மாதவன் எனும் முக்கியமான மனிதன் – பகுதி 1

மாதவனுக்கு எப்போதும் பிஸியாக இருக்க வேண்டும். அப்படியிராவிடில், தன்னுடைய வாழ்க்கைக்கு அர்த்தமில்லையென்று அவன் நினைக்கத் தொடங்கிவிடுவான் ; சமூகத்திற்கு தாம் தேவையில்லாமல் போய் விடுவோம் என்றும் யாரும் தன்னை விரும்பவில்லையென்றும் கூட எண்ணத் தொடங்கிவிடுவான்.

எனவே, காலையில் விழித்தெழுந்தவுடனேயே, செய்வதற்கென தொடர்ச்சியான பணிகள் இருக்கும் ; தொலைக்காட்சி காணுதல் (முந்தைய நாள் இரவில் ஏதாவது நிகழ்ந்திருக்கலாம்), செய்தித்தாள் வாசித்தல் (முந்தைய நாள் பகல் பொழுதில் நிகழ்ந்தவற்றை பற்றி அறிந்து கொள்ள வேண்டுமே!), குழந்தைகளை பள்ளிக்கு கால தாமதமாகாமல் அனுப்பும்படி மனைவிக்கு அறிவுறுத்தல், காரிலோ இரயிலிலோ அல்லது டாக்ஸியிலோ அலுவலகத்துக்கு பயணமாதல், மோட்டுவளையைப் பார்த்தவாறே யோசித்த வண்ணம் இருத்தல், கைக்கடிகாரத்தை அடிக்கடி பார்த்துக் கொள்ளல், முடிந்தால் அலைபேசியில் சிலரை அழைத்து சத்தம் போட்டு உரையாடுதல் (அவன் எத்துனை முக்கியமான மனிதன் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டுமே!).

மாதவன் பணியிடத்திற்கு வந்தடைகிறான் ; கொட்டிக் கிடக்கும் வேலைகளில் ஒவ்வொன்றாய் எடுத்து செய்ய ஆரம்பிக்கிறான். அவன் ஊழியனாக இருந்தால், தாம் நேரத்தில் அலுவலகம் வந்ததை தன் அதிகாரிக்கு தெரியப்படுத்த பிரயத்தனப்படுவான். அவனே அதிகாரியாக இருந்தால், வந்தவுடனேயே எலலோரையும் வேலையில் ஆழ்த்தும் வண்ணம் செயல் படுவான். அன்றைய தினம் செய்வதற்கு முக்கியமான வேலை எதுவும் இல்லையென்றால், புதிது புதிதாக வேலைகளை கண்டுபிடிப்பான்.

மதிய உணவு உண்ண எப்போதும் தனியாக செல்வதில்லை. அவன் அதிகாரியெனில், பிற சக அதிகாரிகளுடன் அமர்வான். வியாபார உத்திகளைப் பற்றியோ, போட்டியாளர்களைப் பற்றி இகழ்ந்தோ பேசிக்கொண்டிருப்பான். ஏதாவதொரு துருப்புச்சீட்டை கையில் வைத்துக் கொண்டே காரியங்களை சாதித்துக் கொண்டிருப்பான். வேலைப்பளு பற்றி (பெருமையுடன்) நொந்து கொள்வான். மாதவன் ஊழியனாக இருந்தால், அவனும் தன் நண்பர்களுடன் சேர்ந்தே மதியவுணவு சாப்பிடுவான். அதிகாரியைப் பற்றி குறைபட்டுக் கொள்வான், அதிகமாக ஓவர்-டைம் பார்ப்பதை பற்றியும் குறைபட்டுக் கொள்வான். நிறுவனத்தின் பல காரியங்கள் அவனைச் சார்ந்தே இருப்பதாக கவலையுடன் (கொஞ்சம் பெருமிதத்தையும் சேர்த்துக்கொண்டு) சொல்லிக் கொள்வான்.

மாதவன் – அதிகாரி அல்லது ஊழியன் – பிற்பகல் முழுதும் உழைப்பான். அவ்வப்போது, தன் கைக்கடிகாரத்தில் நேரத்தை பார்த்துக் கொள்வான். வீடு செல்ல நேரமாகி விட்டது. இன்னமும் தீர்க்கப்படாத விஷயங்களும், கையொப்பமிட வேண்டிய ஆவணங்களும் இருக்கின்றன. அவன் ஒரு நேர்மையான மனிதன். வாங்குகிற சம்பளத்தை, அடுத்தவர்கள் அவன் மேல் வைத்திருக்கும் எதிர்பார்ப்புகளை, அவனுடைய கல்விக்காக போராடி உழைத்த அவன் பெற்றோர்கள் அவனுக்காக கண்ட கனவுகளை நியாயப்படுத்தும் வகையில் உழைக்க விரும்புகிறான்.

இறுதியில் வீடு திரும்புகிறான். குளித்து விட்டு, வசதியான இரவு உடைகளை அணிந்து கொள்வான். குடும்பத்துடன் இரவு உணவு. குழந்தைகளின் ஹோம்-வொர்க் பற்றி கேட்பான். மனைவி தன்னுடைய அன்றைய தினம் எப்படி கழிந்தது என்று சொல்வதை கேட்டுக் கொள்வான். ஒரு எடுத்துக்காட்டுக்கு என்று மட்டும் சில சமயங்களில் தன் வேலை பற்றிய விஷயங்களை குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்வான். ஏனெனில் இயன்ற மட்டும் அலுவலகப் பிரச்னைகளை வீட்டுக்கு எடுத்து வராமல் இருக்கவே மாதவன் பிரியப்படுகிறான். அவர்களின் இரவு உணவு முடிந்ததும் – எடுத்துக்காட்டுகள், ஹோம்-வொர்க், இன்ன பிற விஷயங்கள் – எதிலும் நாட்டமில்லாத குழந்தைகள் உணவு மேஜையை விட்டு உடனே விலகி, தத்தம் கணினி முன்னர் சென்று உட்கார்ந்து விடுகிறார்கள். மாதவனும் தன் பங்குக்கு தொலைக்காட்சி முன்னர் சென்று அமர்ந்து விடுகிறான். ( மதியம் ஏதாவது நிகழ்ந்திருக்கக் கூடும்!)

தன் வேலை சம்பந்தப்பட்ட புத்தகத்துடன் தான் அவன் படுக்கைக்கு செல்கிறான் – ஊழியனாக இருந்தாலும் சரி, அதிகாரியாக இருந்தாலும் சரி – போட்டி தீவிரமாக ஆகிக் கொண்டிருக்கிறது என்பதையும் தொடர்ந்து தன் அறிவை புதுப்பித்துக் கொள்ளாவிடில், வேலையை இழக்கும் அபாயத்தோடு கொடூரமானதொரு சாபத்தை எதிர்கொள்ளும் இன்னொரு அபாயமும் – செய்ய எதுவும் இல்லாமல் இருத்தல் – இருப்பதை அவன் அறிந்தே இருந்தான்.

அவன் மனைவியுடன் சிக்கனமாகவே பேசுவான். நல்ல உள்ளம் படைத்த, கடுமையாக உழைக்கும், குடும்பத்தை நேசிக்கும், எச்சூழலையும் சந்திக்க தயார் நிலையில் இருக்கும் மனிதனல்லவா அவன்? படுத்த சில நிமிடங்களிலேயே அவனுக்கு உறக்கம் வந்து விடுகிறது. அடுத்த நாள் ரொம்ப பிஸியாக இருக்க வேண்டியிருக்கும் என்று அறிந்திருந்தான் ; தன் சக்தியை நன்றாக மீண்டும் கட்டமைக்கும் அவசியத்தை உணர்ந்தும் இருந்தான்.

அன்றிரவு தூக்கத்தில் மாதவனுக்கு ஒரு கனவு வருகிறது. கனவில் ஒரு தேவதை அவன் முன் தோன்றி “ஏன் இப்படி செய்கிறாய்?” என்று கேட்கிறாள். “ஏனென்றால், நான் பொறுப்பான மனிதன்” என்று பதிலளிக்கிறான் மாதவன்.

தேவதை மேலும் கேட்கிறது. “உன்னால் உன் தினத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் எல்லாவற்றையும் நிறுத்தி விட்டு வெறுமனே இவ்வுலகத்தையும் – உன்னையும் மட்டும் உற்று நோக்க முடியுமா?”

மாதவன் : “எனக்கும் அப்படி செய்ய ஆசைதான்? ஆனால் நேரம் தான் இல்லை”

தேவதை : “நீ பொய் சொல்கிறாய்…எல்லாருக்கும் நான் சொன்னதை செய்ய நேரமிருக்கிறது. செய்யும் தைரியம் தான் யாரிடமும் இருப்பதில்லை. நாம் என்ன செய்கிறோம் என்பதை சிந்திக்க உதவினால் மட்டுமே வேலை என்பது வாழ்த்தப்பட்ட ஒன்றாக இருக்கும். வாழ்வின் அர்த்தத்தை சிந்திக்க அனுமதிக்காமல் இருப்பதே அதன் ஒற்றை இலக்காக இருக்கும் போது, அதுவே சாபமாகி விடும்.”

நடு இரவில் திடுக்கென அவன் உறக்கத்தில் இருந்து குளிர்ந்த வியர்வையுடன் அவன் விழித்தெழுகிறான். தைரியம்? குடும்பத்திற்காக தியாக மனப்பான்மையுடன் உழைக்கும் ஒரு குடும்பத்தலைவன் ஒரு நாளின் வெறும் பதினைந்து நிமிடம் ஒன்றும் செய்யாமல் இருக்கும் தைரியம் இல்லாமல் எப்படி இருக்கமுடியும்?

உறககத்திற்கு திரும்புவதே சிறந்தது. இது ஒரு சொப்பனம் தான். இக்கேள்விகளால் அவனுக்கு நன்மை எதுவும் விளையப் போவதில்லை. நாளை அவன் மிக மிக பிஸியாக இருக்கப் போகிறான்.

[TRANSLATED FROM THE BOOK –
LIKE THE FLOWING RIVER – BY PAULO COELHO, CHAPTER HEADING : MANUEL IS AN
IMPORTANT AND NECESSARY MAN]