ஆங்கிலத்தில் லவ்-ஹேட் உறவு என்று சொல்வார்கள். அதாவது, ஒருவருடன் தினமும் நெருங்கிய தொடர்புடன் இயங்க
வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது, அந்த நபருடன் முழுக்க ஒத்துப்போகாமல் அதே சமயம் அவரை முழுக்க தள்ளமுடியாமல் இருக்கும் ஒரு நிலை. உதாரணமாக, எனது பாஸ்-ஐ எடுத்துக்கொள்ளலாம். அவரை எனக்கு பிடிப்பதில்லை. ஆனால், அதை செயலிலோ சொல்லிலோ காட்டமுடியாது. பாடி-லேங்வெஜ் என்று சொல்லப்படும், உடல் மொழி-யை வைத்து பிரியமின்மையை தெரியப்படுத்தினாலோ அவருக்கு உடன் பிடிபட்டுவிடுகிறது. முன்னை விட மூர்க்கமாக தன் முட்டாள்தனமான உரையாடல்களை தொடர்வார். பலமுறை, அவர் பேச்சை கேட்டபடியே, கைத்தொலைபேசியில் குறுஞ்செய்தியொன்றை உடன் வேலை செய்யும் உத்தியோகஸ்தருக்கு அனுப்பி, இன்டர்-காம் மூலமாக பேசச்சொல்லவேண்டியிருக்கிறது. "சார், ___ (என் பெயர்) உங்களுடன் இருக்கிறாரா?…போலந்திலிருந்து வாடிக்கையாளரின் அழைப்பு வந்தது…ஏதோ அவசரமாக பேசவேண்டுமாம்.."..உடனே "போலந்து வாடிக்கையாளருக்கு" போன் செய்ய அனுப்பப்பட்டு விடுவேன்.
+++++
என்னுடைய பாஸ்-சுடைய பாஸ் ஒருவர் இருக்கிறார். அவரை எக்ஸ் என்று அழைப்போம். எக்ஸ் என்னுடைய பாஸ்-சிடம் "என்ன புதிதாக வியாபாரம் கொண்டு வந்தீர்கள்?" என்று கேட்டால், "___ (என் பெயர்) னைத்தான் கேட்கவேண்டும்?" என்று பதில் வரும்.
"S நிறுவனத்திடமிருந்து ஒரு பேமென்ட் வராமல் இருந்ததே?"
"__ (என் பெயர்) பாலோ பண்ணிட்டிருந்தான்"
"அடுத்த மூணு மாச விற்பனை பட்ஜெட்படி போகுமா?"
"போகும்-னு __ (என் பெயர்) சொன்னான்"
மேற்கண்ட உரையாடலை படித்தால், எக்ஸ் நேராக என்னிடம் பேசினால் துல்லியமான தகவல் கிட்டுவதுடன், நேரமும் மிச்சமாகுமே என்று தோன்றுகிறதா? எனக்கும் பலமுறை தோன்றியது.
ஒருமுறை நான், பாஸ் மற்றும் எக்ஸ் தில்லியிலிருந்து வந்த ஒரு வாடிக்கையாளருக்கு விருந்தளித்தோம். அந்த விருந்திற்கு வாடிக்கையாளர் தன்னுடைய ஒன்று விட்ட பெரியப்பாவின் மாப்பிள்ளையும் அழைத்து வந்திருந்தார். விருந்திற்கு வந்த மாப்பிள்ளை சார் தான் புதிதாக துவக்க இருக்கும் நேந்திரங்காய் வறுவல் வியாபாரத்தைப்பற்றி பிரஸ்தாபித்து அதற்க்கான சில ஆலோசனைகளை பெறும் நோக்கில் எக்சிடம் சில கேள்விகளை எழுப்பினான்.
"இதற்க்கு நான் பதிலளிப்பதைவிட ___ (பாஸ்-சின் பெயர்) பதிலளித்தால் ரொம்ப உபயோகமாக இருக்கும். சந்தையியல் துறையில் வல்லுனராக எங்கள் தொழிலில் மதிக்கப்படுபவர் அவர்" என்றவாறே ஐஸ்-ஐ எடுத்து தன்னுடைய கோப்பைக்குள் போட்டார். அந்த ஐஸ் தவறி பாஸ்-சின் தட்டில் விழுந்தது.
பாஸ்-சின் பெருமிதத்துடன் புன்னகைத்தார் – அது அவர் தட்டில் விழுந்த ஐஸ்-சுக்கா அல்லது எக்ஸ் தந்த உயர்வு நவிற்சி அறிமுகத்துக்கா என்பது தெரியவில்லை.
மாப்பிள்ளை சார்-இடம் பேச ஆரம்பித்தார் பாஸ். "ஒன்று செய்யுங்கள்…நாளை என்னை என் அலுவலகத்தில் வந்து சந்தியுங்கள். நேந்திரங்காய் வறுவல் மார்கெட்டை பற்றியும் சமீபத்திய போக்குகள் பற்றியும் சில தெளிவுகளை எங்களுக்கு அளிக்கிறேன். அதை வைத்து உங்களுடைய திட்டத்தை நீங்கள் மேலும் துல்லியமாக செதுக்கிக்கொள்ளலாம்" என்று சொல்லிவிட்டு பக்கத்தில் இருந்த திசு காகிதங்களை எடுத்து வாயை முடிக்கொண்டு தன் உதட்டை சுத்தப்படுத்திக்கொண்டார்.
அடுத்த நாள், மாப்பிள்ளை சார் என்னிடம் அனுப்பி வைக்கப்பட்டார். "பாஸ்-சை சந்தித்தீர்களா?" என்று கேட்டேன்.
"ஆம், சந்தித்தேன். அவர் உங்களைப்பற்றி உயர்வாகச்சொன்னார். உங்களுக்கு சிற்றுண்டிஉணவுபொருட்களை விற்பதில் நல்ல அனுபவம் உண்டாமே?"
அவருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் வெறுமனே விழித்தேன். கிட்டத்தட்ட அரை மணிநேர உரையாடலுக்கு பிறகு மாப்பிள்ளை சார் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. "நான் கிளம்புகிறேன்" என்றார். எங்கள் நிறுவனத்தின் வியாபாரக்குறி பொறித்த தொப்பியை மாப்பிள்ளை சாருக்கு அன்பளிப்பாக கொடுத்தேன். "வெளியே வெயில் அதிகமாக இருக்கிறது. இதனை இங்கேயே அணிந்துகொண்டு வெளியே செல்கிறேன்" என்று சொல்லி தொப்பியை போட்டுக்கொண்டார்.
பாஸ் புதுமை மிகு வழிகளில் அதிர்ச்சி கொடுக்கப்போகிறார் என்பதே தெரியாவண்ணம் பல உத்திகளை கையாள்வதில் விற்பன்னர். முக்கியமாக, நகைச்சுவையை கூட கோபஉருவில் அளிப்பார். அவருக்கு கோபம் வரும்போது நகைச்சுவை பண்ணுகிறாரோ என்று தோன்றும்.
வியாபார விஷயங்களில் முடிவேடுக்காமை என்ற குணத்தை கோபம், வாதம் போன்றவற்றால் அபாரமாக மறைத்து விடுவார். அவருடைய சினம் கலந்த, இயலாமை தோய்ந்த திறனாய்வுகளை கேட்கும்போது பொறுமை இழக்காமல் இருப்பது கடினம். "நாமே ஏதாவது பார்த்துக்கொள்ளலாம்" என்று பலமுறை அவரை முடிவேடுக்கவைக்கும் இக்கட்டிலிருந்து நானே காப்பாற்றிவிடுவேன், எங்கெல்லாம் அவரே முடிவெடுத்தாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்போது, நிறைய பேச்சுகேட்கும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டே அணுக வேண்டியிருக்கும்.
+++++
நகமும் சதையுமாய் கூடிக்குலாவிக்கொண்டிருந்த பாஸ்-சுக்கும் எக்ஸ்-க்கும் நடுவே சில இடைவெளிகள் விழுந்தன. ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் எக்ஸ்-சின் அறையே கதியாகக்கிடந்த பாஸ், இப்போதெல்லாம் தனது அறையிலேயே கழிக்கவேண்டியதாயிற்று.
இன்டெர்-காமில் அன்புடன் விளித்து என்னை கூப்பிட்டார். தேனும் பாலுமாய் வார்த்தைகள் வெளிவந்தன.
"உனக்கு ஞாபகம் இருக்கும்…உன்னை நானே நேர்முகம் செய்து வேலைக்கு நியமனம் செய்தேன். நான் வேறுவேலைக்கு போய்விட்டால், அங்கேயும் நான் உன்னை அழைத்துக்கொண்டு போகமுடியும்"
"சார் என்ன ஆயிற்று? வேலையை விட்டு நீங்குவதைப்பற்றி இப்போது ஏன் பேசுகிறீர்கள்?"
"இல்லை…இவ்விடம் நமக்கு ஏற்றதில்லை.." – விரக்தி பொங்கியது அவர் பேச்சில். கடைசி வரை ஏனிந்த விரக்தி என்பது எனக்கு பிடிபடவில்லை. கொஞ்சம்கூட அர்த்தமேற்படுத்தாத வார்த்தைகளை மணிக்கணக்காக பேசுவதில்தான் அவர் வித்தகர் ஆயிற்றே?
+++++
ஒரு வாரத்துக்கு பிறகு பாஸ் – எக்ஸ் உறவு சுமுகமாகிவிட்டது. முன்னர்போல், 3 மணி சீரியலை எக்ஸ்’ன் அறையின் சுவரில் பொருத்தப்பட்ட டி வி-யிலேயே மீண்டும் இருவரும் பார்க்கத்தொடங்கினார்கள்.
+++++
ஊதியஉயர்வுக்காலம் வந்தது. ஊழியர்களின் நெஞ்சில் எதிர்பார்ப்புகள். எனக்கும்தான். கழிந்த வருடத்தில் என்னுடைய செயல்திறனாலும் உழைப்பாலும் நல்ல விற்பனை நிகழ்ந்திருந்தது என்று நான் நம்பினேன். ஒருநாள் பாஸ் எல்லாருக்கும் மின்னஞ்சல் அனுப்பிஇருந்தார். அந்த "நல்ல"செய்தியை எல்லா ஊழியரிடமும் தனிப்பட்டமுறையில் பேசி தகுந்த விளக்கத்துடன் அளித்திருக்கவேண்டுமென்று பாஸ்-சோ எக்ஸ்-சோ நினைக்கவில்லை. செய்தி இதுதான் : "போதுமான லாபமின்மையாலும், அண்மையான எதிர்காலத்தில் திட்டமிடப்பட்டுள்ள தொழில் விரிவாக்கங்களுக்கு தேவையான ரொக்கநிலமையை பராமரிக்கும் பொருட்டும் பணியாளர்களின் ஊதியத்திருத்தங்கள் ஆறு மாதங்களுக்கு தள்ளிவைக்கப்படுகின்றன."
+++++
பாஸ் மீண்டும் வேலை மாறுவது பற்றி பேசவில்லை. நிறுவனம் பாஸ்-க்கு புதிய சொகுசு கார் வழங்கியிருந்தது. பாஸ்-சும் எக்ஸ்-சும் தினமும் சேர்ந்தே அலுவலகம் வந்தார்கள். பாஸ் தன்னுடைய புது கார்-இல் எக்ஸ்-சை தினமும் கூட்டிவந்தார். நிறுவனம் பங்குதாரர்களுக்கு 25 % பங்காதாயம் அறிவித்தது. ஊழியர்கள் ஆறு மாதமுடிவுக்காக காத்திருந்தார்கள்.
+++++
நான் 6 மாதம் காத்திருக்கவில்லை. வேறு ஒரு நிறுவனம் என்னை வேலையில் சேரும்படி அழைத்தனர். ஆனால் நான் கேட்ட சம்பளத்தை தர ஏனோ தயங்கினர். புது நிறுவனம் யோசித்துக்கொண்டிருந்த வேளையிலேயே நான் கையிலிருந்த வேலையை ராஜினாமா செய்தேன். பாஸ் என்னை தடுத்து நிறுத்த சாம, தான, பேத தண்டம் எல்லாவற்றையும் பயன்படுத்தினார். கடைசியாக, எனக்கு மட்டும் சிறப்பு ஊதியஉயர்வு கடிதத்தை கொடுத்து, ராஜினாமாவை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு வேண்டினார். நான் நாளை சொல்லுகிறேன் என்று அக்கடிதத்தின் நகலை மட்டும் எடுத்துக்கொண்டேன். நான் கேட்ட சம்பளத்தை தர புது நிறுவனம் ஒத்துக்கொண்டது.
+++++
அடுத்த வருட ஊதியஉயர்வு காலம் வரை கூட பாஸ் வேலையில் பிழைக்கவில்லை என்ற செய்தி நண்பர்கள் மூலம் என்னை எட்டியது. பாவம், எக்ஸ்! அவரே கார்-ஐ ஒட்டிக்கொண்டு அலுவலகத்துக்கு வரவேண்டும்.