சேறும் கழிப்பிடமும்


சேறு

சேறில் விழுந்த அனுபவம் ஒன்று அண்மையில் ஏற்பட்டது. அலுவலகம் முடிந்து மெட்ரோ ரயில் நிலையம் வரை ஆட்டோ ரிக்‌ஷாவில் செல்வது வழக்கம். என்றுமில்லாத அதிசயமாக ஒரு மாலையில் கேட்-டுக்கருகில் என் அதிகாரி என்னை தன் காரில் ஏற்றிக் கொண்டு சென்றார். அவர் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் மெட்ரோ ரயில் நிலையத்தில் விட்டு விடுவதாக திட்டம். வழக்கமாக அவருடைய காரில் பயணிக்கும் செகரட்டரி ஷிகா அன்று வேலைக்கு வராததால், இப்பாக்கியம் எனக்கு கிடைத்தது.

செக்டர் 55-ஐ அடைய இரண்டு வழிகள் இருந்தன. ஒன்று NH-8 வழியாக மானேசர் டால், ஹீரோ ஹோண்டா சௌக், ஜர்சா ஜங்ஷன்…பிறகு சிக்னேச்சர் டவரிலிருந்து வலப்புறம் திரும்பி கால்ஃப் கோர்ஸ் ரோடு வழியாக செக்டர் 55-ஐ அடைவது. இன்னொன்று, மானேசர் டால் தாண்டியவுடன் ராங் சைட் எடுத்து வலப்புற சர்வீஸ் ரோடில் நுழைந்து நூறடி தாண்டிய பிறகு வலப்புறம் செல்லும் காட்டு வழியாக செல்வது.

“காட்டு வழி” என்றால் நிஜமாகவே காடு அல்ல. காடு மிக சீக்கிரமாகவே நகரமாகிக் கொண்டிருந்தது. அங்கும் இங்குமாக ராட்சத கட்டிடங்கள் முளைத்த வண்ணம் இருக்கின்றன. ஆனால் பாதை மட்டும் மண் பாதைதான். இந்தியாவின் சில பிரபலமான கட்டிட நிறுவனங்களின் ஆடம்பர அபார்ட்மெண்டுகள் வானத்தை தொட்டன. பாதைகளோ, கடைகண்ணிகளோ இல்லாத இடத்தில் யார் வீடுகளை வாங்குவார்கள் என்று எனக்கு தோன்றிய கவலை கட்டிட நிறுவனங்களுக்கு இருந்ததாக தெரியவில்லை.

மண் பாதைக்குள் நுழையும் வரை அலுவலகத்தின் என் சக ஊழியர்களை பற்றி ஏதேனும் வம்பை என் வாயிலிருந்து வரவழைக்கும் எண்ணத்தில் வேண்டுவிடை தரும் வினாக்களாக கேட்டுக் கொண்டு வந்தார் பாஸ். நான் மசியவில்லை. ஷார்ட்-பிட்ச் பந்துகளுக்கு தலையை குனியும் பேட்ஸ்மேன் போல எந்த விடைகளையும் தராமல் சமாளித்தேன்.

நான் சேறு என்று சொன்னது பாஸின் காரில் சேர்ந்து பயணம் பண்ணுவதை குறிக்கும் உருவகமாக என்று நினைத்திட வேண்டாம். புதர்களாக மண்டிக்கிடந்த ஒரிடத்தில் மூன்று மண் பாதைகள் பிரிந்தன. நன்றாக இருட்டிவிட்டிருந்தது. பாஸ் அமைதியாக என்னைப் பார்த்தார். நான் ஒன்றும் சொல்லவில்லை. வலப்புறமாக பிரிந்த பாதையில் வண்டிகள் சென்ற தடங்கள் தெரிந்தன. டக்கென்று பாஸ் காரை அந்த பாதையில் திருப்பினார் (வீசினார் என்று தான் சொல்ல வேண்டும்!). பாதை இறங்கியது. இல்லை…பாதை இல்லை. கார் இறங்கியது. இருட்டு காரணமாக மண்ணில் படிந்திருந்த ஈரம் தெரியாமல் போனது. காரின் டயர் ஈர மண்ணில் புதைந்தது. கார் முன்னாலும் செல்லவில்லை. பின்னாலும் செல்லவில்லை. பாஸ் குற்றவுணர்வுடன் பார்த்தார்.

நான் இறங்க எத்தனித்தேன். ஜவ்வு மாதிரி ஏதோவொன்றில் என் ஷூ ஒட்டியது. நான் ஒரு சகதியில் இறங்கியிருக்கிறேன். இரண்டு ஷூவும் ஆழ மண்ணில் பதிந்திருந்தன. நான் மிகுந்த விசையுடன் ஒரு காலை எடுக்க முயற்சித்த போது சாக்ஸ் அணிந்த பாதம் மட்டும் வெளி வந்தது. உடல் சமநிலை தவறி சாக்ஸ் அணிந்த ஒற்றைக் காலை சேற்றிலேயே வைக்க வேண்டியதாகிவிட்டது. கால் சேற்றில் மூழ்கா வண்ணம் காக்கிறவன் போல் என் கையை காலிடம் கொண்டு போவதற்காக குனிகையில் மீண்டும் ஒரு சறுக்கல். சேற்றிலேயே விழுந்து என் புட்டம் சேறில் உட்கார்ந்துவிட்டது. சுதாரித்து எழுந்து நின்றேன். கழண்டு போன ஷூவை கையில் எடுத்தேன். ஸ்லோ-மோஷனில் மெல்ல சேறை விட்டு வெளியே வந்தேன்.

தர்ம சங்கடத்துடன் பாஸ்-சை நோக்கினேன். பாஸ் நான் சேறில் விழுந்ததை கண்டு கொள்ளவில்லை. அவர் டிரைவர் சீட்டில் இருந்து இறங்கி யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்தார். அவர் இறங்கிய பக்கத்தில் சேறு இருக்கவில்லை. சேறுக்குள் வண்டியை ஒட்டிச் சென்றாலும் சேற்றில் காலை வைக்காமல் அவர் இறங்கிவிட்டார். அவர் வீட்டு வாட்ச்மேன் ஒரு ஜீப்பை அனுப்பினான். இரும்புச் சங்கிலியைக் கட்டி ஜீப்பால் கார் பின்னால் இழுக்கப் பட்டது. செக்டர் 55 வந்தடைந்ததும் நான் காரில் இருந்து இறங்கினேன். சேறு பூசிய கால் சட்டையுடன் மெட்ரோ ஸ்டேஷனுக்குள் நுழைய அவமானமாக இருந்தது. ரேடியோ கேப் ஒன்றை பிடித்து வீடு வந்தடைந்தேன் (டாக்ஸி ஃபேர் : 800 ரூபாய்). கேப் டிரைவர் இறங்கும் போது நான் உட்கார்ந்திருந்த சீட்டில் பூசியிருந்த மண்ணைப் பார்த்து முணுமுணுத்தான். வீட்டில் மனைவி ”என்ன அசிங்கம் பண்ணிட்டு வந்திருக்கீங்க?” என்று சத்தம் போட்டாள்.

சுத்தமாக குளித்து விட்டு ஷுவில் ஒட்டியிருந்த சகதியை நீக்க ஆரம்பித்தேன். ஒருவாறு ஷூக்களை சுத்தம் செய்த பின்னர், ’நாளை ஷிகா ஆஃபீசுக்கு வந்தால் தேவலை’ என்ற எண்ணம் ஓடியது. ஷிகாவுடன் போகும்போதும் பாஸ் இன்று வந்த காட்டுப் பாதை வழியாகத்தான் போவாரா?


கழிப்பிடம்

குஜராத்தில் உள்ள ஒரு பெரிய கூட்டுறவு நிறுவனத்துக்கு நாங்கள் சப்ளை செய்திருந்த சாக்கலேட் சுவை தரும் வாசனைப் பொடியை தரப்பிரச்னை காரணமாக நிராகரித்து விட்டார்கள். ஃபோனில் நன்கு டோஸ் அளித்துவிட்டு நேரில் வாருங்கள் என்று வாடிக்கையாளர் ஆணையிட்டார். அடுத்த நாள் காலை குஜராத் கிளம்பிப் போனேன். நான் செய்த தவறு – குஜராத் செல்கிறேன் என்று முன்னரே இதைப் பற்றி பாஸுக்கு சொல்லாதது. இதனால் பாஸ் ரொம்ப கோபம் அடைந்து விட்டார். நான் வாடிக்கையாளரின் வசவுகளை நேரில் வாங்கிக் கொண்டிருக்கும் போதே ஃபோன் மூலமாக பாஸின் திட்டுகளையும் கேட்டுக் கொண்டிருந்தேன். மாதமொரு முறை லண்டன் தலைமை அலுவலகத்துடன் நிகழும் மாதாந்திர பிசினஸ் ரிவ்யூ டெலி-கான்ஃபரென்ஸ் நடக்கும் தினம் பார்த்து நான் குஜராத் போனது தவறு தான். கஸ்டமர் ஆணையிட்டாலும் அதிகாரின் ஆணை தானே முதன்மையானது. மீட்டிங் முடிந்தவுடன் உடன் அடுத்த விமானத்திலேயே தில்லி திரும்ப வருமாறு அறிவுறுத்தப்பட்டேன்.

ஏற்கெனவே செய்திருந்த முன்பதிவை மாற்றினேன்; மதியம் இரண்டு மணி கிளம்பும் விமானத்தை பிடிப்பதற்காக காரோட்டியை அகமதாபாதை நோக்கி வேகமாக காரை செலுத்தச் சொன்னேன். ஒன்றரை மணி நேரத்தில் காந்தி நகரை எட்டினோம். “சார், நான் கார் ஓட்டும் பணிக்கு புதிதாக வந்தவன். எனக்கு வாந்தி வருகிற மாதிரி தோன்றுகிறது. சில நிமிஷங்களுக்கு காரை நிறுத்தட்டுமா?” என்று கேட்டான் டிரைவர்.

ஒரு பழைய கட்டிடம் முன்னால் காரை நிறுத்தினான் டிரைவர். “சார் நிம்பு பானி (லெமன் ஜூஸ்”) குடித்து விட்டு வந்து விடுகிறேன்” என்றான். எனக்கும் அடிவயிறு முட்டிக் கொண்டு வந்தது. அவசரமாக போக வேண்டும். நானும் காரில் இருந்து இறங்கி,கழிப்பிடம் எங்காவது இருக்குமா என்று பார்த்தேன். வாயில் வெற்றிலையை குதப்பிய வண்ணம் சிகரெட் பிடித்துக் கொண்டு நின்றிருந்த ஒருவரை கேட்டேன். “இக்கட்டிடத்தின் உள்ளே படிக்கட்டுகளுக்கு பக்கத்தில் இருக்கும்” என்றார்.

நான் வேகமாக கழிப்பிடத்தை அணுகினேன். ஒரே இருட்டாக இருந்தது. லைட்டை போட மாட்டார்களோ? யூரினல்கள் கூட தெரியவில்லை. அவ்வளவு இருட்டு. வேறு கழிப்பிடத்தை தேடி போகலாமா என்று ஒரு நொடி யோசித்தேன். சிறுநீர் தானே கழிக்க வேண்டும்! இதற்கு லைட் எதற்கு? குத்து மதிப்பாக ஒர் இடத்தில் நின்று கொண்டு ஜிப்பை திறந்து சிறுநீர் கழிக்க ஆரம்பித்தேன். அப்போது தான் குப்பென்று அடித்தது துர்வாசனை. வயிற்றை குழப்பிக் கொண்டு வந்தது. ஒரே சிறுநீர் நாற்றம். கழித்துக் கொண்டிருக்கிற சிறுநீரை நிறுத்த முடியாதே! இரண்டு மணி நேரம் காரில் ஏ சி யில் பயணித்த காரணத்தினாலோ என்னவோ, சிறு நீர் வந்து கொண்டே இருந்தது. வாந்தி எடுக்கிற உணர்வு முட்டியது. நெடுநாளாக சுத்தம் செய்யப்படாத அக்கழிப்பிடத்தின் துர்வாசனையில் திக்குமுக்காடிப்போனேன். சிறு நீர் கழித்து முடித்தவுடன் அவசரமாக ஜிப்பை போட்டுக்கொண்டு வெளியேறும் தருணத்தில், திடீரென்று லைட் எறிய ஆரம்பித்தது. மின்சாரம் திரும்பியிருக்கக் கூடும். மிகச் சில வினாடிகளுக்கு ஓட்டையான யூரினல்களையும் வடியாமல் தேங்கிக் கிடந்த சிறுநீர் வெள்ளத்தையும் பார்த்தேன். முடியவில்லை. வாயை அடைத்துக் கொண்டே வெளியே ஓடி வந்தேன். கட்டிட வாசலில் கட்டுப் படுத்த முடியாமல் வாந்தியெடுக்கும் போது என் கைகள் என் வாந்தியால் ஈரமாகியிருந்தன. நான் வாந்தியெடுப்பதை பார்த்து நிம்பு பானி குடித்துக் கொண்டிருந்த டிரைவர் எனக்காக இன்னொரு பாட்டில் நிம்பு பானி வாங்கி வந்தான். அந்த பாட்டிலை நான் கடைசி வரை திறக்கவில்லை. பல மணி நேரங்களுக்கு எதையும் சாப்பிடவோ குடிக்கவோ முடியவில்லை.

பின் குறிப்பு : நான் அனுப்பிய ஒரு சிறுகதை பிரசுரிக்கத் தக்கதல்ல என்று ஒர் இலக்கிய இதழ் திருப்பி அனுப்பி விட்டது. ”off-beat கதைகளை மட்டுமே நாங்கள் போடுகிறோம். எங்கள் இதழில் வெளி வரும் கதைகளை தொடர்ந்து படியுங்கள். எப்படியான கதைகளை எங்கள் எடிட்டோரியல் போர்டு தேர்வு செய்கிறது என்று உங்களுக்கு புரியும்” என்றார்கள். அவ்விதழின் கடந்த பத்து இதழ்களில் வெளியான சிறுகதைகளை ஒன்று விடாமல் வாசித்தேன். அக்கதைகளில் அதிகமாக வந்த தீம்-ஐ குறிச்சொல்லாக வைத்து கதை எழுதுவது என்று முடிவு செய்தேன். அப்படியான ஒரு முயற்சிதான் இந்த இடுகை. அப்பத்திரிக்கையின் இம்மாத இதழில் ஒரு சிறுகதையும் வெளியாகவில்லை. இப்பதிவை நான் முன்னரே எழுதி, அவர்களுக்கு அனுப்பியிருந்தால் ஒரு வேளை வந்திருக்கலாம்.

மாதவன் சொர்க்கம் செல்கிறான் – பகுதி 3

ஒரு குறிப்பிட்ட நேரத்தில் விழித்துக்கொள்ளும் கட்டாயமில்லாமல், தன் நேரத்தை தன் விருப்பப்படி பயனபடுத்திக்கொண்டு பணி ஓய்வு பெற்ற ஆரம்ப நாட்களை அனுபவித்தான் மாதவன். ஆனால் மிக விரைவில் மனத்தளர்ச்சிக்கு ஆளானான். தன்னை எதற்கும் பயனற்றவனாக எண்ணத் துவங்கினான் ; சமூகத்திலிருந்து தள்ளி வைக்கப்பட்டவன் போல் வளைய வந்தான் ; வளர்ந்து விட்ட தம் குழந்தைகளால் கைவிடப்பட்டவனானான் ; “நான் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறேன்?” என்னும் மிகப் பழைய வினாவுக்கு பதில் தேடும் சிரமத்தை அவன் என்றுமே எடுத்துக்கொண்டிராத காரணத்தால் வாழ்வின் அர்த்தத்தை புரிந்து கொள்ளும் திறனற்றுப் போனான்.

நேர்மையுடனும், சமர்ப்பண உணர்வுடனும் வாழ்ந்த மாதவன் ஒரு நாள் இறந்து போகிறான் – இவ்வுலகில் வாழும் சண்முகங்களுக்கும், பொன்னுசாமிகளுக்கும், கமலாக்களுக்கும் சாரதாக்களுக்கும் எல்லாருக்கும் நிகழ்வது தான். இவ்விடத்தில் மாதவனுக்கு அடுத்து என்ன நடக்கிறது என்பதை ஹென்ரி ட்ரம்மாண்ட் என்பவர் – ”தி க்ரேட்டஸ்ட் திங் இன் தி வேர்ல்ட்” என்ற அருமையான புத்தகத்தில் எழுதிய – வரிகளிலேயே விவரிக்கிறேன்.

முந்தைய காலங்களில் இருந்தே மக்கள் ஒரு கேள்வியை மாறாமல் கேட்டு வந்திருக்கிறார்கள் : உயர்ந்த நன்மை எது? உன் முன்னால் ஒரு வாழ்க்கை இருக்கிறது. அதை நீ ஒரு முறைதான் வாழ இயலும். மேன்மையான விருப்பப் பொருள், நாடத்தக்க உயர்ந்த பரிசு எது?

உலகின் மிகச் சிறந்த விஷயம் நம்பிக்கை தானென நமக்கு பல ஆண்டுகளாக சொல்லப் பட்டு வந்திருக்கிறது. நூற்றாண்டுகளாக பிரசித்தமான மதத்தின் பிரதான கருத்தை சொல்லும் முயற்சியில் நம்பிக்கை எனும் சொல் அதிகம் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. நாமும் அதை முக்கியமான விஷயமாக எடுத்துக் கொள்ள எளிதில் பழக்கப்பட்டு விட்டோம். ஆனால் நம் நோக்கு தவறு. அதுவே சொல்லப் பட்டிருக்கிறது என்று நாம் நம்புவோமானால், நம் வழி தவறும் வாய்ப்பு அதிகமாகும். 1 கோரிந்தியரின் 13வது அதிகாரம் நம்மை கிறித்துவத்தின் மையத்துக்கு எடுத்துச் செல்கிறது ; அங்கு நாம் வாசிப்பது “இவற்றுள் அன்பே தலைசிறந்தது”

இது பிழையன்று. நம்பிக்கை பற்றி சில வரிகளுக்கு முன்னால் பால் குறிப்பிட்டிருக்கிறார். அவர் சொல்கிறார் : “மலைகளை இடம்பெயரச் செய்யும் அளவுக்கு நிறைந்த நம்பிக்கை கொண்டிருப்பினும் என்னிடம் அன்பு இல்லையேல் நான் ஒன்றுமில்லை” மறக்காமல், அடுத்து சில வரிகளில் வேண்டுமென்றே அவர் முரண் படுகிறார் ; “ஆக, நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன” உடன், கணத்தயக்கமில்லாமல் முடிவை அறிவிக்கிறார் “இவற்றுள் அன்பே தலைசிறந்தது”

இந்த கதையில், மாதவன் மரண நேரத்தில் காப்பாற்றப் படுகிறான் ; வாழும் வாழ்விற்கோர் அர்த்தத்தை தரும் முயற்சியில் மாதவன் ஈடுபடவில்லையெனினும், அவன் அன்பு செலுத்தினான் ; குடும்பத்தை அன்புடன் பராமரித்தான் ; கண்ணியமான முறையில் உழைத்தான். அவனுடைய வாழ்க்கை சுப முடிவை பெற்றிருந்தாலும், அவனுடைய கடைசி நாட்கள் சிக்கலானவையாக இருந்தன.

சிமொன் பெரஸ் ஒரு முறை வேர்ல்ட் எகனாமிக் ஃபோரமில் ஆற்றிய உரையில் காட்டிய மேற்கொள் ஒன்றை இங்கு பங்கிட விரும்புகிறேன் “நன்னம்பிக்கை உள்ளவர் நன்னம்பிக்கை அற்றவர் இருவருமே முடிவில் இறந்து போகிறார்கள் ; ஆனால் இருவரும் தனித்தனி வழிகளில் தத்தம் வாழ்க்கையை வாழ்கிறார்கள்”

[TRANSLATED FROM THE BOOK – LIKE THE FLOWING RIVER – BY PAULO COELHO, CHAPTER HEADING : MANUEL GOES TO PARADISE]

சாம்பல் நிறம்

யதார்த்தத்தின் நிறம்.
இருட்டு, வெளிச்சம் – இவற்றின்
கலவை.
களைத்துப் போன வானம்
போர்த்திக்கொள்ளும் அமைதி.
ஒளிரும் பகலை
தன் கைகளால் தாழடைக்கும்
இரவின் நிழல்.
இளம் கருநிறச்சாயலில்
மெல்ல கட்டவிழும் பதாகை.
கனிந்த, முதிர்ந்த இசைக்குள் ஐக்கியமாகப் போகும்
இளம் சுருதி.
அதிரப் போகும் இடி மற்றும்
பெய்யப் போகும் மழைக்கான அறிகுறி.
சொற்களின் செயல்களின் நிறம்.
கறுப்புமின்றி வெளுப்புமின்றி
இரண்டுக்கும் நடுவிலான
சாம்பல் நிறம் ; ஒப்புதலின் நிறம்.

(பேராசிரியர் மாலதி மாதுர் எழுதிய ஆங்கில கவிதை – “Grey”- யின் தழுவல்)

நன்றி : மாற்றுப்பிரதி (http://maatrupirathi.blogspot.in/2012/10/blog-post_9.html)

மாதவன் ஒரு சுதந்திர மனிதன் – பகுதி 2

மாதவன் முப்பது வருடங்கள் கடினமாக உழைக்கிறான். குழந்தைகளை வளர்க்கிறான் ; சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறான் ; தன் எல்லா நேரத்தையும் தன் வேலைக்காகவே ஒதுக்குகிறான். ஒரு முறை கூட “தான் செய்யும் இவ்வேலைக்கு ஏதாவது ஒரு அர்த்தம் இருக்கிறதா?” என்று கேட்டுக் கொள்வதில்லை. அவனுடைய ஒரே எண்ணம் “ நான் எந்த அளவுக்கு பிசியாக இருக்கிறேனோ, அந்த அளவுக்கு முக்கியமான ஆளாக பிறரால் கருதப்படுவேன்” என்பது தான்.

அவனுடைய குழந்தைகள் வளர்கிறார்கள். தம் படிப்பை முடிக்கிறார்கள். வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள். ஒரு நாள், மாதவனுக்கு முப்பது வருட உழைப்பின் அன்பளிப்பாக ஒரு கைக்கடிகாரமோ, பேனாவோ கிடைக்கிறது. அவனுடைய நண்பர்கள் சிலர் கண்ணீர் உதிர்க்கிறார்கள். இத்தனை நாள் அவன் ஆவலுடன் காத்திருந்த நேரம் வருகிறது. அவன் பணி ஓய்வு பெற்று விட்டான் ; அவன் செய்ய விரும்பியவற்றை எல்லாம் செய்யும் சுதந்திரம் அவனுக்கு கிடைத்து விட்டது.

முதல் சில மாதங்கள், அவ்வப்போது தன் பழைய அலுவலகத்திற்கு போவதும் பழைய நண்பர்களை சந்திப்பதுமாக செல்கின்றன. அவன் செய்ய ஆசைப்பட்ட கனவுகளில் ஒன்றும் பணி நாட்களில் அவனால் அனுபவிக்க முடியாமலும் போனதுமான – படுக்கையை விட்டு தாமதமாக துயிலெழுவதை பணி ஒய்வு பெற்ற ஆரம்ப நாட்களில் அனுபவித்து மகிழ்ச்சியுற்றான். கடற்கரை ஒரம் வாக்கிங் போவான் அல்லது ஊர் வீதியில் வலம் வருவான். வியர்வை சிந்தி அவன் சம்பாதித்த பணத்தில் அவன் வாங்கிய வீடு ஊரை விட்டு தள்ளி தொலைவில் இருக்கும் கிராமப்புறம் ஒன்றில் இருக்கிறது. தோட்டம் வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகிறான். செடிகளின் மலர்களின் உலகுக்குள் மெதுவாக ஊடுருவுகிறான். மாதவனுக்கு இப்போதெல்லாம் நிறைய நேரம் கிடைக்கிறது. அவன் சேர்த்து வைத்த பணத்தை பயன் படுத்தி சிற்சில சுற்றுலாக்களுக்கு செல்கிறான். மியூசியங்களுக்கு செல்கிறான்; பல்வேறு காலத்திய ஓவியர்களும் சிற்பிகளும் நூற்றாண்டுகள் எடுத்து வளர்த்தெடுத்த உத்திகள் பற்றியும் பாணிகள் பற்றியும் ஒரிரு மணி நேரங்களில் புரிந்து கொண்டு விடுகிறான். அவனுடைய கலாச்சார அறிவு விரிவடைவது போன்று ஒர் உணர்வு அவனுக்கு தோன்றுகிறது. நூற்றுக் கணக்கில் ஆயிரக் கணக்கில் புகைப்படங்கள் எடுத்து நண்பர்களுக்கு அனுப்புகிறான் – அவன் எத்தனை சந்தோஷமாக இருக்கிறான் என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டுமே!

மாதங்கள் நகர்கின்றன. மனிதர்கள் பின்பற்றும் விதிமுறைகளை தாவரங்கள் பின் பற்றுவதில்லை என்ற உண்மையை மாதவன் அறிந்து கொள்கிறான் – அவன் நட்டது முளை விட்டு வளர நாட்கள் பிடிக்கும் ; ஏதானும் மொட்டுகள் தென்படுகின்றனவா என்று எந்நேரமும் ரோஜாப்புதரை பார்த்துக் கொண்டிருப்பதில் பயனில்லை. ஒரு கணத்தில் அவன் சிந்தனை உண்மையானதொரு பிரதிபலிப்பை அவனுக்கு தருகிறது – அவனுடைய பயணங்களில் அவன் கண்டதெல்லாம் சுற்றுலா பேருந்தின் ஜன்னல் வழி தெரிந்த நிலத்தோற்றங்களும் 6X9 அளவுள்ள தபாலட்டையில் புகைப்படமாகியிருக்கும் நினைவுச்சின்னங்களும் மட்டுமே! உண்மையென்னவென்றால், மெய்யான மகிழ்ச்சி உணர்வை அவன் பெறவே இல்லை – அயல் நாட்டு பயணத்தை ஆழ்ந்து அனுபவித்து அடையும் ஆனந்தத்தை விட நண்பர்களிடம் பெருமை அடித்துக் கொள்ளும் ஆசையே அதிகம் இருந்தது.

அவன் தொடர்ந்து தொலைக்காட்சிச் செய்திகளைக் காண்பதும், செய்தித்தாள்களை வாசிப்பதுமாக நேரத்தை கழிக்கிறான். இத்தனை நாட்களாக நேரம் கிடைக்காமல் படிக்காமல் போன விஷயங்களை பற்றி படித்து அறிந்து கொள்வதாக நினைத்து உவகை கொள்கிறான்.

எண்ணங்களை யாரிடமாவது பகிர்ந்து கொள்ளலாமென்று யாரையாவது தேடிக் கொண்டிருக்கிறான். ஆனால் எல்லாரும் வாழ்க்கையெனும் ஆற்றில் ஓடும் வெள்ளமாக மூழ்கிக் கொண்டிருக்கிறார்கள் – பணி செய்வதும், வீட்டுக் காரியங்களில் ஈடுபடுவதும், மாதவனிடம் இருக்கும் மிதமிஞ்சிய நேரத்தைப் பார்த்து பொறாமைப்படுவதுமாக இருக்கிறார்கள் ; அதே சமயத்தில் சமூகத்திற்கு “பயனுள்ளதாக” இருப்பதாக எண்ணி திருப்தியுற்று ஏதாவது “முக்கியமான”தொன்றை “செய்து” கொண்டிருக்கிறார்கள்.

மாதவன் தன் குழந்தைகளிடம் ஆறுதல் தேடுகிறான். அவர்கள் அவனை அன்புடன் நடத்துகிறார்கள். – அவன் ஒரு சிறந்த அப்பாவாக அவர்களுக்கு இருந்திருக்கிறான் ; நேர்மையின் அர்ப்பணிப்பின் முழுச்சின்னம் – ஆனால் அவர்களுக்கும் கவலைகள் இருக்கின்றன. இருந்தாலும், ஞாயிற்றுக் கிழமை மதிய உணவை தம் தந்தையுடன் சேர்ந்து உண்பதை தம் கடமையாக கருதுகிறார்கள்.

மாதவன் ஒரு சுதந்திரமான மனிதன் ; ஒரளவு வசதி மிக்கவன் ; தகவல் அறிவு நிறைந்தவன் ; குறை கூற முடியாத கடந்த கால வாழ்க்கை உடையவன். ஆனால், அவன் இப்போது என்ன செய்வான்? கஷ்டப்பட்டு அவன் பெற்ற சுதந்திரத்தை வைத்துக் கொண்டு அவன் என்ன பண்ண வேண்டும்? எல்லோரும் அவனுக்கு வணக்கம் சொல்லுகிறார்கள். மரியாதையுடன் நடத்துகிறார்கள். ஆனால் யாரும் அவனுக்கு நேரம் தருவதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக மாதவன் துக்கப்பட தொடங்குகிறான் ; சமூகத்திற்காகவும் குடும்பத்திற்காகவும் நீண்ட காலம் அவன் உழைத்திருந்தாலும், தன்னை பயனற்றவனாக கருதத் துவங்குகிறான்.

ஒரு நாள் தூக்கத்தில் அவன் கனவில் ஒரு தேவதை வருகிறது. “நீ உன் வாழ்க்கையை வைத்துக்கொண்டு என்ன செய்திருக்கிறாய்? நீ கண்ட கனவுகளின் படி உன் வாழ்க்கையை நடத்தினாயா?”

இன்னொரு நீளமான தினம் துவங்குகிறது. செய்தித்தாள்கள். தொலைக்காட்சி. தோட்டம். மதிய உணவு. சின்ன தூக்கம். அவன் என்ன செய்ய விரும்புகிறானோ அவற்றையெல்லால் அவன் செய்யலாம். ஆனால் தற்போது அவன் எதுவும் செய்ய விரும்பாதவனாக உணர்கிறான். மாதவன் துக்கம் மிகுந்த சுதந்திர மனிதன் ; மனத்தளர்ச்சிக்கு முந்தைய நிலையில் இருக்கிறான். ஏனென்றால் அவன் தன் வாழ் நாள் முழுவதும் வாழ்வின் அர்த்தத்தை சிந்திக்க நேரமில்லாமல் உழைத்துக் கொண்டிருந்தான் ; வருடங்களையெல்லாம் வீணாக ஓட விட்டுக் கொண்டிருந்தான். ஒரு கவிஞனின் சொற்கள் அவனுக்கு நினைவில் வருகின்றன :

”அவர் வாழ்க்கையை கடந்து மட்டுமே சென்றார் ; வாழவில்லை”

ஆயினும் இதை ஏற்க ரொம்ப கால தாமதமாகி விட்டது. எனவே ”டாபிக்”கை மாற்றிக்கொள்வதே சிறந்தது. கஷ்டப்பட்டு அவனுக்கு கிட்டிய சுதந்திரம் ஒரு மறைமுகமான நாடு கடத்தல் போல ஆகிவிட்டது.

[TRANSLATED FROM THE BOOK – LIKE THE FLOWING RIVER – BY PAULO COELHO, CHAPTER HEADING : MANUEL IS A FREE MAN]

விபத்து

காற்றடித்த வேகத்தில்
காம்பொடிந்து தலை சாய்ந்த மலருக்குள்
தேன் குடித்த களைப்பில்
படுத்திருந்த பூச்சி
தலை குப்புர
தரையில் விழ
அதன் உடலொட்டிய
மகரந்தத் தூள் சிதறி
பக்கத்து செடியில்
பூத்திருந்த பூவுக்குள் சேர்ந்தது.

நன்றி : மாற்றுப்பிரதி (http://maatrupirathi.blogspot.in/2012/10/blog-post_9.html)

வழித்துணை

வழித்துணை

குண்டும் குழியும் தாண்டிய
களைப்பில் நின்று போனது கார்.
ஓட்டுனர் போராடினார்
மற்ற வாகனங்கள் சத்தமிட்டன.
புதிதாக முளைத்திருந்த
மாலை நிலா
பின்னிருக்கையில் இருந்த
என்னைப் பார்த்துச் சிரித்தது

இருட்டு பரவிய
நெடுஞ்சாலையில்
வழி நெடுக
வந்தது முழு நிலா.

நகர எல்லையில்
காரணம் புரியாமல்
ஸ்தம்பித்திருந்த போக்குவரத்தில்
முதலெது முடிவெது என்றறியாமல்
நீண்டிருந்த வாகனவரிசையில்
ஓய்வற்று காத்திருக்கையில்
பார்வையிலிருந்து
தொலைந்து போனது
பால் நிலா.

தொட்டுத் துழாவி
இருட்டான மாடிப்படிகளில் ஏறி
வீட்டுக் கதவை திறந்து
உள்ளே செல்கையில்
மின்னொளியில்லாமலேயே
வரவேற்பறையெல்லாம் வெள்ளொளி.
ஜன்னல் வழி தெரிந்த துண்டு வானத்தில்
சிரித்துக் கொண்டிருந்தது அழகு நிலா.

நன்றி : நவீனவிருட்சம் (http://navinavirutcham.blogspot.in/2012/10/blog-post.html)

நூல்

இழுத்துக்கட்டிய
நூல் பொம்மையென
வார்த்தைகள் கட்டி உருவானது கவிதை.
கட்டின் முடிச்சு இறுக்கம் தளர்ந்திருப்பது
பொருட் படுத்தப்படாமல்
புத்தக அலமாரியை அலங்கரித்தது.
சீக்கிரமே
கருத்து கலைந்து
அர்த்தம் அவிழ்ந்து விழ
வண்ண வண்ண நூல்களாய்
வரிகள் மட்டும் மிச்சமிருந்தன.

நன்றி : மாற்றுப்பிரதி (http://maatrupirathi.blogspot.in/2012/10/blog-post_9.html)