மாதவன் முப்பது வருடங்கள் கடினமாக உழைக்கிறான். குழந்தைகளை வளர்க்கிறான் ; சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறான் ; தன் எல்லா நேரத்தையும் தன் வேலைக்காகவே ஒதுக்குகிறான். ஒரு முறை கூட “தான் செய்யும் இவ்வேலைக்கு ஏதாவது ஒரு அர்த்தம் இருக்கிறதா?” என்று கேட்டுக் கொள்வதில்லை. அவனுடைய ஒரே எண்ணம் “ நான் எந்த அளவுக்கு பிசியாக இருக்கிறேனோ, அந்த அளவுக்கு முக்கியமான ஆளாக பிறரால் கருதப்படுவேன்” என்பது தான்.
அவனுடைய குழந்தைகள் வளர்கிறார்கள். தம் படிப்பை முடிக்கிறார்கள். வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள். ஒரு நாள், மாதவனுக்கு முப்பது வருட உழைப்பின் அன்பளிப்பாக ஒரு கைக்கடிகாரமோ, பேனாவோ கிடைக்கிறது. அவனுடைய நண்பர்கள் சிலர் கண்ணீர் உதிர்க்கிறார்கள். இத்தனை நாள் அவன் ஆவலுடன் காத்திருந்த நேரம் வருகிறது. அவன் பணி ஓய்வு பெற்று விட்டான் ; அவன் செய்ய விரும்பியவற்றை எல்லாம் செய்யும் சுதந்திரம் அவனுக்கு கிடைத்து விட்டது.
முதல் சில மாதங்கள், அவ்வப்போது தன் பழைய அலுவலகத்திற்கு போவதும் பழைய நண்பர்களை சந்திப்பதுமாக செல்கின்றன. அவன் செய்ய ஆசைப்பட்ட கனவுகளில் ஒன்றும் பணி நாட்களில் அவனால் அனுபவிக்க முடியாமலும் போனதுமான – படுக்கையை விட்டு தாமதமாக துயிலெழுவதை பணி ஒய்வு பெற்ற ஆரம்ப நாட்களில் அனுபவித்து மகிழ்ச்சியுற்றான். கடற்கரை ஒரம் வாக்கிங் போவான் அல்லது ஊர் வீதியில் வலம் வருவான். வியர்வை சிந்தி அவன் சம்பாதித்த பணத்தில் அவன் வாங்கிய வீடு ஊரை விட்டு தள்ளி தொலைவில் இருக்கும் கிராமப்புறம் ஒன்றில் இருக்கிறது. தோட்டம் வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகிறான். செடிகளின் மலர்களின் உலகுக்குள் மெதுவாக ஊடுருவுகிறான். மாதவனுக்கு இப்போதெல்லாம் நிறைய நேரம் கிடைக்கிறது. அவன் சேர்த்து வைத்த பணத்தை பயன் படுத்தி சிற்சில சுற்றுலாக்களுக்கு செல்கிறான். மியூசியங்களுக்கு செல்கிறான்; பல்வேறு காலத்திய ஓவியர்களும் சிற்பிகளும் நூற்றாண்டுகள் எடுத்து வளர்த்தெடுத்த உத்திகள் பற்றியும் பாணிகள் பற்றியும் ஒரிரு மணி நேரங்களில் புரிந்து கொண்டு விடுகிறான். அவனுடைய கலாச்சார அறிவு விரிவடைவது போன்று ஒர் உணர்வு அவனுக்கு தோன்றுகிறது. நூற்றுக் கணக்கில் ஆயிரக் கணக்கில் புகைப்படங்கள் எடுத்து நண்பர்களுக்கு அனுப்புகிறான் – அவன் எத்தனை சந்தோஷமாக இருக்கிறான் என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டுமே!
மாதங்கள் நகர்கின்றன. மனிதர்கள் பின்பற்றும் விதிமுறைகளை தாவரங்கள் பின் பற்றுவதில்லை என்ற உண்மையை மாதவன் அறிந்து கொள்கிறான் – அவன் நட்டது முளை விட்டு வளர நாட்கள் பிடிக்கும் ; ஏதானும் மொட்டுகள் தென்படுகின்றனவா என்று எந்நேரமும் ரோஜாப்புதரை பார்த்துக் கொண்டிருப்பதில் பயனில்லை. ஒரு கணத்தில் அவன் சிந்தனை உண்மையானதொரு பிரதிபலிப்பை அவனுக்கு தருகிறது – அவனுடைய பயணங்களில் அவன் கண்டதெல்லாம் சுற்றுலா பேருந்தின் ஜன்னல் வழி தெரிந்த நிலத்தோற்றங்களும் 6X9 அளவுள்ள தபாலட்டையில் புகைப்படமாகியிருக்கும் நினைவுச்சின்னங்களும் மட்டுமே! உண்மையென்னவென்றால், மெய்யான மகிழ்ச்சி உணர்வை அவன் பெறவே இல்லை – அயல் நாட்டு பயணத்தை ஆழ்ந்து அனுபவித்து அடையும் ஆனந்தத்தை விட நண்பர்களிடம் பெருமை அடித்துக் கொள்ளும் ஆசையே அதிகம் இருந்தது.
அவன் தொடர்ந்து தொலைக்காட்சிச் செய்திகளைக் காண்பதும், செய்தித்தாள்களை வாசிப்பதுமாக நேரத்தை கழிக்கிறான். இத்தனை நாட்களாக நேரம் கிடைக்காமல் படிக்காமல் போன விஷயங்களை பற்றி படித்து அறிந்து கொள்வதாக நினைத்து உவகை கொள்கிறான்.
எண்ணங்களை யாரிடமாவது பகிர்ந்து கொள்ளலாமென்று யாரையாவது தேடிக் கொண்டிருக்கிறான். ஆனால் எல்லாரும் வாழ்க்கையெனும் ஆற்றில் ஓடும் வெள்ளமாக மூழ்கிக் கொண்டிருக்கிறார்கள் – பணி செய்வதும், வீட்டுக் காரியங்களில் ஈடுபடுவதும், மாதவனிடம் இருக்கும் மிதமிஞ்சிய நேரத்தைப் பார்த்து பொறாமைப்படுவதுமாக இருக்கிறார்கள் ; அதே சமயத்தில் சமூகத்திற்கு “பயனுள்ளதாக” இருப்பதாக எண்ணி திருப்தியுற்று ஏதாவது “முக்கியமான”தொன்றை “செய்து” கொண்டிருக்கிறார்கள்.
மாதவன் தன் குழந்தைகளிடம் ஆறுதல் தேடுகிறான். அவர்கள் அவனை அன்புடன் நடத்துகிறார்கள். – அவன் ஒரு சிறந்த அப்பாவாக அவர்களுக்கு இருந்திருக்கிறான் ; நேர்மையின் அர்ப்பணிப்பின் முழுச்சின்னம் – ஆனால் அவர்களுக்கும் கவலைகள் இருக்கின்றன. இருந்தாலும், ஞாயிற்றுக் கிழமை மதிய உணவை தம் தந்தையுடன் சேர்ந்து உண்பதை தம் கடமையாக கருதுகிறார்கள்.
மாதவன் ஒரு சுதந்திரமான மனிதன் ; ஒரளவு வசதி மிக்கவன் ; தகவல் அறிவு நிறைந்தவன் ; குறை கூற முடியாத கடந்த கால வாழ்க்கை உடையவன். ஆனால், அவன் இப்போது என்ன செய்வான்? கஷ்டப்பட்டு அவன் பெற்ற சுதந்திரத்தை வைத்துக் கொண்டு அவன் என்ன பண்ண வேண்டும்? எல்லோரும் அவனுக்கு வணக்கம் சொல்லுகிறார்கள். மரியாதையுடன் நடத்துகிறார்கள். ஆனால் யாரும் அவனுக்கு நேரம் தருவதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக மாதவன் துக்கப்பட தொடங்குகிறான் ; சமூகத்திற்காகவும் குடும்பத்திற்காகவும் நீண்ட காலம் அவன் உழைத்திருந்தாலும், தன்னை பயனற்றவனாக கருதத் துவங்குகிறான்.
ஒரு நாள் தூக்கத்தில் அவன் கனவில் ஒரு தேவதை வருகிறது. “நீ உன் வாழ்க்கையை வைத்துக்கொண்டு என்ன செய்திருக்கிறாய்? நீ கண்ட கனவுகளின் படி உன் வாழ்க்கையை நடத்தினாயா?”
இன்னொரு நீளமான தினம் துவங்குகிறது. செய்தித்தாள்கள். தொலைக்காட்சி. தோட்டம். மதிய உணவு. சின்ன தூக்கம். அவன் என்ன செய்ய விரும்புகிறானோ அவற்றையெல்லால் அவன் செய்யலாம். ஆனால் தற்போது அவன் எதுவும் செய்ய விரும்பாதவனாக உணர்கிறான். மாதவன் துக்கம் மிகுந்த சுதந்திர மனிதன் ; மனத்தளர்ச்சிக்கு முந்தைய நிலையில் இருக்கிறான். ஏனென்றால் அவன் தன் வாழ் நாள் முழுவதும் வாழ்வின் அர்த்தத்தை சிந்திக்க நேரமில்லாமல் உழைத்துக் கொண்டிருந்தான் ; வருடங்களையெல்லாம் வீணாக ஓட விட்டுக் கொண்டிருந்தான். ஒரு கவிஞனின் சொற்கள் அவனுக்கு நினைவில் வருகின்றன :
”அவர் வாழ்க்கையை கடந்து மட்டுமே சென்றார் ; வாழவில்லை”
ஆயினும் இதை ஏற்க ரொம்ப கால தாமதமாகி விட்டது. எனவே ”டாபிக்”கை மாற்றிக்கொள்வதே சிறந்தது. கஷ்டப்பட்டு அவனுக்கு கிட்டிய சுதந்திரம் ஒரு மறைமுகமான நாடு கடத்தல் போல ஆகிவிட்டது.
[TRANSLATED FROM THE BOOK – LIKE THE FLOWING RIVER – BY PAULO COELHO, CHAPTER HEADING : MANUEL IS A FREE MAN]
படித்தவுடன் தோன்றியது – மை காட்! கடவுள் நம்பிக்கை என்று ஏதும் இல்லாவிட்டாலும் பழக்கத்தால் தோன்றியது. அது கிடக்கட்டும். என் எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது என்பது பாவ்லோவுக்கு எப்படித் தெரிந்தது என்பதுதான் புரியவில்லை.