யாரோ எழுப்பிவிட்டது போல ஆறு மணிக்கே எழுந்துவிட்டேன். வார நாட்களில் கூட ஏழரை அல்லது எட்டு மணிக்கு குறைவாக எழும்பிய ஞாபகம் இல்லை. ஞாயிற்றுக்கிழமைகளில் ஒன்பதறைக்கு முன்னர் எழுந்ததாக சரித்திரமே இல்லை. இன்று என்னவோ சீக்கிரம் விழித்துவிட்டேன்.
இயற்கையின் அழைப்பு வரும்போது தூக்கத்திலிருந்து எழுந்து சிறுநீர் கழித்து பின்னர் படுக்கைக்கு திரும்பி தொடர்ந்து தூங்குதல் நிறைய நாள் நடந்திருக்கிறது. இன்றும் அப்படிதான் நினைத்தேன். சிறுநீர் கழித்தவுடன், என்ன தோன்றியதோ பற்பசையையும் பிரஷ்ஷையும் எடுத்து பல் துலக்கினேன். பல் துலக்கிவிட்டேனென்றால், அந்த நாள் துவங்கிவிட்டது என்று அர்த்தம்.
மனைவி போர்வையால் முகத்தை மூடி உறங்கிக்கொண்டிருக்கிறாள். குழந்தைகள் அவர்களின் அறையில் தூங்கிக்கொண்டிருந்தார்கள். கைத்தொலைபேசியில் மின்னஞ்சல்கள் ஏதாவது வந்திருக்கிறதாவென பார்த்தேன். ட்விட்டரில் முகம் தெரியாத நண்பர்களுக்கு காலை வணக்கம் சொன்னேன். அப்புறம் என்ன செய்வது என்று தெரியவில்லை. இதற்குத்தான், தினமும் சீக்கிரம் எழுந்து பயிற்சி இருக்கவேண்டும்.
இன்று புத்தாண்டின் முதல் நாள். வாழ்த்து சொல்கிறேன் பேர்வழியென்று மனைவியை எழுப்பலாமா என்று யோசித்தேன். அதற்கு வாய்ப்பு இல்லை. நள்ளிரவு வரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப்பார்த்துவிட்டு “ஹாப்பி நியு இயர்” சொல்லிவிட்டுதான் தூங்கினோம்.
குழந்தைகளை எழுப்பினால், இன்று பள்ளி லீவு பின்னர் ஏன் சீக்கிரம் எழுந்துகொள்ளவேண்டும் என்று கடுப்புடன் ஒரு லாஜிக் சொல்லிவிட்டு போர்வை இழுத்து போர்த்திக்கொள்வார்கள்.
வீட்டின் நிசப்தத்தை தொலைக்காட்சியை போட்டு குலைக்க எனக்கு மனமில்லை. இத்தனை ”அதிகாலை” யாருக்கும் தொலைபேசியில் பேசி பழக்கமில்லை. தொலைபேசியில் நண்பர்களுக்கு “ஹாப்பி நியு இயர்” சொல்ல மதியம் 12மணி வரை காத்திருக்கவேண்டும்.
யோசனையை நிறுத்தும்படி, ஒரு கைத்தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. இவ்வளவு சீக்கிரம் யார் போன் செய்கிறார்கள்? என் அம்மாதான் பேசினாள். அவளின் பிறந்த நாள் வாழ்த்துகளை தூங்கும் குரலில் பேசி ஏற்றுக்கொண்டே பழக்கமாகிப்போன எனக்கு, இன்று விழிப்புடன் பேசுவது த்ரில்லாக இருந்தது. “ஏண்டா ரொம்ப நாளாக போன் செய்யவில்லை” என்ற வழக்கமான பாட்டை பாடினாள், “வேலைப்பளு தான் காரணம்” என்று சொன்னேன். புத்தாண்டின் முதற்பொய்.
போனை வைத்த பிறகு, பொய் சொன்ன பாரத்தோடு இருந்தேன். பின்னர், பாதி படித்து வைத்திருந்த நாவலை படிக்க முயன்றேன். முடியவில்லை. நாவல் படிப்பது என்றால், இரவுத்தூக்கத்துக்கு முன்னர் என்று ஆகிவிட்டது. மற்ற நேரங்களில் எதுவும் படிப்பது இல்லை.
எட்டு மணிவாக்கில் மனைவி எழுந்திருப்பாள். பின்னர், காபி கிடைக்கும். குழந்தைகள் எழுவார்கள். அவர்களுடன் கொஞ்ச நேரம். பின்னர், தொலைக்காட்சி உயிர் பெறும். செய்தித்தாள்களின் பக்கங்கல் புரட்டப்படும். குளிக்காமலேயே மதியவுணவு. பின்னர் குளியல். அதற்குள், சாயந்திரமாகிவிடும். யோசிக்கும்போது, ஒரு மிஷின் மாதிரி, ஒரே மாதிரி என் ஞாயிற்றுக்கிழமைகள்.
இன்றாவது, சாவி கொடுக்கப்பட்ட பொம்மை போல இயங்காமல், பிரக்ஞையோடு ஏதாவது உருப்படியானவற்றை செய்யவேண்டும். அம்மாவிடம் பொய் சொல்லி புத்தாண்டின் முதல் தினத்தை துவங்கியாயிற்று. இல்லை. போக்கை விரும்பும்வகையில் மாற்றிக்கொள்ளும் ஆற்றல் என்னிடமிருக்கிறது. என்ன செய்யலாம்?
ஹும்ம்ம்….என் மனைவி எழுவதற்குமுன்னர், காபிக்கு டிகாக்ஷன் போட்டு வைக்கப்போகிறேன்…..
புத்தாண்டு வாழ்த்துகள்!……….