ஒளித்துவைக்கப்பட்டிருந்த
உண்மையொன்று
வெளிவர முயன்றது.
வாசலை
சார்த்தி வைத்திருந்தார்கள்
உண்மையை சித்திரவதை செய்து
அறையில் அடைத்துவைத்தவர்கள்.
உடைத்து திறக்க
ஆயுதமேதும் அகப்படவில்லை.
தலையை முட்டி மோதி
திண்டாடி தடுமாறி
வந்தது வெளியே.
யாரும் அடையாளம் கண்டுகொள்ளவில்லை.
எங்களில் ஒருவன் போல் இல்லையே! என்று சொல்லி
நிராகரித்தன பொய்கள்.
உண்மைக்கு பசித்தது.
உயிர் போகும்படி பசி.
நீதி மன்றத்தில்
நீதிபதிகள் சோறிட்டு
உண்மையின் உயிரை
காப்பாற்றுகிறார்கள் என்று கேள்விப்பட்டு
விரைந்தது.
உணவருந்திக்கொண்டிருந்த நீதிபதி
வக்கீலும் துணைக்கு
வந்து சோறு கேட்டால் மட்டுமே
சோறளிக்கும்
சட்டவிதியை விளக்க
உணவு இடைவேளைக்கு பிறகு
சந்திக்க சொன்னார்.
காவலாளி
பலவந்தமாய்
உண்மையை வெளியே அழைத்துப்போனான்.
நாவுலர்ந்தது உண்மைக்கு.
ஒளிபரப்பு கருவிகளோடு நின்றிருந்த
தொலைகாட்சி நிருபரொருவர்
யார் எனக்கேட்டார்.
அறிமுகம் தந்ததும்
சுவாரஸ்யம் இழந்தார்.
அவர் அனுதாபிக்க
வேறு வகை உண்மையை
அழைத்து வருமாறு
இந்த அப்பாவி உண்மையை
வேண்டினார்.
உண்மை போல தோற்றமளிக்கும்
பொய் கூட பரவாயில்லை அவருக்கு.
உண்மை மயக்கமுற்றது
அரசு மருத்துவமனையில்
விழித்தெழுந்தது
யாரோ தண்ணீர் தெளித்தபோது.
வெள்ளைக்குல்லா வெள்ளை சட்டை அணிந்த ஒருவர்
எலுமிச்சை சாறு தந்து கைகூப்பினார்.
குடித்தவுடன்
உண்மை மீண்டும் மயக்கமடைந்தது
எலுமிச்சை சாற்றில் கலப்படம்
உண்மையும் கொஞ்சம் கலப்படமானது.
சத்தம்போட துடங்கிய உண்மையின்
வாயை அடைக்க
வெள்ளைகுல்லா மனிதர்
தன் உறவினரென்று
உண்மைக்காக பொய்சொல்லி
ஐசியு-வில் படுத்துக்கொள்ள வைத்தார்.
அங்கே கிடைத்த
சிசுருஷையில்
பசி விலகி
ஆரோக்கியம் பெற்றது
இப்போது யாரும்
நீ யாரென்று கேட்பதில்லை
உண்மைக்கு அடையாளம் வந்துவிட்டது
பொய்கள் போல் அழகுடன் காட்சியளிக்க
பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையும் செய்துகொண்டது.