நவயுகக்காதலர்கள்

மற்றவர்கள் குழுமியிருந்தபோது
அக்கறையுடன் நலம் விசாரித்தான்.
தனித்துவிடப்பட்டபோது
மௌனமாயிருந்து அன்னியமானான்.
இவனை பேசவைக்க
சற்றுமுன் கூட்டமாய்
நின்றிருந்த நண்பர்களை
மீளச்சொல்ல வேண்டும்

திரைப்படம் சென்றோம்
நண்பர் குழாமுடன்.
அவனுக்கு
படம் பிடிக்கவில்லையாம்.
எனக்கும் பிடிக்கவில்லை
அவன் என் பக்கத்து இருக்கையில்
அமராதது!

எல்லோரும்
விடுதியில்
அளவின்றி உண்டு மகிழ
இவன்
குளிர் பானம் மட்டும்
போதுமென்றான்.
நான் தந்த
சிக்கன் துண்டுகளை கூட
நண்பனுக்கீந்தான்.

நண்பர் குழுவுடன்
என் வீடு வரை
வந்தெனை இறக்கிவிட்டபோது
அவன்
இருந்த திசை நோக்காமல்
முதுகு காட்டி நடந்தேன்.

+++++
அவசரத்தில்
மறந்து போய்
வைத்துவிட்ட கைத்தொலைபேசி
புத்தக அலமாரியில்
புதைந்து கிடந்தது.
முப்பது குறுஞ்செய்திகள்
அவனிடமிருந்து.
சினம் விலகி
உடன் பதிலளிக்கலானாள்.
விரல் வலிக்க
இரவு முழுக்க
அவனை காதலித்தாள்
குறுஞ்செய்தி வாயிலாக.