நெருக்கமான வேலை நிலையங்கள்.
பணி முன்னேற்றம் தந்து
என்னை மட்டும்
அறைக்குள் தள்ளியிருந்தார்கள்.
நான்கிற்கு நான்கு
அறைக்குள்
சிறைப்பட்டது போல்
தனியே இருந்தேன்.
மூடிய ஜன்னலில்
பொருத்தப்பட்ட
ஏர்-கண்டிஷனர்
இயங்கவில்லை.
ஈர வியர்வையுடன்
தரைக்கம்பளம், நாற்காலியின்
உறைகள் – இவற்றின்
வாசம் சேர்ந்து குடலைக்குழப்பின.
என் கணிணியில்
திரைக்காப்பு படமொன்று தோன்றியது.
கரும்பச்சை, இளம்பச்சை
புற்கள்
லேசான காற்றில் ஆடிக்கொண்டிருந்தன.
தத்ரூபமான அசையும் சித்திரம்.
அப்புற்களின்
மீது மோதும்
காற்று என்னையும் ஸ்பரிசித்து
குளுமைப்படுத்துவதாய்
கற்பனை செய்து கொண்டேன்.