பரிமாணம்

இந்த ஞாயிறும் ரவியின் ஏமாற்றம் தொடர்ந்தவண்ணம் இருந்தது. சில பேருக்கு மட்டும் எண்ணியபடி எல்லாம் எப்படி நிறைவேறுகிறது? அவனை பல நாட்களாக பாதித்து வரும் கேள்வி இதுதான். புதிதாக வெளியாகி இருந்த ஒரு திரைப்படத்தைப்பற்றி எல்லோரும் பேசிக்கொண்டார்கள். அனேகமாக, அவனது வகுப்பில் எல்லா மாணவர்களும் அந்த படத்தை பார்த்துவிட்டார்கள். படத்தில் வரும் கதாநாயகனின் நடிப்பைபற்றியும், அப்படத்தில் அறிமுகமான அழகான முகம் கொண்ட அந்த நடிகையை பற்றியும் சக மாணவர்கள் பேச்சை கேட்டு அலுத்துப்போய்விட்டது. நாலு வாரங்களாக எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை முதல் நண்பகல் வரை அப்பாவிடம் அனுமதி கேட்டு இவன் சலித்து விட்டான். ஆனால், அந்த சினிமா-வுக்குபபோக ரவியை அனுமதிக்கக்கூடாது என்ற நிலை அவனது அப்பாவுக்கு கொஞ்சமும் திகட்டவில்லை. பக்கத்து வீட்டு சந்துரு அதே திரைப்படத்தை இரண்டாவது முறையாக கூட பார்த்துவிட்டான். ஊரிலிருந்து வந்திருந்த தன்னுடைய மாமாவுடன் சென்று வந்திருக்கிறான்.

அப்பாவின் தாராளவாதமின்மை எங்கிருந்து ஜனித்தது? ஏன் இந்த குருரமான பிடிவாதம்? 2 ரூபாய் கூட மகனின் சந்தோஷத்துக்காக செலவழிக்க முடியாதா? அம்மா-விடம் புலம்பி ஒரு பயனும் இல்லை. "நான் என்னடா செய்வது? அப்பா கொடுக்கமாட்டேன் என்கிறார். நான் என்ன சம்பாதிக்கிறேனா? திருடியா தரமுடியும்" என்பது மாதிரியான கழிவிரக்கம் நிரம்பிய வசனங்களையே கேட்கவேண்டிவரும்.

+++++

25 வருடங்களுக்குப்பிறகே அவன் அந்த படத்தை காண முடிந்தது. ஒரு புதன் கிழமை மதியம் அந்தப்படம் தொலைக்காட்சியில் வந்தது. காய்ச்சல் என்று அலுவலகத்திற்கு போகாமல் இருந்ததால், அந்தப்படத்தை காணும் சந்தர்ப்பம் கிட்டியது. அந்த படத்தை காணும்பொழுதுதான் மேற்கண்ட பிளாஷ்பாக் அவன் நெஞ்சில் ஓடியது,

அந்தப்படத்தில் அறிமுகமான நடிகையில் சமீப புகைப்படத்தை ஒரு பத்திரிக்கையில் போட்டிருந்தார்கள். இளமையழகு உருமாறி வசீகரமான பாட்டி உரு வந்திருந்தது. வயதான காலத்தில் வசீகரமான உருவம் என்பது சிலருக்கே வாய்க்கிறது. ரவியின் அம்மா, அப்பா இருவருமே மிக வயதானவர்களாக ஆகிவிட்டார்கள். சகோதரனுடன் மும்பையில் வசிக்கிறார்கள்.

இளவயதின் அழகு இயல்பாக அமைகிறது. பருவத்தில் ஆணாகட்டும், பெண்ணாகட்டும் எழிலுடன் தெரிகிறார்கள். வருடங்கள் நகரத்துவங்க, கவர்ச்சி விலக ஆரம்பிக்கிறது. ஆனால் வயதான பிறகு, வணங்கத்தக்க ஒரு வசீகரத்தை சில பேரால் அடையமுடிகிறது. எம்.எஸ்.சுப்புலட்சுமியின் கடைசிகால புகைப்படங்களில் எப்படி இருந்தார்! அவ்வசீகரம் எங்கிருந்து வருகிறது என்பதற்கு ரவியிடம் ஒரு தியரி இருந்தது. உள்ளிருக்கும் அமைதியும் திருப்தியுமே வசீகரத்தை வயதான காலங்களில் தருகிறது என்று அவன் எண்ணினான். இந்த எண்ணம், அறிவியல்பூர்வமானதா என்பது பற்றி அவன் அதிகம் யோசித்ததில்லை. எல்லா எண்ணங்களும், அபிப்ராயங்களும் அறிவியல்விதிகளுக்குள் அடங்கவேண்டுமென்ற பிடிவாதமும் அவனிடத்தில் இல்லை.

+++++

ஐந்தாறு வருடங்களாக திரும்ப திரும்ப அழைத்தும் தில்லியின் கடும்குளிரையும் சுடும்வெயிலையும் காரணம்காட்டி வராமல் இருந்த, அம்மாவும் அப்பாவும் ஒருநாள் திடீரென்று ரவியின் வீட்டிற்கு விஜயம் செய்தனர். குளிர்காலம் ஆரம்பிக்க இன்னும் இருமாதங்களே இருந்தன. குளிர்காலம் தொடங்கிய பின்னும், ரவியின் வீட்டிலேயே தொடர்ந்து தங்கினர். ரவியின் மனைவி – மாலாவுக்கு இது கொஞ்சம் புதிதுதான். ரவி-க்கு திருமணமாகி 13 ஆண்டுகளுக்குப்பின்னர், தொடர்ச்சியாக இரு மாதங்கள் தங்குவது இதுதான் முதல் முறை.

+++++

கல்யாணமான புதிதில், மாலாவிற்கு மஞ்சள் காய்ச்சல் வந்தது. அப்போதெல்லாம், ரவியின் பெற்றோர்கள் தனியே வசித்து வந்தார்கள். ரவியின் சகோதரன் வெளிநாட்டில் வசித்து வந்தநேரமது. ரவி தன் அம்மாவிற்கு போன் செய்து "மாலாவுக்கு மஞ்சள் காய்ச்சல். அவளை கவனித்துக்கொள்ள ஓரிரு வாரங்கள் வந்து என்னோடு தங்கியிருப்பாயா? எனக்கு கல்யாணமான பின்னர் குடித்தனம் வைக்கக்கூட நீயும் அப்பாவும் வரவில்லை" என்று கேட்டான். அதற்கு அம்மா அளித்த பதிலைக்கேட்ட பிறகு அதிக நேரம் அந்த போன்-உரையாடல் நீடிக்கவில்லை. "நீ கணவன் ஆகிவிட்டாய். உன் பெண்டாட்டியை பார்த்துக்கொள்ள தெரிந்துகொள்ள வேண்டும். இனிமேயும் என்மேல் சார்ந்திருக்கக்கூடாது" ரவியும் சீக்கிரமே பெற்றோரின்மேல் உணர்வுபூர்வமாக சாராமல் இருப்பது எப்படி என்று கற்றுக்கொண்டான். ஆனாலும், சமூகப்பார்வையில் கடமையாக கருதப்படும் பெற்றோர்களுக்கு செய்யப்படும் எல்லா செயல்களையும் மறக்காமல் புரிந்தான். ஒரு நல்ல மகனில்லை என்று யாரும் சொல்லிவிடக்கூடாது என்பதில் அவன் உறுதியாய் இருந்தான்.

ரவியின் சகோதரன் – சுரேஷ் – வேலையிழந்து இந்தியா திரும்பினான். மும்பை-யில் ஒரு அதி சொகுசான அபார்ட்மென்ட் வாங்கினான். தன்னோடு வந்து இருங்கள் என்று ரவி பலமுறை அழைத்தும் தில்லி வராத பெற்றோர்கள், சுரேஷ் அழைத்ததும் பூர்விக கிராம வீட்டைவிற்று, சுரேஷ்-இன் குடும்பத்துடன் இருக்க மும்பை வந்தார்கள்.

கிரகப்ரவேசத்திற்குப்போனபோது, சுரேஷ்-இன் புது அபார்ட்மெண்டை பார்த்து வியந்துபோன மாலா "நமது ஒரு படுக்கையறை, ஹால் கிட்சன் வீடு உங்கள் பெற்றோர்களுக்கு வசதி குறைவானதாகத்தான் படும்" என்று ரவியின் காதுக்குள் முணுமுணுத்தாள்.

+++++

அம்மாவும் அப்பாவும் ரவியின் வீட்டிற்கு வந்து முன்று மாதங்களுக்கு மேல் ஆகிறது. மும்பை-இலிருந்து சகோதரனிடம் அம்மா தன் கைத்தொலைபேசியில் பேசுவது வெகுவாகக்குறைந்திருந்தது. அப்படி போன் வந்தாலும், அம்மா கைத்தொலைபேசியை எடுத்துக்கொண்டு, அடுத்த அறைக்கு போய் யாருமே கேட்காத படி பேசலானாள். சத்தம் போட்டே தொலைபேசியில் பேசும் பழக்கம் கொண்ட ரவியின் குடும்பத்திற்கு இது புதுசு. போன்-இல் மேள்ளபெசுவது நாகரீகம்தான். ஆனால், அந்த நாகரீகம் நான் பேசிக்கொள்வதை இவன் கேட்கக்கூடாது என்ற எண்ணத்தில் மட்டும் பேணப்பட்டால்? ரவிக்கு அம்மாவின் "நாகரீகம்" ரசிக்கவில்லை.

+++++

ரவியும் சுரேஷும் அதிகம் போன்-இல் பேசிக்கொள்வதில்லை. பொங்கலுக்கும், தீபாவளிக்கும் என்றுதான் பேசிக்கொள்வார்கள். "எப்படி இருக்கே" என்ற கேள்விக்கு பதில் சொன்ன பின் அப்புறம் என்ன பேசுவது என்ற குழப்பத்தில், போன்-இல் மௌனம் நிலவும். அந்த மௌனம் ரவிக்கு துக்கத்தை ஏற்படுத்தும்.

சுரேஷ் ஒருநாள் போன் பண்ணினான்.
"நீ அடுத்து மும்பை எப்போ வரப்போறே…ஆபீஸ் விஷயமா அப்பப்போ வருவியே!"
"இப்போதைக்கு எதுவும் சந்தர்ப்பம் இல்ல…ஏன் கேட்கறே?"
"இல்ல…அப்படி வந்தேன்னா அப்பாவோட சில டாகுமென்ட்ஸ் இங்கே இருக்கு…அத நீ எடுத்துகிட்டு போகலாம்"

ரவிக்கு சுத்தமாக ஒன்றும் புரியவில்லை. "இப்போ என்ன அவசரம்…அப்பா ஒண்ணும் எங்கிட்ட சொல்லலியே" என்றான். "அப்பகிட்ட பேசிக்கோ" என்று சுரேஷ் சொன்னான்.

அப்பா "என்ன டாகுமென்ட்…அம்மா எதாவது சொன்னாளா?" என்று மழுப்பினார். ரவி-க்கு எதுவும் நன்றாகப்படவில்லை.

+++++

மாலா மும்பை-இலிருந்து அப்பா பெயருக்கு ஒரு கூரியர் வந்ததாகவும், அதிலிருந்து வந்த ஒரு டாகுமென்ட்-இல் அப்பா கையெழுத்திட்டதாகவும் சொன்னாள். எல்லாம் ஒரே ஊகம்தான். இரண்டாவது மகனிடமே எதுவும் சொல்லவேண்டும் என்று அவர்களுக்கு தோன்றவில்லை. மருமகளிடமா சொல்வார்கள்?

+++++

டாகுமென்ட்ஸ் பற்றிய மர்ம சீக்கிரமே துலங்கியது. ஒரு சனிக்கிழமை மாலை, ரவியின் அம்மாவும் அப்பாவும்
வீட்டருகே இருந்த குருவாயுரப்பன் கோவிலுக்கு சென்றிருந்தனர். அந்நேரம் அப்பாவின் பெயருக்கு வந்திருந்த கூரியரை ரவி பெற்றுக்கொண்டான். வந்த உறையின் வாய் திறந்திருந்தது. கூரியர் கம்பெனி அந்த தபாலை சரியாகக் கையாளவில்லை போலும்!

எல் ஐ சி பாலிசி-க்கு எதிராக அப்பா ஒரு கடன் வாங்கியிருக்கிறார். எண்பதாயிரம் ரூபாய்க்கான காசோலையும் வந்த கடிதத்துடன் இணைக்கப்பட்டிருந்தது.

+++++
"இ…இது எப்போ வந்தது?" – அப்பாவின் குரலில் தடுமாற்றம்.
"இது என்னதுப்பா…இந்த வயசுல லோன்…உனக்கென்ன தேவை…அப்படி இருந்தா நான் வாங்கிக்கொடுக்க மாட்டேனா?" – கோபம், ஏமாற்றம், அக்கறை – மூன்றும் சரிசம விகிதத்தில் கலந்து பணிவுடன் கேட்டான் ரவி.
"இ..இல்லப்பா…எனக்கு எதுவும் வேண்டாம்" – அப்பாவின் விழி நேருக்கு நேர் பார்க்காதது போல் ரவிக்கு தோன்றியது.
"அப்போ இந்த லோன்?" – ரவி விசாரணையை தொடர்ந்தான்.
அப்பா அம்மாவை நோக்கினார். அம்மாவும் மெளனமாக "நீங்களே சொல்லுங்க" என்று சொன்னார் போலிருந்தது. அப்பா புரிந்து கொண்டு, கன்னத்தை சொரிந்து கொண்டு "உனக்கு இது தெரிஞ்சிருக்காதுன்னு தான் நினைக்கிறேன்…ஏன்னா இத்தனை வருடங்களா இதைப்பத்தி உன்னையும் சேர்த்து யாரு கிட்டயும் இதை சொல்லலே…நீ வேறு மாதிரி நினைக்கக்கூடாது… உன் அண்ணன் இந்தியா திரும்பி வந்ததிலிருந்தே வேலை கிடையாது….சிங்கப்பூரில் வாங்கிய சம்பளமே இங்கும் கிடைக்கவேண்டும் என்ற எதிர் பார்ப்பிலோ, ஆரம்பத்தில் வந்த வேலைகளை உன் அண்ணன் நிராகரிச்சான்…பின்னர் கெடைச்ச ஒரு வேலையில தன்னை சரியாய் ட்ரிட் பண்ணவில்லைஎன்று விட்டுட்டு வந்தான். அதுக்கப்புறம் பல மாதங்களாகவே ஒரு வேலைக்கும் அப்ளை பண்ணாமலேயே இருந்தான்…நானும் அம்மாவும் அவனை போர்ஸ் செஞ்சு பல வேலைகளுக்கு அப்ளை பண்ண வச்சோம்..என்னமோ தெரியலே ஒரு வேலையிலும் அவன் செலக்ட் ஆகலை…இவன் தப்பா..இல்லாட்டி ரொம்ப நாள் கேப் விழுந்துட்ட காரணத்தால் நிறுவனங்கள் இவனை ரிஜெக்ட் செய்யுதான்னு தெரியலை…"

அப்பாவின் கண் கலங்கியது மாதிரி இருந்தது. அம்மாவோ அழுகையை கட்டுபடுத்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இரு வயதான மனிதர்களின் துக்கம், மாலாவின் மனதையும் உருக்கியிருக்கவேண்டும். பரிவுடன் அம்மாவின் தோள்களை தொட்டாள்.

"வயதான காலத்தில் குழந்தைகளுக்கு பாரமாக இருக்கக்கூடாது என்ற எண்ணத்தில்தான் சுரேஷுக்கும் உனக்கும் கல்யாணமான பிறகும் கிராமத்திலேயே இருந்தோம். எனது நிதிகளையும் நானோ அம்மாவோ மகன்களின் மேல் சார்ந்திருக்காமல் இருக்கும்படியே திட்டமிட்டேன்…ஆனால் இரு மகன்களில் ஒரு மகன் என்னை நம்பியே இருப்பான் என்று எனக்கு தெரியாமல் போய் விட்டது. சுரேஷ் தன் எல்லா சேமிப்பையும் கரைத்து வீடு வாங்கியதோடு சரி. அவன் குடும்பம் என்னுடைய பென்ஷன் மற்றும் நிரந்தர வைப்பு நிதி வட்டியிலேயே நடக்கிறது. இப்போது நானும் அம்மாவும் உன்னுடன் இருப்பதால், எங்களுக்காக அவன் செலவு எதுவும் செய்யவேண்டியதில்லை."

"இந்த லோன் கூட சுரேஷின் மூத்த பையனின் கல்லூரி சேர்க்கைகாகத்தான்..இன்னும் மெச்சூர் ஆகாமல் இருக்கிற என்னோட ஒரே பாலிசிய வச்சு வாங்கினேன்"

அம்மா கொஞ்சம் அமைதியான மாதிரி தெரிந்தது. மாலா அம்மாவுக்கு நீர் பருகத்தந்தாள். கழுத்தின் உருண்டை உருள "கடகட"வென்று அம்மா தண்ணீர் குடித்தாள்.

"நீ சுரேஷ் மாதிரி இல்லை. எதையும் சமயோசிதமா யோசிச்சு நடுநிலையான நோக்கில் முடிவெடுப்பாய். எந்த நிலைமையிலும் உன் கால்கள் தரையில் ஊன்றியிருக்கும். வானத்துக்கு ஆசை பட்டு நிற்கும் நிலத்தை எப்போதும் இழக்கமாட்டாய்…உண்மையாசொல்றேன், உங்க அண்ணன்கிட்ட இல்லாத உன்னோட ரெசிலீயன்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும்…"

தான் அப்பாவை பற்றி அறிந்திருப்பதை விட அப்பா தன்னை பற்றி நன்றாக அறிந்திருக்கிறார் என்பதை ரவி உணர்ந்தான்.

+++++

அம்மா தொலைகாட்சி பார்க்க ஆரம்பித்திருந்தாள். எம் எஸ் பற்றிய ஒரு டாகுமெண்டரி ஓடிக்கொண்டிருந்தது. "பாவயாமி ரகுராமம்" பாடிக்கொண்டிருந்தார் எம் எஸ். அடுத்த அறையில் அப்பா ரவியின் பையனுக்கு கணக்கு பாடம் சொல்லிகொடுக்க ஆரம்பித்தார். ரவிக்கு அப்பாவும் அம்மாவும் அன்று மாலைதான் மும்பையிலிருந்து வந்திறங்கியது போல் பட்டது.

2 Comments

  1. natbas says:

    சுவாரசியமாக எழுதறீங்க சார், சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன்.

    இந்தக் கதை நன்றாக இருக்கிறது. நன்றி.

    1. hemgan says:

      மிக்க நன்றி. உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் தொடர்ந்து எழுதுங்கள்

Leave a reply to hemgan Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.