அவளின் உதடுகள் மூடியிருந்தும்
அவள் சிரிப்பு காணக் கிடைக்கிறது.
விழிகள் திறந்திருக்கின்றனவே !
உறங்குகையிலும்
அவளின் சிரிப்பு தொடருமோ
என்றறிய ஆவல்
எனது ஆவலை அவள் அறிந்தாளில்லை.
தோள் தருகிறேன்
தோழி தன் கவலைகளை சொல்லி அழ
மனப்பாரம் தீர்ந்தவுடன்
நன்றி சொல்லி நகர்ந்து விடும் தோழி.
மனதை பாரமாக்கி சென்று விடுகிறாள்
பாரத்தை இறக்கி வைத்தால்
தோழி தொலைந்து போய் விடுவாளோ?
அலை புரளும் குழல்கள் – அவற்றை
ஒதுக்கி விடும் விரல்கள்
நெருங்கி வரும் பார்வை – அது
அணியுமொரு போர்வை
முத்துப் பல் வரிசை – கண்டு
தர நினைப்பேன் பரிசை
நட்பிற்கு ஒர் எல்லை – அதை
தாண்ட இயலா தொல்லை.
+++++
சில வருடம் போன பின்னர்
பெற்றோர் பார்த்த பெண்ணாய்
அவளே வந்தாள்
அவள் உறக்கம் காண
அவள் கவலைகளை கேட்க
இன்றெனக்கு பொறுமையில்லை
என் வீட்டுக் கடன் அடைக்கும்
அவளின் பொறுப்பிருக்கிறதே!
அமெரிக்கா ப்ராஜெக்டில்
அவளை நிலைத்திருக்கச் சொன்னேன்.
மூன்று வருடம் கழித்து
எனக்கும் அமெரிக்கா வர
சந்தர்ப்பம் கிடைக்கும் என்று நானும்
ஸ்கைப் இருக்க பயமேன்
என்று அவளும் பேசிக் கொண்டிருந்தோம்.