ஓர் உண்மையின் கதை


ஒளித்துவைக்கப்பட்டிருந்த
உண்மையொன்று
வெளிவர முயன்றது.
வாசலை
சார்த்தி வைத்திருந்தார்கள்
உண்மையை சித்திரவதை செய்து
அறையில் அடைத்துவைத்தவர்கள்.
உடைத்து திறக்க
ஆயுதமேதும் அகப்படவில்லை.
தலையை முட்டி மோதி
திண்டாடி தடுமாறி
வந்தது வெளியே.
யாரும் அடையாளம் கண்டுகொள்ளவில்லை.
எங்களில் ஒருவன் போல் இல்லையே! என்று சொல்லி
நிராகரித்தன பொய்கள்.
உண்மைக்கு பசித்தது.
உயிர் போகும்படி பசி.
நீதி மன்றத்தில்
நீதிபதிகள் சோறிட்டு
உண்மையின் உயிரை
காப்பாற்றுகிறார்கள் என்று கேள்விப்பட்டு
விரைந்தது.
உணவருந்திக்கொண்டிருந்த நீதிபதி
வக்கீலும் துணைக்கு
வந்து சோறு கேட்டால் மட்டுமே
சோறளிக்கும்
சட்டவிதியை விளக்க
உணவு இடைவேளைக்கு பிறகு
சந்திக்க சொன்னார்.
காவலாளி
பலவந்தமாய்
உண்மையை வெளியே அழைத்துப்போனான்.
நாவுலர்ந்தது உண்மைக்கு.
ஒளிபரப்பு கருவிகளோடு நின்றிருந்த
தொலைகாட்சி நிருபரொருவர்
யார் எனக்கேட்டார்.
அறிமுகம் தந்ததும்
சுவாரஸ்யம் இழந்தார்.
அவர் அனுதாபிக்க
வேறு வகை உண்மையை
அழைத்து வருமாறு
இந்த அப்பாவி உண்மையை
வேண்டினார்.
உண்மை போல தோற்றமளிக்கும்
பொய் கூட பரவாயில்லை அவருக்கு.
உண்மை மயக்கமுற்றது
அரசு மருத்துவமனையில்
விழித்தெழுந்தது
யாரோ தண்ணீர் தெளித்தபோது.
வெள்ளைக்குல்லா வெள்ளை சட்டை அணிந்த ஒருவர்
எலுமிச்சை சாறு தந்து கைகூப்பினார்.
குடித்தவுடன்
உண்மை மீண்டும் மயக்கமடைந்தது
எலுமிச்சை சாற்றில் கலப்படம்
உண்மையும் கொஞ்சம் கலப்படமானது.
சத்தம்போட துடங்கிய உண்மையின்
வாயை அடைக்க
வெள்ளைகுல்லா மனிதர்
தன் உறவினரென்று
உண்மைக்காக பொய்சொல்லி
ஐசியு-வில் படுத்துக்கொள்ள வைத்தார்.
அங்கே கிடைத்த
சிசுருஷையில்
பசி விலகி
ஆரோக்கியம் பெற்றது
இப்போது யாரும்
நீ யாரென்று கேட்பதில்லை
உண்மைக்கு அடையாளம் வந்துவிட்டது
பொய்கள் போல் அழகுடன் காட்சியளிக்க
பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையும் செய்துகொண்டது.

அறையிருட்டு

எஞ்சியிருந்த மெழுகுவர்த்தி சுடரை

காற்றின் உதவியுடன் புகையாக்கி

ஒளியை விழுங்கியது

அறையிருட்டு.

மனிதவிழிகள் கூட

தனது ஓட்டைகளை

பார்க்க முடியாதென

கர்வம் கொண்டது.

தனது சுயசொரூபத்தை

முழுக்க உணரும்

வேட்கையில்

சன்னலுக்கு

வெளியே படர்ந்திருந்த

பேரிருட்டின் அங்கமானது.

பேரிருட்டு விரியும் திசைக்கு

மாற்றுதிசையில்

பேரிருட்டுப்பாதையினூடே

விரைந்து பறந்தது.

+++++

சில ஆயிரம் மைல்கள் தூரத்தில்

பேரிருட்டின் எல்லை முடிந்தது.

எலலையற்ற தன்மையை

அனுபவமாய் உணரும் பேரார்வத்தில்

சூரியவொளி ஆக்கிரமித்திருந்த

நிலப்பரப்பில் நுழைந்தவுடன்

அறையிருட்டின் ஒருபகுதி

பஸ்மமானது.

வந்த வழி உடன் திரும்பி

பேரிருட்டின் பாதையூடெ

அறைக்கு மீண்டு வர எத்தனிக்கையில்,

சூரியவொளியின் நீளும் கரங்களில் சிக்கி

பேரிருட்டுடன் சேர்ந்து

அறையிருட்டு கரைந்துபோனது.

+++++

பேரிருட்டின் ஆவியுடல்

சரண் புகுந்த ஏதொவோர் இடத்தினிலேயே

அறையிருட்டின் ஆவியுடலும்

அகதியானது.

பேரொளியின் ஆட்சி ஒய்ந்தபின்

மீண்டும் உயிர்க்கும் போது

அறையிருட்டையும் உயிர்ப்பித்து

அதன் அறையில் சேர்த்துவிடுவதாக

பேரிருட்டு வாக்களித்தது.

+++++

குறை போக்கி அருள்


முடிதிருத்தும் நிலையத்தில்
நன்கு தூக்கம் வருகிறது.
திரையரங்குகளிலும்.
தேர்வு எழுதும் அறைகளில்
திறம்பட.
கோவில்களில் மணியோசை
தாயின் தாலாட்டு போலவே ஒலிக்கிறது.
ரயிலின் புறப்பாட்டுக்கு காத்திருக்கும்போது துடங்கி
சேருமிடம் வரும்வரை
சயனம்தான்.
வேலை செய்யுமிடத்தில்
மதியவுணவுக்குப்பின் வரும் கொட்டாவி
பிறருக்கு தெரியாமலிருத்தல்
பிரம்மப்ரயத்தனந்தான்.
மகளின் பள்ளியில்
ஆசிரியர்களை சந்திக்க
காத்திருக்கும் பொழுதுகளில்
குழந்தைகள் பாடும் தமிழ்த்தாய் வாழ்த்து
திருப்பள்ளிஎழுச்சியாகும்.
இரவு எத்தனிக்கும்போது மட்டும்
தூக்கம் காணாமல் போய்விடுகிறது.
புத்தகம் படித்தாலும்
காதுக்குள் வைத்து
கைத்தொலைபேசியில் வானொலி கேட்டாலும்
போர்வையால் கால் முதல் தலைவரை போர்த்தி
இருட்டில் கண்ணை அகல விரித்து
தூக்கத்திற்காக காத்திருந்தாலும்.
வருவதில்லை…!
தூக்கம் வர ஏதாவது மந்திரம் இருக்கிறதா?
மனைவியின் காற்றுநிறை குறட்டை சத்தத்தை
கவனமுடன் கேட்கிறேன்.
த்யானம் செய்வது போல.
தேவியருள் புரிந்தாள்.

முன்னுரை

மிகச்சிறு வயதில் 1982 -இல் மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு விழாவை தமிழ்நாடெங்கும் பள்ளிகளில், கல்லூரிகளில், வானொலிகளில், பொதுவிடங்களில் விமரிசையாக கொண்டாடினார்கள். அந்த நாட்களில் தான் பாரதியின் கவிதைகள் எனக்கு அறிமுகமாயின. எனக்கும் கவிதை எழுதவேண்டுமென்ற ஆசை உருவானது. என் அப்பாவின், முழுதும் உபயோகிக்கப்படாத பழைய டைரிகளில் கிறுக்கத்தொடங்கினேன். கிறுக்கினவற்றை ஒளித்துத்தான் வைத்திருந்தேன். என் அம்மாவோ அல்லது என் சகோதரர்களோ, யாரோ கண்டுபிடித்து என் கிறுக்கல்களை படித்துவிட்டார்கள். பின்னர், சிலகாலம் என் குடும்பத்திற்குள் "கவிஞன்" என்ற பெயரோடு "புகழுடன்’ வலம் வந்தேன்.

சில பத்திரிக்கைகளுக்கு அனுப்பிவைக்கலாமென்ற எண்ணத்துடன், கிறுக்கல்களை டைப்-செய்ய என் அப்பாவிடம் கொடுத்தேன். அப்பா பல மாதங்களாகியும் அவற்றை டைப்-அடித்து எனக்கு கொண்டு தரவில்லை. எப்போது கேட்டாலும் அலுவலக டைபிஸ்ட்-இடம் கொடுத்திருப்பதாகசொல்வார். அலுவலகத்தில் ஆங்கிலத்திலேயே கடிதங்கள், ஆவணங்கள் எல்லாம் டைப்-அடிக்கப்பட்டதனாலோ என்னமோ, டைபிஸ்ட்-டுக்கு தமிழ் தட்டச்சு வராது போலும் என்று நான் விட்டுவிட்டேன். என் கவிதை கிறுக்கல்களை இப்படித்தான் நான் இழந்தேன்.

பின்னர் நான் 10 -ஆம் வகுப்புக்கு சென்றேன். நிறைய மதிப்பெண் எடுக்கவேண்டுமென்று எல்லாரும் விரும்பினார்கள். எனவே கொஞ்சகாலம் என் "குடும்பப்புலவர்" பதவியை துறக்க தீர்மானித்தேன். 10 -ம் வகுப்பில் பொதுத்தேர்வில் எத்தனை மதிப்பெண் எடுத்தேன் என்று நினைவில்லை. நான் இதுவரை வேலை செய்த எட்டு நிறுவனங்களிலும் யாரும் ஒருநாள் கூட என் பத்தாம் வகுப்பு மதிப்பெண்களைப்பற்றி கேட்டதேயில்லை.

பத்தாம் வகுப்பு விடுமுறையின் போது என் ஒரு புதிய திசையில் பயணிக்க முடிவு செய்தேன். கவிதைகளை விடுத்து சிறுகதைகள் புனையும் எண்ணம் உதயமானது. கவிஞனாக இருந்தது போதும், என் சிறுகதை திறமையை இவ்வுலகுக்கு காட்ட முடிவு செய்தேன். ஒரு பக்ககதைகளாக இருபது கதைகள் எழுதியிருப்பேன். அதற்குள் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்து, 11 -ம் வகுப்பு சேர வேண்டியதாகிவிட்டது. அதுவும் முதல்முறையாக ஆங்கில வழியில் படிக்கவேண்டிவந்தது. bowler எடுக்கிற ரன்கள் மாதிரி மார்க்குகள் ரொம்ப குறைச்ச்சலானது. ஆங்கில அறிவை ஏற்றுவது இன்றியமையாததானது. எனவே, கிரிக்கெட் கமெண்டரி கேட்டு எனது ஆங்கிலத்தை உயர்த்த அரும்பாடுபட்டேன். 12 -வது வரும்போது, எனது பள்ளியில் எனக்கு கருணைகாட்டி தமிழ்வழிக்கு மாறிக்கொள்ளும் சலுகை தந்தார்கள். Debit வரவு என்றானது. dividend பங்காதாயம் ஆனது. எந்த குழப்பமும் அடையாமல் 12 -ம் வகுப்பை முடித்தேன். (இல்லை, 12 ம் வகுப்பு மதிப்பெண்களும் ஞாபகத்தில் இல்லை.)

கல்லூரி படிக்கும் காலங்களில், நான் எழுதிய சிறுகதைகளை படிக்கலாமென்று, வீடு முழுதும் சல்லடை போட்டு தேடியதில் நான் எழுதிய சிறுகதைகள் அடங்கிய நோட்புக் எங்கே போனதேன்றே தெரியவில்லை. அம்மாவைக்கேட்டேன். "தெரியலியேடா…செய்தித்தாள்களுடன் சேர்ந்து உன் நோட்புக்கும் எடைக்குப்போயிருக்குமோ?" என்ற சந்தேகத்தை எழுப்பினாள். அன்றுதான் ஒரு நல்ல எழுத்தாளனை தமிழிலக்கிய உலகம் இழந்தது.

பிறகு வாழ்க்கை வெகு வேகமாக ஓட ஆரம்பித்தது. மூச்சுவிடுவதற்குள் எனக்கு 42 வயது ஆகிவிட்டது. எனக்கு திரும்பவும் இளைஞனாக மாற வேண்டுமென்ற எண்ணம் வந்தது. இளைஞனாவதற்கு முன்னர் நான் என்னசெய்துகொண்டிருந்தேன் என்று யோசித்துக்கொண்டிருந்தபோது நான் புலவனாகவும் எழுத்தாளனாகவும் திகழ்ந்த நாட்கள் நெஞ்சில் காட்சிகளாக ஓடின. அக்கணமே இந்த வலைதளத்தை துவங்கினேன். இப்போது மீண்டும் "கிறுக்க" தொடங்கியிருக்கிறேன். ஒரு வித்தியாசம், இப்போதெல்லாம் சிறுகதை மற்றும் கவிதை இரண்டையும் எழுதுகிறேன். இருபது வருடங்களுக்கு முன்னாலிருந்த முகமும் உடலும் எனக்கு வந்துவிடலாம். இன்னும் கொஞ்சநாட்களில் என் நண்பர்களுக்கு கூட நான் அடையாளம் தெரியாமல் போகக்கூடும்.

இந்தமுறை எழுதுவதை நிறுத்தக்கூடாது. முன்னர் நான் எழுதியவற்றை எடைக்காரனுக்கு இழந்ததுபோல இம்முறை நடக்காது. ஏனென்றால், மடிக்கணினியை யாரும் எடைக்கு போடமாட்டார்கள்தானே !

மொட்டின் வாசம்

ஒரு கோட்டை வீழ்ந்த
வெற்றியை கொண்டாடிக்கொண்டிருக்கும்போது
கைப்பற்றாத கோட்டைகளை
எண்ணத்தொடங்கினான்
எண்ணிக்கை முடியும் முன்னரே
வீழ்ந்த கோட்டையை வேறு யாரோ
எடுத்துக்கொண்டனர்
மன்னன் இன்னும் எண்ணிக்கொண்டிருக்கிறான்
கம்பிகளையும் நாட்களையும்
+++++
வரப்போகும் மனைவியின்
புகைப்பட உருவிற்கு
முடிவிலா முத்தங்கள்
நிச்சயதார்த்தம் முறிந்தது
மனைவியாகப்போகிறவள்
வேறுயாருக்கோ நிஜத்தில்
முத்தம் கொடுத்தாளாம்.
இவனுக்கு வேறு புகைப்படம் கிடைத்தது
இவனின் முத்தங்கள் தொடர்கின்றன
+++++
இலக்கை முதலில் அடைந்துவிடும்
வெறியில்
பாதை தாண்டி ஓடிவிட்டான்
பந்தயத்திலிருந்து விலக்கிவிட்டார்கள்
அடுத்த பந்தயம் நடக்க
நாட்கள் பிடிக்கும்
நகத்தைக்கடித்து நகத்தைக்கடித்து
காத்திருந்ததில்
ஓடுவது மறந்துவிட்டது

பணமும் பிணமும்

கழுத்துசுருக்கை தளர்த்திக்கொண்டே
விண்ணப்பத்தை நிராகரித்தார்.
விதிமுறையை தளர்த்த முடியாதாம்.
கைப்பையின் உள்ளில்
கட்டப்பட்டிருந்த பணக்கட்டை தளர்த்தியதில்
விதிமுறைகள் தளர்ந்து நீர்த்துப்போயின.
+++++
எண்கள் சதி செய்து
போதுமான அளவில் வராமல் போகவே
சேரப்போன கல்லூரியில்
எண்களை எடுத்துவாருங்கள் என்றார்கள்.
உருவிலா எண்ணை
சலவை நோட்டாய் உரு தந்து
எடுத்துவந்தபோது
கல்லூரிப்பூட்டுகள் களிப்படைந்து
தானாகவே திறந்துகொண்டன.
+++++
கதவு என்பது அவளின்
காரணப்பெயர்
எந்த சட்டையிலும்
முதலிரு பட்டன்களை தைத்துக்கொண்டதேயில்லை.
முழுக்கதவு திறப்பது மட்டும்
உண்டியலில் இவன் இடும்
வெள்ளி தங்கக்காசுகளுக்காகத்தான்
+++++
“எல்லாம் கிடைச்சிடுச்சு
காசு இருந்தாப்லே”
என்று போதையில் பாடிக்கொண்டு
படியில் சறுக்கியவன்
கடைசிப்படியில் அமர்ந்திருந்த
ராப்பிச்சைக்காரனின் மடியில் விழுந்து
ரத்தம் கசிந்து இறந்தான்.
+++++
படியெங்கும் விழுந்திருந்த
நோட்டுகள் ராப்பிச்சையின்
கைக்குப்போன பின்னும்
உயிர் வந்தபாடில்லை.
இரு பாதசாரிகள்
அவன் கையின், கழுத்தின்
நகைகளை கழற்றி பணக்காரரானார்கள்.
எனினும் மூச்சு திரும்பவில்லை.
அவனின் ஆவி
மேலூலகத்தில் பரிதவித்தது
பூவுலகில் அனாதையாய் கிடக்கும்
தன்னுடைய பூதவுடலை பார்த்து.
+++++
உயிரிழந்த பின்னால்
அற்புதவிளக்குகூட
அல்லாவுதீனை அடக்கம் செய்யாமலேயே
வேறு எஜமானுக்கு
சேவைசெய்ய சென்று விடுகின்றது.

பூனைகள் ஜாக்கிரதை

href=”https://hemgan.files.wordpress.com/2011/11/cat_friends_spilled_milk.png”>அடுப்பில் பால் கொதிக்கிறது.
அது கொதிக்கும் சத்தம் கேட்காமல்
தொலைக்காட்சிக்குள் என்னை அமிழ்த்திக்கொண்டிருக்கிறேன்.
பொங்கி அத்தனை பாலும் வழிந்துவிட்டது.
சமையலறையில் பாலாறு.
தொலைக்காட்சியின் கைதியாய்
தொடர்ந்து இருந்தேன்.
வீடு திரும்பிய மனைவி
சமையலறை பார்த்தவுடன்
ஆனந்த கூக்குரலிட்டாள்.
துடைத்து விட்டார் போல சமையலறை.
பூனையொன்று பாலாற்றை குடித்து
தரையை சுத்தம் செய்துவிட்டது.
சன்னலில் மியாவ் சத்தம் கேட்ட மனைவி
பூனையின் பார்வையில் மயங்கி காதல்வயமானாள்.
என் திருமணத்தை காப்பாற்ற வேண்டும்.
என்னை விட்டுவிடும்படி தொலைக்காட்சியை கேட்டேன்
பதில் கிடைக்கவில்லை.
மின்சார வெட்டு !
பூனைகள் என் வாழ்வை சூறையாடுவதை எங்ஙனம் தடுப்பது?
மின்சார வாரியத்துக்கு
யாராவது தொலைபேசியில் அழைத்துக்கேளுங்கள் !
ஆறரை மணி செய்திகள் முடிந்தால்தான்
தொலைக்காட்சி சிறையிலிருந்து நான் விடுபடமுடியும்.
<a

வீடு திரும்புதல்

தினமும் படுக்கையிலிருந்து எழும்ப தாமதமாகிறது. பல நாள், படுக்கையிலிருந்து நேராக குளியலரைக்குத்தாவி முகம் கழுவி, உடையணிந்து அலுவலகம் கிளம்பும் கட்டாயத்துக்குள்ளாக வேண்டியிருக்கிறது. இதில் மனைவி தரும் "பெட் காபி" கூட குடிக்க முடியாமல் போய்விடுகிறது.

"குழந்தை அதிகாலை பள்ளிக்கு கிளம்பி செல்கிறது. அதற்கு என்றாவது "டாட்டா" சொல்லியிருக்கிறீர்களா? உங்களுக்கு உங்கள் ஆபிஸ் உங்கள் தூக்கம் – இவைதான் முக்கியம். குழந்தை பெற்றால் மட்டும் போதாது. அன்பு காட்டவும் தெரிந்திருக்க வேண்டும்." மனைவியிடமிருந்து பெறும் தினசரி அர்ச்சனை. அவள் "கிளம்பிசெல்கிறது" என்று அக்றினையில் சொன்னது என்னை இல்லை. என் மகள் நிவேதாவை. அன்பின் மிகுதியாக.

நிவேதா ஆறு மணிக்கு விழித்து, தயாராகி, அவளுடைய அம்மாவுடன் தெரு இறுதிக்கு சென்று, பஸ்சுக்காக காத்திருந்து நல்ல பிள்ளையாக பள்ளிக்கு சென்றுவிடுவாள். நான் எட்டு மணிக்கு குறைவாக விழித்ததாக ஞாபகமே இல்லை. சீக்கிரம் எழுந்துவிடலாம் தான், ஆனால் அதற்கு சீக்கிரம் தூங்கிவிடுவது அவசியம்.மாலை எட்டு மணியாகிறது வீடு திரும்புவதற்கு.இரவு உணவு உட்கொண்டு, மனைவியுடன் சிறிது நேரம் பேசி, அவள் தூங்கும்போது மணி பத்தாகிவிடுகிறது. பிறகுதான், எனது படிக்கும் நேரம் தொடங்குகிறது.

எனக்கு பிடித்த எழுத்தாளர்களின் நூல்களை, இரு பக்கம் படித்துவிட்டு, இரு மணிநேரம் யோசிப்பேன். சில வாக்கியங்கள் என்னுள் வெகு ஆழமாக ஊடுருவும். அதைப்பற்றியே நெடு நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருப்பேன். பிடித்த வரிகளைக்கோடிட்டு அதனை ஒரு வெற்றுக்காகிதத்தில் எழுதிப்பார்ப்பேன். அப்படி எழுதிப்பார்கையில் வேறு ஏதாவது அர்த்தம் பிடிபடுகிறதா என்று பார்ப்பேன்.
தூங்குவதற்கு முன்னாள் ஒரு இலக்கியப்புத்தகத்தை படிப்பதில் உபயோகம் என்னவென்றால் படித்த வரிகளை மனதில் அமைதியுடன் அசை போடலாம்.

பகல் நேரம் முழுக்க அலுவல்களில் கழிந்துவிடுவதால், மனம் ஏதாவது ஒன்றில் உழன்றவண்ணம் இருக்கிறது. இரவின் அமைதியில், நிசப்தத்தின் சுகத்தில் சுந்தர ராமசாமியுடனோ புதுமைப்பித்தனுடனோ எண்ணவுலகத்தில் சஞ்சரிப்பது மனதை குளுமைப்படுத்துவது போல் இருக்கிறது. (இந்த இரு புகழ் பெற்ற எழுத்தாளர்களின் பெயர்களை வெறுமனே இங்கு எழுதவில்லை. இவர்களில் ஒருவர் சற்று நேரத்தில் மேற்கோள் காட்டபடுவார்.) ஆனால் சிறு பிரச்னை. நான் படுக்கையறை விளக்கை உடனே அணைக்காமல், வெகுநேரம் விழித்திருப்பதால், ஒரு சுந்தரியுடனோ அல்லது புவனேஸ்வரியுடனோ குறுஞ்செய்தி பரிமாற்றத்தில் ஈடுபடுவதாக என் மனைவி எண்ணிவிடுகிறாள். அதிர்ஷ்டவசமாக, அவள் தூக்கத்தில் இருப்பதால், கோபம் கொள்வது பகல் வரும்வரை தள்ளிவைத்துவிடுகிறாள். இப்போதெல்லாம் கைத்தொலைபேசியை ஹாலிலேயே வைத்துவிட்டுத்தான் படுக்கையறைக்குப்போகிறேன். ஒரு சண்டைக்கான சந்தர்ப்பம் மிச்சம் பாருங்கள்.

+++++

ஒரு நாளிரவு சுந்தர.ராமசாமியின் "அகம்" என்ற சிறுகதை படித்தேன். ஜானு என்ற சிறுமியை பற்றியது.

சிறுவயதில், எனக்கு "டீஸல்" நெடி அலர்ஜி. பேருந்தில் போகும்போதோ பெட்ரோல் விற்கும் இடங்களில் நிற்கும்போதோ ஒரு மாதிரியான அவஸ்தை உண்டாகும். பேருந்தில் என் பக்கத்தில் உட்கார்ந்தவர்கள் அசிரத்தையாய் இருந்தால் தொப்பலாக நனைந்துபோவார்கள்.

“அகம்” சிறுகதையை படிக்கும்போது அதே போன்றதோர் அவஸ்தையால் வயிறு பிசைவது போன்ற சங்கடமேற்பட்டது.

ஜானு பள்ளி போகும் சிறுமி. அம்மாவுடன் இருக்கிறாள். அப்பா வேலை சம்பந்தமாக வேறெங்கோ இருக்கிறார். ஜானுவுக்கு அப்பாமேல் அளவு கடந்த பாசம். ஆனால், அப்பா வருடத்திற்கு ஒரு முறைதான் வருவார். அவள் அம்மா மருத்துவர் ஒருவருடன் "நெருக்கமாக" இருக்கிறாள். முதலில் ஜானுவுக்கு அந்த மருத்துவர் "மாமா"வை பிடித்துதான் இருந்தது. நாள் போகப்போக ஒருவெறுப்பு. பிக்னிக் போனால், அம்மாவும் டாக்டரும் ஜானுவை கார்-இல் தனியே உட்காரவைத்துவிட்டு சென்று விடுகிறார்கள். மருத்துவர் முன்னால் அம்மா ஜானுவிடம் அகம்பாவமாக நடந்துகொள்ளுகிறாள். மருத்துவரை ஜானு புறக்கணித்தாலும் அம்மாவிற்கு பிடிப்பதில்லை. ஒரு முறை ஜானு-வுக்கு காய்ச்சல் வரும்போது மூர்க்கத்தனமாக டாக்டரிடம் நடந்து ஊசி போடவிடாமல் செய்கிறாள். அப்போதுதான், அம்மாவிற்கு கொஞ்சம் உரைக்கிறது. மருத்துவரை இனிமேல் வரவேண்டாம் என்று சொல்ல, மருத்துவர் கோபமாகி "நீ என்ன உத்தமியா?" என்று மிரட்டி, அம்மாவை அவளுடைய அறைக்கு வலுக்கட்டாயமாக இழுத்து செல்கிறார். இதைக்கண்ட ஜானு, உணர்ச்சிவேகத்தில், டாக்டரின் காருக்குள் வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் கேன்-ஐ திறந்து ஊற்றி காரை எரிக்கப்போக, தீ வீட்டுக்குள்ளும் பரவி. மூவரும் கரிந்து இறந்துபோகிறார்கள்.

கதையை இப்படி முடித்து விட்டாரே என்று எழுத்தாளரின் மேல் வந்த கோபத்தை விட, பொருளீட்ட வெகுதூரம் போய், மனைவி மற்றும் மகளின் மனநிலையையே புரிந்துகொள்ளாத அந்த முகம் தெரியாத பாத்திரத்தின் மேல் அதிககோபம் வந்தது.

+++++

நிவேதா தானே தனக்குள் பேசிக்கொண்டு ஓரங்கநாடகம் போன்று எதையோ அவளுடைய படிக்கும் அறையில் அரங்கேற்றிகொண்டிருந்தாள். அதை கதவுமறைவில் ஒளிந்துகொண்டு இன்னும் கொஞ்ச நேரம் ரசித்திருக்க வேண்டும். என்னை பார்த்த மாத்திரத்தில் ஓரங்கநாடகம் நின்றுபோனது. அரைகுறையாக உடைந்த முன்பல்லைகாட்டி புன்னகை செய்தாள்.
"என்னம்மா செல்லம்…பண்ணிட்டிருக்கே?"
"சும்மா" – கன்னம் குழி விழுகிறதோ லேசாக? நான் ஏன் இதை முன்னரே கண்டிருக்கவில்லை?
"இந்த தடவை செல்லத்துக்கு பொறந்த நாளுக்கு என்ன வேணும்? "
இதற்குள் மனைவி எங்கள் உரையாடலில் புகுந்தாள். "அடேங்கப்பா…என்ன ஆச்சர்யம்…அப்பாவுக்கு நிவேதா செல்லத்தோட பர்த்டே ஞாபகம் இருக்கே? – என் கையில் கைதொலைபேசியோ அல்லது புத்தகமோ இல்லையே!

அப்புறம் எங்கள் உரையாடல் வேறு திசையில் சென்று விட்டது. லௌகீகமாக. நிவேதாவின் கன்னக்குழியை பற்றி மனைவியிடம் பேச மறந்தேபோனேன்.

நிவேதாவின் பிறந்த நாளன்று வைகறை துயிலெழுந்து வாழ்த்து சொல்லவேண்டுமென்ற என் திட்டம் தவிடுபொடியானது. எட்டு மணிக்கு தான் எழுந்தேன். கொத்தவரங்காயை கத்தியால் நறுக்கிகொண்டிருந்த மனைவி சுப்ரபாதம் பாடாரம்பித்தாள். வெங்கடேச பெருமாளுக்கு ஏற்கனவே பாடிவிட்டபடியால், இரண்டாவது தடவை எனக்கு, அதுவும் தமிழில்.

"குழந்தையோட பிறந்தநாள்னு பேரு…உங்களுக்கே கார்த்தாலே எழுந்து விஷ் பண்ணனும்னு கூட தோணலை.. ஹும் என்ன சொல்றது"

+++++

அலுவலகம் செல்லாமல் நேராக ஒரு அன்பளிப்புகள் வாங்கும் கடைக்கு சென்றேன். பொம்மைகள், விளையாட்டு பொருள்கள், எழுது பொருட்கள், கார்ட்டூன் குறுந்தட்டுகள், என்று எல்லாவற்றையும் பார்த்தேன். எதை வாங்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த வேளையில், கடைக்குள்ளின் ஓர் ஓரத்தில், ஒரு மேசை போட்டு அதற்கு பின்னால் நின்றிருந்த பெண்ணை பார்த்தேன். இல்லை அவள் புன்னகைக்கும்போது கன்னகுழி தோன்றவில்லை. சர்வேதேச கருணை இல்லங்களுக்கு நிதியளிக்கும் ஒரு நிறுவனத்தின் பெயரிட்ட பலகை மேசையில் இருந்தது. அணுகி விவரங்களை விசாரித்ததில், விசித்திரமான ஒரு திட்டத்தை பற்றி சொன்னாள். ஏதாவது அன்பளிப்பு வாங்க வருபவர்கள், இந்த நிதி நிறுவனத்துக்கு நன்கொடையளித்தால் அவர்கள் வாங்கும் அன்பளிப்பில் 50 % கழிவு அளிக்கப்படும். அந்த கடைக்காரர்களுக்கு இது எந்த விதத்தில் லாபமென்று எனக்கு புரியவில்லை. நான் நன்கொடை எதுவும் அளிக்கவில்லை. நிவேதாவுக்கு ஒரு பார்பி பொம்மையை வாங்கினேன்.

அலுவலகத்துக்கு அதை எடுத்துப்போனேன். சக ஊழியர்கள், "என்னப்பா யாருக்கு பரிசு வாங்கிகிட்டு போறீங்க? கேர்ள்பிரெண்ட்-க்கா?" என்று கேலி பண்ணினார்கள். வண்ணக்காகிதம் கொண்டு பாக் செய்யப்பட்ட அந்த பார்பி டாலை, பேருந்தில் கொண்டுபோனால் வசதியாக இருக்காது. சக ஊழியர்கள் வாயினால் சொன்னதை, சக பயணிகள் மனதிலேயே நினத்துக்கொள்ளக்கூடும். எனவே, ஆட்டோ-வில் வீட்டுக்கு போகலாமென்று முடிவெடுத்தேன்.

+++++

பரிசுப்பொருள் வீட்டை அடையும் முன்னரே தொலைந்துபோனது. எவ்வளவு யோசித்தும், பார்பி பொம்மையை எப்படி இழந்தோமென்று என்னால் அனுமானிக்க முடியவில்லை. காலையில் வாங்கினேன் அதை அலுவலகம் எடுத்துவந்தேன். நண்பர்கள் அதைப்பற்றி சிலாகித்தபோது கூட, என் மேசையின் பக்கவாட்டிலேயே கிடந்தது. சாப்பாட்டு இடைவேளை முடிந்து திரும்பியபோதும் பொம்மை பத்திரமாகவே இருந்தது. ஆட்டோவில் ஏறும்போது…..? அதை எடுத்துக்கொண்டோமா?…ஆட்டோ பழுதுபட்டு பாதியிலேயே நின்றதே…அப்போது அந்த பொம்மை கையில் இருந்ததா? மழை தூற்ற ஆரம்பித்தபோது, அதில் நனைந்து கொண்டிருந்தபோது….ஹும் இல்லை…அப்போது பொம்மை என் கையில் இல்லை…வந்த பேருந்தில் முட்டியடித்து ஏறியபோது…இல்லை…எனவே, ஆட்டோ-வில் இருந்திருக்கவேண்டும்…அல்லது…நாளை அலுவலகம் போய் தான் பார்க்கவேண்டும்… பஸ் ஸ்டாப்-இலிருந்து ஆமை நடை போட்டு வீடு வந்தேன்.

"என்னங்க இவ்வளவு லேட்டு…இத்தனை நேரம் நிவேதா உங்களுக்காகத்தான் முழிச்சிண்டிருந்தாள்..அப்பா வாங்கி குடுத்த கிப்டு அவளுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது…அதுவும் சர்ப்ரைஸ்-ஆ உங்க ஆபிஸ்பையன் மூலமா சாயந்திரம் வீட்டுக்கு அனுப்பிவச்சது . அது எனக்கு ரொம்ப பிடிசிருந்தது"

+++++

படுக்கைக்கு வந்தேன்…இன்று புத்தகம் படிக்கலாமா நேற்று படித்துக்கொண்டிருந்த சிறுகதை தொகுதியில் இன்னும் ஒரு கதை மிச்சமிருந்தது.

தலையணைக்கு கீழே ஒரு உறை இருந்தது…அதை எடுத்தேன்…

"நிவேதா இன்னிக்கி ஸ்கூலுக்கு தன்னோட பிரெண்ட்ஸ்-க்கு குடுக்க டாபி எடுத்துக்கிட்டுப்போனா..அப்போ அவ கிளாஸ் டீச்சர் நிவேதா கிட்ட இந்த டாபி பாக்கெட்டை ஒரு கருணையில்லத்துக்கு கொடுத்தா…உனக்கு பரிசு கூப்பன் கிடைக்கும். அத வச்சி உனக்கு புடிச்சது ஏதாவது வாங்கிக்கலாம்னு சொல்லியிருக்காங்க …இவ உடனே டாபிஸ் எல்லாத்தையும் டொனேட் பண்ணிட்டா…அப்பாக்கு இத சர்ப்பரைஸ்-ஆ குடுக்கணும்னு கிப்ட் கூப்பன்-அ உங்க தலகாணிக்கு கீழே வச்சிட்டு தூங்கிட்டா" – பெருமையும் மகிழ்ச்சியும் பொங்கிய குரலில் மனைவி பேசினாள்…

அன்று இரவு படுக்கையறையின் லைட் சீக்கிரமே அணைந்துவிட்டது.

ஓவியப்பெண்

நன்னம்பிக்கை
நெடுநாள் காத்திருப்பு முடிவடையும்.
ஓவியப்பெண் முகம் திரும்பாமலேயே
வேறு அருங்காட்சியகத்துக்கு போய்விடுவாள்.
வீட்டுக்கு இன்று திரும்பிப்போய்
"தண்ணி"யடிக்கவேண்டும்

கஞ்சத்தனம்
ஓவியப்பெண் உடையணியாமாலேயே
நிதர்சனமாய் பிரசன்னமானாள்.
சட்டகத்துக்கு நேர்கீழே நின்று பார்த்துக்கொண்டிருந்தவனை
காபி பருக அழைத்தாள்.
"காபி சரி. அப்புறம் உடை வாங்கித்தா என்று கேட்காதே"

சுயநலம்
சட்டகத்துள் நிர்வாணமான முதுகைக்காட்டி
சொரிந்து விடுமாறு கேட்டுக்கொண்ட
ஓவியப்பெண்ணை யாரும் செவிமடுக்கவில்லை !
"பாவிகள்…என்னை வரைந்த ஓவியனின் பிரஷை
ஏலத்தில் போட்டுவிட்டார்கள்"

ஜீவகாருண்யம்
ஓவியன் என்னை சேர்த்து
ஓர் எறும்பையும் வரைந்துவிட்டான்.
சாய்வாக குப்புற படுக்கவைத்து
கொஞ்சம் எனக்கு வசதி பண்ணித்தந்த ஓவியன்
பாவம், எறும்பை சுவரில் ஏற வைத்துவிட்டான்

புலனறிவு

கண்ணை தேடினான்
எங்கு தேடியும் பார்வையில் படவில்லை.
காது கேட்கிறதா?
ஓடாத வானொலியில் சத்தம் வரவில்லை.
சுவையுணர்ச்சி தொலைந்த ஐயம்.
புளியம்பழம் தின்றான்.
இனிப்பில்லை.
மூக்கு திறமிழக்கவே
மோந்து பார்க்க முயன்றான்.
காகிதப்பூ மணக்கவில்லை.
தொடுவுணர்ச்சியை பரிசோதித்தால்
தொடுவானம் எட்டவில்லை.

உயரமான மலையில்வாழ் வைத்தியனோருவன்
ஏதோவொன்றிலிருந்து
விழிப்புணர்வை எடுத்து
அறிவுலேகியம் சேர்த்து
மருந்தாக செய்து
நோயாளியை மயக்கத்திலாழ்த்தி
வைத்தியம் செய்தான்

இப்போது பார்வை தெரிந்தாலே
கண்ணிருக்குமிடம் தெரிந்துவிடுகிறது.
வானொலியின் தலையை தட்டினால்
பாட்டும் கேட்கிறது
இனிப்புச்சுவைக்கு
புளியம்பழம் சாப்பிடுவதில்லை.
காகிதப்பூங்கோத்து குப்பைக்ககூடையில்.
மல்லிகையின் வாசம் மூக்கைப்பிளக்கிறது

தொடுவானம் தொட ஆசைவந்தால்
தொடுவுணர்ச்சியல்ல வேண்டுவது!
வைத்தியன் ஏற்றுவித்த மென்பொருள்களே போதுமானது.