆனால் கதவுக்காக காத்திருப்பதோ
நரகத்தின் உரிமையாளர்.
இப்போது கதவு வேண்டுவது
மரமாக மாறி
இலைச்செறிவுடன்
தென்றலில் அசைந்தவாறே
தன்னைச் சுமந்திருக்கும்
வீடற்றவனுக்கு
சிறு நிழலைத் தருவதே.

ஒரு மனிதன் கதவைச் சுமந்த படி
நகரத்தெருவினூடே நடக்கிறான் ;
ஒரு நட்சத்திரம் அவனுடன் நடக்கிறது.

MDM&KSatchidananthan

(எம்டிஎம், நான், கவிஞர் சச்சிதானந்தன்)

மிலிந்தனின் கேள்விகள் 2

milin
சொல்வனம் இதழ் 80 இல் வெளியான கட்டுரையை வாசித்த நண்பர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். “முன்னுரையில் ஆர்வமூட்டும் இரண்டு வினாக்களைப் பட்டியலிட்டு அவற்றிற்கு மிலிந்தா பன்ஹா விடையளிக்கிறது என்றீர்கள்; முழு கட்டுரையிலும் ’ஆன்மா இல்லையென்றால், மறுபிறவியில் பிறப்பது எது?’ மற்றும் ‘ஆன்மா இல்லையென்றால், இப்போது பேசிக்கொண்டிருப்பது எது?’ என்ற வினாக்களுக்கு விடை இல்லையே” என்றார். மற்ற வாசகர்களுக்கும் இது தோன்றியிருக்கலாம்.

இவ்விரண்டு வினாக்களுக்கும் “மறுபிறப்பு” என்ற இரண்டாவது அத்தியாயத்தில் விடை இருக்கிறது. அதன் சில பகுதிகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்

(1)

”நாகசேனரே, மறு பிறப்பெடுத்த ஒருவன் அதே மனிதனா? அல்லது வேறொருவனா?”

”அவனுமில்லை. வேறொருவனுமில்லை”

”உதாரணம்?”

”பானையில் இருக்கும் பால், தயிராகவும், பின்னர் வெண்ணையாகவும், பிறகு நெய்யாகவும் மாறுகிறது. நெய், தயிர், வெண்ணை இவை எல்லாம் பாலைப் போன்றதே என்று சொல்வது சரியானது அல்ல; ஆனால் அவைகளெல்லாம் பாலில் இருந்து வந்தவையே, எனவே அவைகளெல்லாம் வேறுவேறானவை என்றும் சொல்ல முடியாது”

(2)

”மறுபிறப்பெடுக்காமல் இருக்கப் போகிறவன் அதைப் பற்றி அறிவானா?”

“ஆம் வேந்தனே”

”எப்படி அறிவான்?”

“மறுபிறப்புக்கான காரணங்களும் சூழ்நிலையும், முடிவுக்கு வருவதன் வாயிலாக. உழாமல், நடாமல், அறுவடை செய்யாமல் இருக்கும் விவசாயி, களஞ்சியம் நிரம்பவில்லை என்பதை அறிவான்.”

(3)

”மறுபிறப்பெடுக்காமல் இருக்கப் போகிறவன் துன்பத்தை உணர்வானா?”

”அவன் உடல் வலியை உணரலாம் ; மன வலியை உணர மாட்டான்”

“அப்படி அவன் வலியை உணர்வானேயானால், அவன் ஏன் உடன் மரணத்தை தழுவி, தத்தளிப்பில்லாமல், துக்கத்தை முடிவுக்கு கொண்டு வரக் கூடாது?”

”அருகன் வாழ்வின் மேல் விருப்போ வெறுப்போ கொள்ளாதவன். கனியாத பழத்தை அவன் அசைத்து உதிர்ப்பதில்லை; பழத்தின் முதிர்ச்சிக்காக காத்திருக்கிறான். புத்தரின் முக்கிய சீடரும் வணங்குதற்குரியவருமான சரிபுத்தர் இவ்வாறு கூறுகிறார் :-

”மரணமுமில்லை ; நான் நெஞ்சார விரும்புவது வாழ்வுமில்லை.
சம்பள வேலைக்காரன் போல
காலம் கடத்துகிறேன்.
மரணமோ வாழ்க்கையோ அல்ல நான் வேண்டுவது
கவனத்துடனும் தெளிவான புரிதலுடனும்
காலம் கடத்துகிறேன்”
– (தேரகதா 1002-1003)

(4)

”இன்ப உணர்ச்சி ஆரோக்கியமானதா, ஆரோக்கியமற்றதா, அல்லது நடு நிலையானதா?”

”இம்மூன்றில் எதுவாகவும் இருக்கலாம்”

“வணக்கத்துக்குரியவரே, ஆரோக்கியமான நிலைகள் துன்பம் தராதவையாக இருக்குமென்றால், துன்ப உணர்வைத் தருபவை ஒவ்வாதவையாக இருக்குமென்றால், வலியைத் தரும் ஆரோக்கியமான நிலை இல்லாமல்தானே இருக்கும்?” [விளக்கம் : ஆரோக்கியமான கருமங்கள் வலியைத் தருவனவல்ல ஆனால் அக்கருமங்களை செய்தல் கடினம் என்று நாம் எண்ணுவதற்கு காரணம் நம்முடைய பற்றும் வெறுப்புமே. ஒவ்வாத காரியங்களின் விளைவுகள் வலியுணர்ச்சி தருவன ஆனால் அக்காரியங்களைச் செய்து மகிழ்வடையக் காரணம் நம்முடைய மயக்கமே)

”அரசனே, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒரு மனிதன் ஒரு கையில் சூடான இரும்பு பந்தையும், இன்னொரு கையில் பனிக்கட்டியாலான பந்தையும் எடுத்துக்கொள்ளுமாறு பணிக்கப்பட்டால், இரண்டும் அவனுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துமா?”

”கண்டிப்பாக”

“அப்படியானால், உங்களுடைய அனுமானம் தவறாகிப் போகும். அவை இரண்டும் சூடானவையாக இல்லாதிருக்குமானால், சூடு அசௌகரியத்தை ஏற்படுத்துமானால் மற்றும் அவை இரண்டும் குளிர்ச்சியாக இல்லாதிருக்குமானால், குளிர்ச்சி அசௌகரியத்தை தருமானால், அசௌகரியம் சூட்டிலிருந்தோ குளிர்ச்சியிலிருந்தோ எழுவதில்லை என்றுதானே பொருள்?”

”உங்களுடன் என்னால் விவாதிக்க இயலாது. தாங்களே விளக்குங்கள்”

பெரியவர் மன்னனுக்கு அபிதம்மத்தை போதிக்கலானார். “இவ்வுலகோடு இணைந்த இன்பங்கள் ஆறு. துறவோடு இணைந்தவை ஆறு. உலகியல் துக்கங்கள் ஆறு ; துறவு சார்ந்த துக்கங்கள் ஆறு. இரண்டு வகையிலும் நடுநிலை சார்ந்த உணர்ச்சிகள் ஆறு. மொத்தம் முப்பத்தியாறு. இறந்த, நிகழ் மற்றும் வருங்காலம் எனும் மூன்று காலங்களிலும் எழும் முப்பத்தியாறு உணர்ச்சிகள் ; ஆக மொத்தம் நூற்றியெட்டு உணர்ச்சிகள்.”

(5)

“நாகசேனரே, மறுபிறப்பெடுப்பது எது?”

“மனமும் பருப்பொருளும்”

“இதே மனமும் பருப்பொருளும்தான் மறு பிறவி எடுக்கிறதா?”

“இல்லை. ஆனால் இம்மனமும் பருப்பொருளும் சேர்ந்து கருமங்களைப் புரிகின்றன. அக்கருமங்களால் இன்னொரு மனமும் பருப்பொருளும் பிறக்கிறது. ஆனால், மனமும் பருப்பொருளும் அதன் முன்னைய கருமங்களின் விளைவுகளிலிருந்து விடுதலையாவதில்லை”

”ஏதாவது ஓர் உதாரணம் தாருங்கள்”

“ஒரு மனிதன் சிறு கனலை ஊதி தன்னை வெப்பப்படுத்திக் கொண்டபிறகு, அக்கனலை அப்படியே எரியவிட்டு அவ்விடத்திலிருந்து அகல்வது போன்றது இது. அக்கனல் பரவி அண்டை வயலொன்றின் விளைச்சலை எரித்து சாம்பலாக்கிவிட்டது என்று வைத்துக் கொள்வோம். அந்நிலத்தின் உரிமையாளன் இம்மனிதனை பிடித்து, அரசன் முன்னால் விசாரணைக்குக் கொண்டு வந்தானென்றும் வைத்துக் கொள்வோம். அப்போது அம்மனிதன் “இந்த ஆளின் வயலுக்கு நான் தீ வைக்கவில்லை. நான் அணைக்காமல் விட்டுப் போன தீயும் வயலை எரித்து சாம்பலாக்கிய தீயும் வேறு வேறானவை. எனவே நான் குற்றவாளியல்ல” என்று சொல்கிறான். அம்மனிதன் தண்டிக்கப்படத்தக்கவனா?”

”நிச்சயமாக. அவன் என்ன சொன்னாலும் பிந்தைய நெருப்பு முன்னர் பற்றி வைக்கப்பட்டதிலிருந்து வந்தது என்பதே உண்மை”

”ஆகையால் இம்மனமும் பருப்பொருளும் சேர்ந்து கருமங்களைப் புரிகின்றன. அக்கருமங்களால் இன்னொரு மனமும் பருப்பொருளும் பிறக்கிறது. ஆனால், மனமும் பருப்பொருளும் அதன் முன்னைய கருமங்களின் விளைவுகளிலிருந்து விடுதலையாவதில்லை”

(6)

”மனம்-பருப்பொருள் பற்றி விளக்கினீர்கள். எது மனம்? எது பருப்பொருள்?”

”எதெல்லாம் தூலமோ அது பருப்பொருள், எதெல்லாம் நுட்பமானவைகளோ அகம் சார்ந்த மனநிலைகளோ அது மனம்.”

“இவையிரண்டும் தனித்தனியே ஏன் பிறப்பதில்லை?”

”முட்டையின் கருவும் ஓடும் போன்றது இது. இவையிரண்டும் சேர்ந்தே எழுகின்றன ; நினைவுக்கெட்டாத காலந்தொட்டு இவைகள் இணைந்தே இருக்கின்றன.”

(7)

“நினைவுக்கெட்டாத காலம்” என்று நீங்கள் சொல்லும்போது, காலம் என்றால் என்ன? அப்படியொன்று இருக்கிறதா?”

”காலம் என்றால் கடந்தது, நிகழ்வது மற்றும் வரப்போவது. சிலருக்கு காலம் என்ற ஒன்று இருக்கிறது ; சில பேருக்கு இல்லை. எங்கு மறுபிறப்பெடுப்பவர்கள் இருக்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் காலம் என்ற ஒன்று இருக்கிறது. எங்கு மறுபிறப்பு எடுக்காமல் இருக்கப் போகிறவர்கள் இருக்கிறார்களொ, அவர்களுக்கெல்லாம் காலம் என்ற ஒன்று இல்லை”

“சரியாகச் சொன்னீர்கள் நாகசேனரே. நீங்கள் பதிலளிப்பதில் வல்லவர்”

~~~0~~~

Source : Pesala, Bhikkhu (ed.), The Debate of King Milinda: An Abridgement of the Milindapanha. Delhi: Motilal Banarsidass, 1992. Based on Rhys Davids (1890, 1894)

நன்றி : சொல்வனம் (http://solvanam.com/?p=23844)

Milinda Panha