நிலம்

நிலம் என்ற ஒன்று படைக்கப்பட்டிராவிடில், சிருஷ்டி செய்யப்பட்ட உயிரினங்கள் எங்கு வாழ்ந்திருக்கக்கூடும்? எல்லாமே நீர் வாழ் உயிரினமாகவே இருந்திருக்குமா?. நிலமும் நீரும் உயிரினங்கள் வருவதற்கு முன்னரேயே உருவாகிவிட்டனவே!

நிலத்துக்கேன்றும், நீருக்கேன்றும் தனித்தனி உயிரினங்கள் தோன்றின. பரந்து, விரிந்திருக்கும் நிலத்தின் ஒவ்வொரு பரப்பிலும், அப்பரப்பின் இயற்கையின் தனித்தனி உருவைப்போல விதம் விதமான உயிரினங்கள் ஜீவித்து வருகின்றன. புரியாத ஏதோ ஒரு கடமையை இவ்வுயிரினங்களுக்கு இயற்கை அளித்திருக்கிறது.

ஒவ்வொரு புவியியல் பகுதிகளிலும், நிலத்தின் உரு மாறுகிறது. பள்ளத்தாக்கு, மலை நிலம், வயற்காடு, வெப்பமண்டல காடு, எவ்வளவோ உரு? அங்கங்கு வாழும் உயிரினங்களும், அந்தந்த நிலத்துக்கேற்றவாறு உள்ளன. சில மிருகங்கங்கள், சில பிரதேசங்களில் மட்டுமே வாழ்கின்றன. ஒட்டகத்தைக்காண பாலைவனமும், கரடிகளைக்காண குளிர் பிரதேசமும் போகவேண்டியிருக்கிறது.

+++++

உலகத்திலே நுகர்ந்து அனுபவிக்க பல பொருள்களும், விஷயங்களும் இருக்கின்றன. வெறும் பொருட்கள் மட்டும் இருந்திருந்தால், அனுபவம் முழுமை பெற்றிருக்காது. பொருட்களின் அழகையும் நுண்மையையும் ரசிக்க, உணர்ச்சி என்ற ஒன்றும் தேவையாயிருக்கிறது. கண்ணுக்குத் தெரியும் பொருளோடு, உணர்ச்சி என்ற கண்ணுக்கு தெரியாத கருவியும் இணைந்து அப்பொருளுக்கும் அப்பொருளை நுகர்பவருக்கும் ஓர் அர்த்தத்தை அளிக்கின்றன.

உணர்சசிக்கருவிகள் பல்வேறு வகைப்பட்டன – பயபக்தி, உறுதி, தன்னம்பிக்கை, திறன், நிச்சயம், சந்தோஷம், சுகம், தயை, தைரியம், தீர்மானம், உற்சாகம், ஆவல், ஆற்றல், கிளர்ச்சி, எதிர்பார்ப்பு, எழுச்சி, சிறப்புத்தன்மை, ஆச்சர்யம், உவகை, நன்றி, போற்றும்தன்மை, கவர்ச்சி, வசீகரம், நம்பிக்கை, நகைச்சுவை, ஊக்கம், அக்கறை, சுறுசுறுப்பு, அன்பு, விளையாட்டுத்தன்மை, அமைதி, இன்பம், பலம், பெருமை, நேர்மறை, ஸ்திரம், கம்பீரம், மேன்மை, சிலிர்ப்பு – வரிசை அனகோண்டா பாம்பு மாதிரி மிக நீளமானது.

பயம் மற்றும் வன்முறை சார்ந்த உணர்ச்சிகள், நேர்மறைக்கு மாறான உணர்ச்சிகள். எதிர்மறை உணர்ச்சிகள். தன்னைக்காத்துக்கொள்ள வேண்டும் என்ற தற்காப்பு உணர்வின் மறுவடிவமாக அவைகள் கொடுக்கப்பட்டிருக்கலாம்.

எல்லா உணர்ச்சிகளும் எல்லாருக்கும் ஒரே அளவினதாய் கொடுக்கப்பட்டதாக தெரியவில்லை. சாதாரண ஒரு செல் உயிரினத்திலிருந்து, சிக்கலான படைப்புகள் வரை பல படைக்கப்பட்டிருக்கின்றன. சிக்கலான உயிரினங்களுக்கு சிக்கலான, மேலே குறிப்பிட்ட குறிப்பிடப்படாத பல உணர்ச்சிக்கருவிகள் அளிக்கப்பட்டுள்ளன. எந்த உணர்ச்சி எப்போது உபயோகிக்கப்படும் என்று சொல்வது மிகக்கடினம். அந்த உயிரினத்தின் ஆளுமையையும், சமூக பழக்கங்களையும், அப்போதைய மனநிலையையும் பொறுத்தது. இதற்கும் மேலாக அந்த உயிரினத்தின் தன்னினைவுடன் இயங்கும் அறிவை பொறுத்தது.

+++++

பொருள் ஒன்று. ஆனால் அதைக்காணும்போது ஏற்படும் உணர்ச்சிகள் வெவ்வேறு. கருநிறமான, நீளமான பாம்பு. பயவுணர்ச்சியை ஏற்படுத்தலாம். அல்லது அறியும் ஆவலை ஏற்படுத்தலாம். கொன்றுபோடும் வன்முறையை எண்ணத்தை உண்டாக்கலாம். அதே இன பெண் பாம்புக்கு காதல் உணர்ச்சியை தரலாம்.

+++++

கரும்பாம்பு கரும்பு விளை வயலின்னடுவே நகர்ந்து கொண்டிருந்தது. விவசாயி புற்களை வெட்டிக்கொண்டிருந்தான். புதர்போன்று பருமனான வளர்ந்திருந்த புற்களுக்கு நடுவே சுருண்டுபடுத்தது. அதே இடத்தில் சருகு, வாடிய தழைகள் என்று குப்பைகூடமாக இருந்ததால், ஒரு பாதுகாப்பான உணர்வுடன் பாம்பு இளைப்பாரிக்கொண்டிருந்தது. விவசாயியின் மண்வெட்டி புதரை நெருங்கியதும், தனது வேகத்தைக்கூட்ட, பாவம் ஒரு நொடியில், பாம்பு இரு துண்டுகளாக ஆனது. தலைப்பாகம் கொஞ்சம் அசைவதைப் பார்த்த விவசாயி, அதனை இன்னொரு வெட்டு வெட்டினான்.

என்னென்ன உணர்ச்சிகள் இந்த காட்சியில் பயன்படுத்தப்பட்டன? –
பாம்பு : களைப்பு, பாதுகாப்பு, சுகம், கவனமின்மை.
விவசாயி : சுறுசுறுப்பு, தன்னம்பிக்கை, கவனமின்மை, வன்முறை

கவனமின்மை இரு வரிசைகளிலும் வருகிறது. கவனமாய் இருப்பது யாருடைய பொறுப்பு? பெரும்சிக்கல் இல்லாத “தொடர்ந்து வாழ்தல்” என்ற எளிய இலக்கை மட்டுமே கொண்ட ஓர் உயிரினத்தினுடையதா? அல்லது தானே சிந்திக்கும் திறம் கொண்ட, சுற்றுபுறத்தை திட்டமிட்ட நடவடிக்கை மூலம் ஓரளவு கட்டியாள தெரிந்த உயிரினத்தினுடையதா?

நிலத்தை சரி செய்து கொண்டிருந்த விவசாயி, "பாம்பு இருக்கலாம், எனவே கவனத்துடன் பாம்பைக்கொல்லாமல், தன் வேலையை செய்ய வேண்டும்" என்ற எண்ணம் கொண்டவனாக இருப்பது அவசியமா? அல்லது "தெரியாத்தனமாக படுத்திருக்கும் பாம்பை மிதித்து விடுவேன் எனவே கவனத்துடன் வேலை செய்து, பாம்பைக்கண்டால், அதை வெட்டி எரிந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்"? என்று இருப்பது அவசியமா?

+++++

அதே விவசாயி அதே நிலத்தில் சிலகாலம் கழித்து உழுதுகொண்டிருந்தான். அவன் மனைவியும், இரு வயதே ஆன மகனும் கூட வயலுக்கு வந்திருந்தார்கள். மதியவுணவு உண்டபிறகு, விவசாயி உழுவதை தொடர்ந்தான். நிலத்துக்கு நடுவில் இருந்த மரத்தின் நிழலில், அவன் மனைவி மரத்தில் சாய்ந்து
உட்கார்ந்தபடியே உறங்கலானாள். பக்கத்திலேயே, விரிக்கப்பட்ட துண்டில் மகன் உறங்கிக்கொண்டிருந்தான். ஒரு பாம்பொன்று, குழந்தையின் காலுக்கு மிக அருகே ஊர்ந்துகொண்டிருந்தது. சடக்கென்று கண் விழித்த தாய் பாம்பை நோக்க, கையில் வைத்த தடியை வைத்து அடிக்க முயற்சிக்க, அது சரியாக பாம்பின் மேல் படவில்லை. பாம்பு அவ்விடத்திலிருந்து அகலுவதற்கு முன் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையின் காலை கொத்திவிட்டுபோனது.

இந்த நிகழ்வை நோக்குமிடத்து, தாயின் தாய்ப்பாசம் மேலிட, பிழையான குறியுடன் குச்சி எரிந்து, பாம்பின் தற்காப்பு உணர்வை எழுப்பி, குழந்தையை கொத்தவைத்தது என்று கருத இடமுள்ளதல்லவா?.

+++++

சரியான வைத்தியம் சமயத்தில் கிட்டாததால், விவசாயியின் மகன் இறந்து போனான். மகன் இறந்த துயரத்தில், விவசாயி, விவசாயத்திலிருந்து கொஞ்ச காலம் விலகியிருந்தான். கிட்டத்தட்ட ஒரு வருடம், நிலத்தில் எதுவும் பயிரிடவில்லை. நிலம் கவனிப்பாரற்று, புற்களும் புதர்களும் பெருகின. பக்கத்து நிலத்தின் உரிமையாளன், விவசாயியை அணுகி "நீயோ பயிர் எதுவும் பண்ணவில்லை…உன் நிலத்தை எனக்கு விற்றுவிடேன்" என்று சொல்லவும், உறக்கத்திலிருந்து விழிப்பவன் போல "இல்லை…இல்லை…அது என் நிலம்…இந்த முறை பயிரிடலாமேன்றிருக்கிறேன்" என்று சொன்னான். விரைவிலேயே, சில குடியானவர்களை கூட்டிக்கொண்டு, தானும் நிலத்தில் மண்டிக்கிடந்த புதர்களை விலக்கி சீர் செய்ய வந்தான். நிலத்தை உழுவதர்க்கேற்றவாறு, தயார் செய்து முடித்தபோது, ஏறத்தாழ ஐம்பது பாம்புகள் இறந்திருந்தன.

உணர்ச்சி என்பது ஒற்றை உயிரினம் என்ற அலகில் நோக்கும்போது அளக்கத்தக்கதாய், அறவரைமுறைக்கு உட்பட்டதாய் இருக்கவேண்டும் என்ற கட்டாயப்போக்கு பொதுவாக நிலவிவருகிறது. அதுவே ஓர் உயிரினத்தொகுதி என்ற அலகில் நோக்கும்போது, இன்னொரு வலிய உயிரினத்தின் முன்னேற்றம் என்ற அளவுகோலில் அடங்கிப்போகிறது.

+++++

மூன்று வருடங்களுக்கு பிறகு விவசாயி அந்த நிலத்தை அடுத்த நில உரிமையாளனுக்கு விற்றான். நகரத்தில் இருக்கும் தன் அண்ணன் தொடங்கிய பட்டறையில் போய் வேலை செய்யப்போவதாகவும், மகளை நல்ல கல்லூரியில் சேர்க்க நகரவாசம் உதவும் என்றும், மகனின் நினைவுகளை மறக்க கிராமத்தை விட்டு விலகியிருப்பது உதவும் என்றும் தன நண்பர்களிடம் சொல்லிக்கொண்டான்.

விவசாயியிடம் நிலத்தை வாங்கியவரிடம் சிலர் வம்பு பேசினார்கள் – "மூன்று வருஷமாகவே, அவன் நிலத்தில் மகசூல் ரொம்ப கம்மி. எலித்தொல்லை மற்றும் பிற கொறிக்கும் பிராணிகளின் தொல்லை அதிகமாகவே ஆயிட்டுது. கெமிகல்ஸ் அது இதுன்னு யூஸ் பண்ணிப்பார்த்தான்யா..ஒண்ணும் முடியலே…"

"அதுக்கென்ன, நம்ம கிட்ட கோயம்புத்தூர் அக்ரிகல்ச்சர் யுனிவர்சிட்டி-ல படிச்ச மேனேஜர் இருக்காரே…கவலை எதுக்கு"

+++++

விவசாயியின் குடும்பம் ஊரை அடுத்த கோயிலுக்கு வெளியே இருந்த பாம்புபுற்றுக்கு பால் வைத்து படையல் செய்துவிட்டே கிளம்பிப்போனது.

+++++

ஏது

அவள் வரவில்லை. இன்னும் வரவேயில்லை.

3.30இலிருந்து ஆளரவமற்ற நெடுஞ்சாலையின் ஒரத்தில் விஜய் எழிலரசிக்காக காத்துக்கொண்டிருந்தான். கையோடு கொண்டுவந்திருந்த இருபெட்டிகளையும் தரையில் வைத்து, அதன்மேல் லேசாக உடலின் பளு அதிகம் தராமல் உட்கார்ந்திருந்தான். பதற்றம் கலந்த மனநிலையிலேயே ஏறத்தாழ மூன்று மணிநேரம் கழிந்து விட்டதால், பதற்றத்தின் தீவிரம் குறைந்திருந்தது. கோபம் அதிகரித்திருந்தது.

யார் மேல் கோபம்? எழிலரசிமீதா? தன்னுடைய தெளிவில்லாத அணுகுமுறைமீதா? அவசர புத்தியுடன், திரைபட கதாநாயகன் போல எழிலரசியுடன் திருட்டுத்தனமாக ஓடிப்போய் வேறூரில் திருமணம் செய்ய எடுத்த முடிவின்மீதா? எதன் மீது? ஒரே மனித இனமாக இருந்தும், சமூக வேறுபாடுகளை நொடிக்கொருதரம் உருவாக்கி, மேலும் மேலும் பிளவுபட்டுவரும் இந்த மனித சமூகம்மீதா?

+++++

எழிலரசியின் தந்தையார் – மாணிக்கம் – ஓர் உள்ளூர் அரசியல்வாதி. ஊருக்கு பல நல்ல செயல்களை செய்து நல்லபேர் எடுத்திருந்தாலும், சாதிவுணர்வுள்ளவர் என்ற அடையாளம் அவருக்கு அமைந்திருந்தது. தம்முடைய சாதிச்சங்க நிகழ்வுகளில் அடிக்கடி தலைமை தாங்குவதாலோ என்னவோ? எழிலரசி சொல்லுவாள் : “அப்பாவைப்பற்றி இப்படி ஓர் பேர் வந்தது எப்படின்னு எனக்கே தெரியலை..மாமாவின் தொந்தரவால்தான் அவர் சாதிச்சங்க கூட்டங்களுக்கே போறார்” உடனே விஜய் “உங்க மாமாவின் ஆலோசனையில்தான் ஜாதிப்பெருமையை காப்பாத்த, பயமுறுத்தும் மீசையை வளர்த்தாரோ?” அதற்கு எழிலரசி “நீயும் உன் கண்றாவி ஜோக்கும்” என்று செல்லமாக கடிந்துகொள்வாள்.

+++++

விஜய் காத்துக்கிடந்த இடத்திலிருந்து பத்தடி தூரத்தில் ஒரே ஓர் அறை கொண்ட வீடு இருந்தது. சைக்கிளில் வந்திறங்கிய ஒருவர், வீட்டைத்திறந்து விளக்கை போட்டார். அது ஒரு தேநீர்க்கடை. தேநீர்க்கடைக்காரர் சற்று தூரத்தில் தனியாக நின்று கொண்டிருந்த விஜய்-யை பார்த்தார். விஜய்-க்கு அவர் தன்னை சந்தேகத்துடன் நோக்குகிறாரோ என்று பட்டது. “என்னப்பா தனியா நிக்கறே..ரெண்டு பெட்டி வேறே…என்ன திருடினதா?” என்று ஏதாவது கேட்பாரோ? அப்படி எதுவும் கேட்கவில்லை. அடுப்பை பற்ற வைப்பதுவும், கடையை துடைப்பத்தால் பெருக்குவதுமாக வேலையாய் இருந்தார்.

+++++

எழிலரசியுடன் இரண்டு வருடமாய்ப் பழக்கம். தன்னுடைய அப்பா விஜய்-யை மாப்பிள்ளையாக ஏற்றுகொள்ளமாட்டார் என்று எழிலரசி நம்பினாள். சில மாதங்களாகவே ஓடிப்போய் திருமணம் செய்யும் திட்டத்தை ப்ரஸ்தாபித்து வந்தாள். அவள் முதன்முதல் இதைப் பற்றி பேசும்போது, விஜய்-க்கு ஒரு விதமான அச்சமே தோன்றியது. “கொஞ்சம் பொறு..நான் என் அப்பாவிடம் பேசிப்பார்க்கிறேன்” என்று பொய்யான நம்பிக்கை தந்தான். நாட்கள் போகப்போக எழிலரசி பொறுமை இழக்கலானாள். வீட்டை விட்டு ஓடிப்போகும் எண்ணம் மேலும் வலுத்தது.

பல சமயம் விஜய் குழம்பினான். என்ன செய்வது என்ற தெளிவின்மையின் காரணத்தால், “உனக்கு பொறுமையே கிடையாதா?” என்று அவளிடம் சினந்து கொண்டான். எழிலரசி அதற்கு “எனக்கு பொறுமை இல்லை. உனக்கு தைரியம் இல்லை” என்று திடமாக பதிலளித்தாள். தான் தைரியமானவன் என்று இவளுக்கு காட்டுகிறென் என்று தனக்குள் கறுவிக்கொண்டான்.

நெருங்கிய நண்பன் சகாதேவனிடம் பேசியபோது மீண்டும் குழப்பம் அவனுள் திரும்பி வந்தது. “நீ உன் அப்பாவிடம் பேசவில்லை. அவளும் தன் அப்பாவிடம் பேசவில்லை. இரு பெற்றோர்களின் சம்மதம் கிட்டாது என்று நீங்களே எப்படி கருதிக்கொள்ளலாம். பயத்தை ஒதுக்கிவைத்து, தெளிவுடன், உறுதியுடன் பெற்றொர்களிடம் பேசினால் எல்லாம் நல்லபடியாக நிறைவேறும்” சகாதேவனின் ஆலோசனையை கேட்கும்பொது வெறுமனே தலையாட்டினான். குழப்பம் நிறைந்த சிந்தனை, தன் தைரியத்தை எழிலரசியிடம் நிரூபிக்கும் ஆசை – இவைகளின் கலவையால் எழிலரசியின் திட்டத்திற்கு பச்சைக்கொடி காட்டினான்.

+++++

ஊருக்குள் யாருக்கும் ஐயம் எழாதபடி இருவரும் தனித்தனியாகவே, நகர எல்லையை அடுத்த நெடுஞ்சாலையில் சந்திப்பதாய் எற்பாடு. எழிலரசி விடிகாலம் 4.00 மணிக்குள் வந்து விடவேண்டும். இரவு 12 மணிக்கு விஜய் எழிலரசியின் கைதொலைபேசிக்கு “நான் கிளம்பிவிட்டேன்” என்று ஒரு குறுந்தகவல் அனுப்ப வேண்டும். “எல்லாம் திட்டப்படி ; ஒரு மாற்றமும் இல்லை” என்பதுதான் அந்த குறுந்தகவலின் உள்ளர்த்தம். இருவரும் ஒருவருக்கொருவர் கைதொலைபேசியில் நெடுஞ்சாலையில் 4.00 மணிக்கு சந்திக்கும் வரை பேசிக்கொள்ளக்கூடாது. “எனக்கு தைரியமில்லை என்றா சொல்லுகிறாய்..என்ன கச்சிதமாக திட்டமிட்டிருக்கிறேன் பார்!” என்ற பீடிகையோடு மேற்சொன்ன வழிகாட்டல்களை எழிலரசியிடம் அடுக்கினான். அவளும் ஆமோதித்தாள்.

+++++

இன்னொரு நண்பன் கண்ணனோ “இது என்னடா, அந்த இருபது வயதுப்பொண்ணு அவ வீட்டை விட்டு வருவான்னு நம்பி, நீ ஹைவே-ல நடுநிசி-ல போய் நிக்கப்போறியா..நல்லா முட்டாளாகப்போறே” என்று எள்ளி நகையாடினான்.

கண்ணனின் நக்கல் கலந்த தொனி விஜய்க்கு சுத்தமாக பிடிக்கவில்லை. “டேய் கண்ணா, நான் உன்னிடம் ஆலோசனை கேட்டேனா? நானும் எழிலரசியும் எடுத்த முடிவைப் பற்றி தெரிவித்தேன்…அவ்வளவுதான்” – விஜய்-யின் பதிலடி.

+++++

6.00 மணிக்குப்பிறகு மூன்றுமுறை எழிலரசியின் கைதொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றான். அவளுடைய தொலைபேசி அணைந்து கிடந்தது.

“கண்ணனுக்கு கரி நாக்கு! அவன் சொன்னது உன்மையாகி விட்டதே! ஹும்..நான் எழிலரசி-யை நம்பியது என் தவறு. அவள் என்னை விட ஐந்து வருடம் சின்னவள். அவள் சொன்னாளென்று நான் இந்தக்காரியத்தில் இறங்கினேனே! இன்நேரம் என் அண்ணனுக்கும், அப்பாவுக்கும் நான் வீடடை விட்டு வெளியெறியது தெரிந்துவிட்டிருக்கும்!”

அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றி விஜய்-யால் யோசிக்க முடியவில்லை. வெட்கம்,கோபம்,அவமானம் என்று உணர்ச்சிகளின் குவியல்!

+++++

தேனீர்க்கடைக்காரர் முதல் தேனீரை கடவுளுக்குப் படைக்கும் உணர்வுடன் சாலையில் கொட்டிக்கொண்டிருந்தார். சாலையின் எதிர்புறத்தில் சட்டை போடாத உடம்புடன், தரையில் குந்தவைத்து உட்கார்ந்துகொண்டிருந்த ஒரு பிச்சைக்காரன், சாலையில் சின்ன நீரொடைபோல் ஒடும் தேனீரை ஏக்கமாக பார்த்தான்.

“என்ன தம்பி, திருச்சிக்குபோக வண்டிக்காக காத்துக்கிட்டிருக்கீங்களா? கவர்ன்மெண்டு பஸ் ஏதும் நம்ம கடை கிட்ட நிக்காதுங்களே. ஏழுமணிவாக்குல வரதராஜா பஸ் ட்ரான்ஸ்போர்ட் வண்டி வந்து நம்ம கடைல நிக்கும். அந்த பஸ் டிரைவர் நம்ம கடையிலதான் டீ குடிக்க பிரியப்படுவாரு. நீங்க அந்த பஸ்-சுலயே போயிரலாம்” அவரே கேள்வி கேட்டு அவரே பதிலும் சொல்லிக்கொண்டிருந்தார்.

+++++

வரதராஜா பஸ் ட்ரான்ஸ்போர்ட் வண்டியிலிருந்து விஜய்-யின் அண்ணன் இறங்கினான். அண்ணனைப்பார்த்த விஜய், தலையை குனிந்து கொண்டான். “என்னடா பண்ணிட்ட..எங்கிட்ட பேசியிருக்கக்கூடாதா?” விஜய் ஒன்றும் பேசவில்லை. அண்ணனின் முகத்தை நோக்கும் தைரியத்தை ஒரளவு வரவழைத்துக்கொண்டு பார்க்கையில், விஜய்-யின் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்தது. அண்ணன் தனது கைச்சட்டைப்பையிலிருந்து மடித்த ஒரு காகிதத்தை எடுத்து விஜய்-யிடம் கொடுத்தான். “எழிலரசியின் சித்தப்பாமகன் ஒருவன் இதைக் கொண்டு வந்து கொடுத்தான்”

+++++

விஜய்,

இன்று என்னால் வீட்டை விட்டு கிளம்ப முடியாத சூழ்னிலை. என்ன நடந்தது என்று நீ அறிந்தால் உனது தலை சுழல ஆரம்பிதுவிடும். என் அக்கா – பூவரசி – சாயபு தெருவில் வசிக்கும் இஸ்மயில் பாயின் மகன் அர்ஷத்-தை காதலித்து வந்திருக்கிறாள். அதை நேற்று மாலை வரை எனக்கே தெரிந்திருக்கவில்லை. நேற்று இரவு ஏழுமணிக்குமேல் பூவரசியைக் காணவில்லை. ஒன்பதரை மணிக்கு மேல்தான், பூவரசி எழுதிவைத்துவிட்டு போயிருந்த மூன்று வரிக்கடிதம் எங்களுக்கு கிடைத்தது.

அப்பா ரொம்ப ஆட்டம் கண்டுபோனார். செருப்பை எடுத்து தலையில் அடித்துக்கொண்டார். என்னையும் நாங்குமுறை முதுகில் அடித்தார். அக்காவின் சங்கதி எதுவும் எனக்கு தெரியாது என்று நான் சொன்னதை அவர் நம்பவில்லை. உன் குறுந்தகவல் வந்த நேரம் கைத்தொலைபேசியை என்னிடமிருந்து பிடுங்கி அப்பா தூக்கி எறிந்தார். கொஞ்ச நேரம் கழித்து கெரசீன்-ஐ என் மேலும், என் அம்மா மேலும் ஊற்றி, தன் மேலும் ஊற்றிக்கொண்டு தீக்குச்சியால் பற்ற வைக்க முயன்றார். நல்லவேளை, மாமா நடுவில் புகுந்து அப்பாவிடமிருந்து தீக்குச்சியை பிடுங்கிக்கொண்டார்.

அப்பா ஒரளவு அமைதியான பிறகு, மாமாவையும், சித்தப்பாவையும், சில சாதிசங்க உறுப்பினர்களையும் அழைத்துக்கொண்டு சாயபு தெருவுக்கு போயிருக்கிறார். அங்கு என்ன ஆகும் என்று தெரியவில்லை.

விஜய், நம்ம திட்டத்தை இப்போதைக்கு கைவிடுவதே நல்லது என்று நினைக்கிறேன். கொஞ்சம் பொறுத்திருந்து என்ன ஆகிறது என்று பார்ப்போம். நான் வராமல் போனதில் நீ கோபமாகியிருக்கக்கூடும். என் வீட்டு நிலைமையை புரிந்து கொண்டு, என்னை மன்னித்துவிடு. உன் அண்ணாவையும் அப்பாவையும் எப்படியாவது சமாளித்துக்கொள்.

என்றென்றும்

உன் எழிலரசி

+++++

சில பல மாதங்களுக்குப்பிறகு விஜய்-யும் எழிலரசியும் கணவன்-மனைவியாக வரதராஜா பஸ் ட்ரான்ஸ்போர்ட் பஸ் நின்ற தேனீர்க்கடைக்கு தேனீர் குடிக்க வந்தார்கள்.

விஜய்”கண்ணன் சொன்னதுபோல அன்று நீ என்னை ஏமாற்றி வராமலே போனாய், எழிலரசி” என்று தன் மனைவியை வம்புக்கிழுத்தான்.

எழிலரசி புன்னகைத்துக்கொண்டே “நான் ஏமாற்றவில்லை : சகாதேவன் சொன்ன வழியில் போவதே சரியென்று நினைத்தேன்” என்று சொன்னாள்.

“ஹாஹா…அது சரி”

+++++

விஜய்-யின் அப்பாவும் அண்ணனும் மாணிக்கத்திடம் சம்பந்தம் பேசச்சென்றிருந்தபோது, பூவரசி என்கிற சலீமாவும் தன் பிறந்தகம் வந்திருந்தாள். மாணிக்கம் ஒரு வார்த்தைகூட தன் மூத்தமகளிடம் பேசாததை இருவரும் கவனிக்க நேர்ந்தது. தாங்கள் வந்த நோக்கத்தை பக்குவமாக எடுத்துரைத்தார்கள். மாணிக்கம் சம்மதத்தை தெரிவிக்க ரொம்பநேரம் எடுக்கவில்லை.

+++++