நண்பனின் மரணம்

மும்பையில் என் நண்பன் – நினாத் – உயிரிழந்துவிட்டான். பூனாவிலிருந்து இன்னொரு நண்பன் போன் செய்துசொன்னான். எதாவது வம்புக்காக மட்டும் போன் செய்து கொஞ்சம் "போர்"அடிக்கும் பூனா நண்பனின் தொலைபேசி அழைப்பை நிறைய நேரம் எடுக்காமல் இருந்திருக்கிறேன். இன்று நான் அப்படி செய்யவில்லை. எடுக்காமல் விட்டிருக்கலாமோ? இல்லை இன்று என்றில்லை, நினாத் (Ninad) தின் மரணச்செய்தி எப்போது எட்டியிருந்தாலும், இன்றைய மாலையில் எனக்குள் ஏற்படுத்திய அதே அதிர்ச்சியை மாறாமல் தந்திருக்கும்.

இறக்கும் வயதல்ல நினாத்துக்கு. 35 வயதுதான் ஆகியிருக்கும். அவனின் அழகான சிரிப்பு அவனது இம்மியளவு கூட தீங்கற்ற மனப்பாங்கை பிரதிபலிக்கும். களங்கமற்ற குழந்தை மனதுதான் அவனுக்கு என்பது மிகையில்லாத வருணனை. அவனை தெரிந்தவர்கள் எல்லாரும் இதை ஒப்புக்கொள்வார்கள்.

ஐந்து வருடங்கள் நானும் நினாதும் சேர்ந்து ஒரே நிறுவனத்தில் பணி புரிந்தோம். கல்லூரியிலிருந்து வெளிவந்து வேலையில் சேர்ந்த வாலிபனாக அவனை நான் அறிவேன். நிறுவனத்தில் திடீரென்று பெருந்தலைகள் வேலையை விட்டபோது, நாங்கள் இருவரும் ஒரே அணியில் இணைந்து இரவு பகல் என பேரார்வத்துடன் பொறுப்புடன் பணிபுரிந்த தினங்கள் எனக்கு ஞாபகமிருக்கிறது.

நிறுவனத்தலைவர் மேல் அவ்வப்பொழுது எழும் வெறுப்பை இருவரும் மதியவுணவு சேர்ந்து உட்கொள்ளும்போது பகிர்ந்துகொள்வது வழக்கம். அப்போதெல்லாம், நினாத் புன்னகை வழிய "நீ சொல்லு…நாளைக்கே இருவரும் சேர்ந்தே வேலையை ரிசைன் பண்ணிவிடுவோம்" என்று சொல்வான். அப்போது அவன் திருமணமாகாத பிரம்மச்சாரி. எனக்கோ இருகுழந்தைகள் பிறந்திருந்தன. எனவே இந்த சம்பாஷணை ஒரு நகைச்சுவைக்காக மட்டுமே என்று இருவருமே அறிந்திருந்தோம். வேடிக்கை என்னவென்றால், அவன் நகைச்சுவைக்காக சொன்னது உண்மையாகவே நடந்தது. ஜூலை 2008 இல் எங்கள் இருவருக்கும் ஒரே சமயத்தில் வேறு நல்ல வேலை கிடைத்தது. எனக்கு தில்லியில். அவனுக்கு பெங்களூரில். ஒரேசமயத்தில் ராஜினாமா கடிதத்தை தந்தபோது, "என்ன பேசிவைத்துக்கொண்டு ராஜினாமா செய்கிறீர்களா?" என்று நிறுவனத்தலைவர் கேட்டார். அறையிலிருந்து வெளிவந்ததும், நானும் அவனும் சேர்ந்து பலநிமிடங்கள் சிரித்தோம்.

நாங்கள் வேலை மாறிய பிறகு எங்கள் தொடர்பு இன்னும் வலுப்பட்டது. எங்கள் புதுவேலைகளின் அவஸ்தைகள், போராட்டங்கள் எல்லாம் நீண்ட தொலபேசியுரையாடல்களில் பரிமாறிக்கொண்டிருப்போம். முன்று வருடங்கள் முன்னர் அவனின் திருமணம் நடந்தது. அலுவலகப்பணி தொடர்பாக ஓர் அயல்நாட்டு விஜயம் மேற்கொண்டதால், அவனுடைய திருமணத்துக்கு போகமுடியவில்லை. பின்னர் அவனுடைய நிறுவனம் அவனை மும்பைக்கு இடமாற்றம் செய்யச்சொன்னது. அலுவலகப்பணிக்காக எப்போது மும்பை சென்றாலும், நினாதும் நானும் எங்களுடைய வாடிக்கையான காபி ஷாப்பில் மணி நேரங்கள் உட்கார்ந்து அரட்டை அடிப்பது வழக்கம். கடைசியாக அவனை சந்தித்தது அக்டோபர் 2010 இல். அவனுடைய இரண்டு மாதக்குழந்தை -ஆரவ்-வை தூக்கிக் கொஞ்சியதை இப்போது நினைக்கும்போது நெஞ்சுக்குழியில் இனம்புரியா சங்கடம்.

நண்பா, உனக்கேன் அவசரம் ! வாழ்வை நகைச்சுவை, ரசனை, கும்மாளம் என்று வாழத்தெரிந்த உனக்கு, இவ்வளவு சீக்கிரமாக உலக வாழ்வை நீங்கும் அவசரம் ஏன்? பக்தி (நினாத்தின் இளம் மனைவி) யையும் ஆரவ்-வை யும் நினைத்தால், உன் மரணத்தின் மேல் கண்ணீரோடு, கோபமும் சேர்ந்து வருகிறது. கொடூரமான மரணத்தின் செயல் முறைகளை புரிந்துகொள்ளமுடியவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.