வெண் திரைத்துணியில்
கருஞ்சித்திரமாய்
நகர்ந்து கொண்டிருந்தது
நிழல் விமானம்
பச்சை வயல்கள்,
மணற்பரப்புகள்,
தொழிற்சாலை கூரைகள்..
எல்லாவற்றின் மீதும்
கருநாகம் போல ஊர்ந்து சென்றது.
தந்தை கைப்பிடித்து
குதித்து குதித்து நடக்கும்
சிறுவனின் உற்சாகம்.
பிரம்மாண்டமானதொரு
நீர்ப்பாசன கிணறொன்றில்
பாய்ந்தபோது
நிழல் விமானம்
மறைந்துபோனது.
சகபயணியொருவர்
பயணத்தில் காணாமல்போனால்
உண்டாகும் பதைப்புடன்
பார்வையை
சுழலவிட்டேன்.
கருமேகங்கள் சூழ்ந்திருந்தன.
கதிரவன் ஒளிந்திருந்தான்.
போதுமான ஒளியின்மையால்
நிழல் விமானத்தை தேட முடியவில்லை.
மேகங்கள் விலகி
சூரியன் மீண்டும் வெளிவந்த
சில நொடிகளில்
அதிர்வின்றி
தரையை தொட்டது விமானம்.
முட்டிமோதி
படியில் இறங்கி
பேருந்தில் அமருமுன்
நிழல் விமானத்தை மீண்டும் பார்த்தேன்.
எவ்வித அசைவுமின்றி
ராட்சத அளவில்
அமைதியுற்று நிற்கும்
விமானத்தின் அடியில்
நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தது
நிழல் விமானம்.
மனதில் பறக்கிறது நிழல் விமானம்
நோபல் பரிசு பெற்ற டோமஸ்’ன் இந்தக்கவிதையை
ஞாபகப்படுத்துகிறது…அருமை..
———————————–
சூரியன் சுட்டெரிக்கிறது,
கீழாக இறங்கும் விமானம்,
பிரமாண்ட சிலுவை போன்ற நிழல் விடுத்து,
நிலத்தின் மேல் விரைகிறது.
ஒருவன் வயலில் எதன்மீதோ குனிகிறான்.
நிழல் அவனை நெருங்குகிறது.
ஒரு நொடிப்பொழுது
அவன் சிலுவையின் நடுவிலிருக்கிறான்.
சிலுவையை, குளிர்ந்த
தேவாலய வாயில்களில் பார்த்திருக்கிறேன்.
சில நேரங்களில்,
அது மனக்கொந்தளிப்பின் ஒரு கண நேர
படப்பிடிப்பெனத் தோன்றும்.
– டொமஸ் ட்ரான்ஸ்ட்ரமர்
நன்றி நீலகண்டன். நன்றி ராம்.
தொடர்ந்து வாசித்து உங்கள் கருத்துகளை பதியுங்கள்.
நல்ல கவிதை சார். பகிர்ந்தமைக்கு நன்றி!