வாயிற்காவலன்

கூட்டம் பெருகிவிட்ட

சிற்றுண்டி நிலையத்தில்

வருபவர்களை

வாயிலில் காக்கவைத்து

உள்ளிருக்கும்

கூட்டம் தணிந்த பின்

காத்திருப்போரை

உள்ளே விடும்

வாயிற்காவலனொருவனை பார்த்தேன்.

நிகழ்கால இருப்பை பொறுக்காமல்

நிற்காமல் நகரும் நினைவுகள்.

இறந்த கால அவஸ்தைகளை அசை போடும் ;

எதிர் காலத்தை எண்ணி

அல்லலுறும்.

உள் புகும் நினைவுகளை

வாயிலில் நிறுத்தி

பரிசோதித்து

வடிகட்டி உள்ளனுப்பும்

காவலனொருவன் எனக்கு கிடைப்பானா?

சொல்

குதூகலம்.
மகிழ்ச்சி.
சந்தோஷம்.
உவகை.

சொற்கள்
உணர்வின் அடையாளமாக
பரிமாறப்பட்டன.
திகட்டிவிட்டதென்று
எழுந்து கொள்ள முடியாமல்
முற்றுப்புள்ளி எங்கோ போய் ஒளிந்திருந்தது.

அலுப்பு
சலிப்பு
வெறுப்பு
இயலாமை

சொற்களில்லாமல்
சொன்னது
உடல் மொழி.

சொற்கள்
முற்றுப்புள்ளியை
அழைத்து வந்து
பொருத்திக்கொண்டு
அமைதியாயின.

புன்னகை
புன்முறுவல்
குறும்புப்பார்வை
வெடுக்கென எழுதல்

உடல்மொழி
கட்டைவிரலை
உயர்த்திக்காட்டி
வெளியேறியது…

சொற்கள்
அமைதியாய்
காகிதத்தில் வந்தமர்ந்தன
கவிதையாக.

இறுமாப்புடன்
திரும்பிய
உடல்மொழி
கவிதையாக
உருக்கொண்ட
சொற்களைக்கண்டு
மோனமாகி
நெற்றி அகன்று
சிந்தனை வயப்பட்டது.

”வாய் வார்த்தையாகும் சொற்கள்
எழுத்துருவாகியும் பேசுகின்றன.”

சிந்தனையும்
சொற்களாகவே வெளிப்படுவதை
உணர்ந்த
உடல் மொழி
மரியாதையாய்
தலை குனிந்தது.

சொற்கள் நிரம்பிய
கவிதை புத்தகத்தின்
பக்கங்கள் காற்றில் புரண்டன.